இஸ்ரவேல் எகிப்திலிருந்து புறப்படுதல்
114 1 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, யாக்கோபின் வம்சத்தார் அந்நியபாஷைக்காரராகிய ஜனத்தினின்றும் புறப்பட்டபோது, 2 யூதா எங்கள் பிதாவின் பரிசுத்த ஸ்தலமாயிற்று, இஸ்ரவேல் அவருடைய ராஜ்யமுமாயிற்று.
3 சமுத்திரம் அதைக் கண்டு ஓடிப்போயிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பிற்று. 4 பர்வதங்கள் ஆட்டுக்கடாக்களைப்போல் துள்ளின, குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போல் துள்ளின.
5 சமுத்திரமே, நீ ஓடிப்போனது ஏன்? யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்பினது ஏன்? 6 பர்வதங்களே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போல் துள்ளினது ஏன்? குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போல் துள்ளினது ஏன்?
7 பூமியே, சர்வாதிபதியாகிய பிதாவின் சமுகத்தில் நடுங்கு, யாக்கோபின் எங்கள் பிதாவின் சமுகத்தில் நடுங்கு, 8 அவர் கன்மலையைத் தடாகமாக மாற்றினார், தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையைப் பாய்கிற நீரூற்றாகவும் மாற்றினார்.