உம்மேல் நிலைத்த கண்கள்
தாவீதின் சங்கீதம்.
141 1 என் பிதாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சீக்கிரமாய் என்னிடத்தில் வாரும். நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது என் சத்தத்திற்குச் செவிகொடும்.
2 என் ஜெபம் உமக்கு முன்பாகத் தூபமாக எழும்புவதாக; என் கைகளை உயர்த்துதல் மாலைப் பலியைப் போலிருப்பதாக.
3 என் பிதாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 4 என் இருதயம் எந்தத் தீமையின் பக்கமாகவும் சாயவிடாதேயும்; பொல்லாத செயல்களில் அக்கிரமஞ்செய்கிறவர்களோடு சேராதபடிக்கும், அவர்களுடைய ருசிகரமான உணவுகளை நான் புசிக்காதபடிக்கும் காத்தருளும்.
5 நீதிமான் என்னை அடிக்கட்டும்— அது தயவு; அவன் என்னைக் கடிந்துகொள்ளட்டும்—அது என் தலைக்கு எண்ணெய்; என் தலை அதை மறுக்காது . ஆயினும் பொல்லாதவர்களின் செயல்களுக்கு விரோதமாய் என் ஜெபம் எப்போதும் இருக்கும்.
6 அவர்களுடைய அதிபதிகள் கன்மலை உச்சியிலிருந்து கீழே தள்ளப்படும்போது, அப்பொழுது ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேட்பார்கள், ஏனெனில் அவை இனிமையானவை. 7 ஒருவன் நிலத்தை உழுது பிளந்துபோடுகிறதுபோல, அப்படியே எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாயிலில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
8 ஆனாலும் என் கண்கள் நிலைத்திருக்கிறது உம்மேல், என் ஆண்டவராகிய பிதாவே; உம்மையே அடைக்கலமாகக் கொள்ளுகிறேன்— என்னைப் பாதுகாப்பற்றவனாக விட்டுவிடாதேயும். 9 அவர்கள் எனக்காக வைத்திருக்கிற கண்ணிக்கும், அக்கிரமஞ்செய்கிறவர்களின் வலைகளுக்கும் என்னைக் காப்பாற்றும். 10 பொல்லாதவர்கள் தங்கள் சொந்த வலைகளில் விழட்டும், நானோ தனித்து பத்திரமாய்க் கடந்துபோவேன்.