சர்வ சிருஷ்டியும் அவரைத் துதிக்கக்கடவது
148 1 அல்லேலூயா! வானங்களிலிருந்து எங்கள் பிதாவைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் எல்லாரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் எல்லாரும் அவரைத் துதியுங்கள். 3 சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; பிரகாசிக்கும் எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். 4 மகா உன்னதமான வானங்களே, அவரைத் துதியுங்கள், வானங்களுக்கு மேலான ஜலங்களே, அவரைத் துதியுங்கள். 5 அவைகள் எங்கள் பிதாவின் நாமத்தைத் துதிக்கக்கடவது, ஏனெனில் அவர் கட்டளையிட, அவைகள் சிருஷ்டிக்கப்பட்டன. 6 அவர் அவைகளை என்றென்றைக்கும் நிலைநிறுத்தினார்; ஒழிந்துபோகாத ஒரு கட்டளையை அவர் கொடுத்தார்.
7 பூமியிலிருந்து எங்கள் பிதாவைத் துதியுங்கள், கடல் ஜந்துக்களே, எல்லா ஆழங்களே, 8 அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவருடைய வார்த்தையை நிறைவேற்றும் புசல்காற்றே, 9 மலைகளே, எல்லா குன்றுகளே, கனிதரும் மரங்களே, எல்லா கேதுரு மரங்களே, 10 காட்டு மிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, பறக்கும் பட்சிகளே, 11 பூமியின் ராஜாக்களே, எல்லா ஜனங்களே, பிரபுக்களே, பூமியின் எல்லா அதிபதிகளே, 12 வாலிபரே, கன்னிகைகளே, முதியோரே, பிள்ளைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
13 அவைகள் எங்கள் பிதாவின் நாமத்தைத் துதிக்கக்கடவது, ஏனெனில் அவருடைய நாமம் மாத்திரமே உன்னதமானது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 14 அவர் தம்முடைய ஜனத்திற்கு வல்லமையை உயர்த்தினார், தம்முடைய பக்தர்கள் அனைவருக்கும் துதியை, தமக்கு அண்மையிலிருக்கும் இஸ்ரவேல் ஜனத்திற்கே துதியை உயர்த்தினார். அல்லேலூயா!