பாட்டு. தாவீதின் சங்கீதம்.
108 1 என் இருதயம் உறுதியாயிருக்கிறது, என் பிதாவே; நான் பாடி, என் முழு உள்ளத்தோடும் கீதவாத்தியம் இசைப்பேன். 2 வீணையே, சுரமண்டலமே, விழித்தெழுங்கள்! நான் அருணோதயத்தை விழிக்கச்செய்வேன். 3 என் பிதாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உமக்குக் கீதவாத்தியம் இசைப்பேன். 4 ஏனெனில் உம்முடைய உடன்படிக்கை அன்பு பெரிது, வானங்களைவிட உயர்ந்தது, உம்முடைய உண்மை ஆகாயமட்டும் எட்டுகிறது.
5 என் பிதாவே, வானங்களுக்கு மேலாக நீர் உயர்ந்திரும், உம்முடைய மகிமை பூமியனைத்தின்மேலும் இருப்பதாக. 6 உம்முடைய வலதுகரத்தால் எங்களை இரட்சியும், நீர் நேசிக்கிறவர்கள் விடுவிக்கப்படும்படி எனக்கு மறுஉத்தரவு அருளும்.
7 எங்கள் பிதா தம்முடைய பரிசுத்தத்திலே பேசினார்: “வெற்றியோடே நான் சீகேமைப் பங்கிடுவேன், சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.” 8 கீலேயாத் என்னுடையது, மனாசே என்னுடையது; எப்பிராயீம் என் தலைச்சீராயும், யூதா என் செங்கோலாயும் இருக்கிறது.
9 மோவாப் நான் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிகிறேன்; பெலிஸ்தியாவின்மேல் வெற்றியோடே ஆர்ப்பரிக்கிறேன்.
10 அரணிப்பான நகரத்திற்கு என்னை யார் கொண்டுபோவார்? ஏதோம்வரைக்கும் என்னை யார் நடத்திச்செல்வார்? 11 எங்கள் பிதாவே, ஒருகாலத்தில் எங்களைத் தள்ளிவிட்டு, இப்போது எங்கள் சேனைகளோடே புறப்படாதிருக்கிற நீர் அல்லவோ? 12 சத்துருவுக்கு விரோதமாய் எங்களுக்கு உதவிசெய்யும், ஏனெனில் மனுஷனுடைய இரட்சிப்பு வீணானது. 13 எங்கள் பிதாவோடே நாங்கள் வெற்றிபெறுவோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.