புழுதியிலிருந்து பிரபுக்களின் பந்திவரை
113 1 அல்லேலூயா! எங்கள் பிதாவின் ஊழியக்காரரே, அவரைத் துதியுங்கள்; எங்கள் பிதாவின் நாமத்தைத் துதியுங்கள். 2 எங்கள் பிதாவின் நாமம் இதுமுதல் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 3 சூரியன் உதிக்கிற திசைதொடங்கி அது அஸ்தமிக்கிற திசைமட்டும் எங்கள் பிதாவின் நாமம் துதிக்கப்படத்தக்கது. 4 எங்கள் பிதா சகல ஜாதிகளுக்கும் மேலாக உயர்ந்திருக்கிறார், அவருடைய மகிமை வானங்களுக்கும் மேலாக இருக்கிறது. 5 உன்னதத்தில் வீற்றிருக்கிற எங்கள் பிதாவுக்கு ஒப்பானவர் யார்? 6 வானத்தையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்திக் குனிகிறாரே? 7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைச் சாம்பல் மேட்டிலிருந்து உயர்த்துகிறார், 8 அவர்களைப் பிரபுக்களோடும், தம்முடைய ஜனத்தின் பிரபுக்களோடும் உட்காரவைக்கிறார். 9 மலடியை அவளுடைய வீட்டில் குடியிருக்கச்செய்கிறார், பிள்ளைகளைப் பெற்ற மகிழ்ச்சியுள்ள தாயாக்குகிறார். அல்லேலூயா!