மகிமையை அணிந்தவர்
93 1 எங்கள் பிதா ராஜ்யபாரம் செய்கிறார்; அவர் மகிமையை அணிந்திருக்கிறார். எங்கள் பிதா வஸ்திரம் தரித்திருக்கிறார்; பெலனைத் தமக்கு இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார். ஆம், பூலோகம் அசையாதபடி உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது; அது ஒருபோதும் அசைக்கப்படாது. 2 உம்முடைய சிங்காசனம் பூர்வகாலமுதல் நிலைநிற்கிறது; நீர் அநாதியாய் இருக்கிறீர். 3 வெள்ளங்கள் எழும்பியது, எங்கள் பிதாவே; வெள்ளங்கள் தங்கள் சத்தத்தை உயர்த்தின; வெள்ளங்கள் தங்கள் மோதுகிற அலைகளை உயர்த்துகின்றன. 4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் மோதுகிற அலைகளைப்பார்க்கிலும், உன்னதத்திலிருக்கிற எங்கள் பிதா வல்லமையுள்ளவர். 5 உம்முடைய சாட்சிகள் மிகவும் உறுதியானவைகள்; பரிசுத்தம் உம்முடைய ஆலயத்தை என்றென்றைக்கும் அலங்கரிக்கிறது, எங்கள் பிதாவே.