பூமியனைத்திற்கும் ஒரு புதுப்பாட்டு
96 1 எங்கள் பிதாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியனைத்துமே, எங்கள் பிதாவைப் பாடுங்கள்.
2 எங்கள் பிதாவைப் பாடுங்கள், அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்; அவருடைய இரட்சிப்பை நாளுக்குநாள் அறிவியுங்கள். 3 அவருடைய மகிமையான செயல்களை ஜாதிகளுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள், அவருடைய அற்புதங்களை எல்லா ஜனங்களுக்குள்ளும் அறிவியுங்கள். 4 எங்கள் பிதா மகத்துவமுள்ளவர், துதிக்கு மிகவும் பாத்திரர்; எல்லா தேவர்களுக்கும் மேலாக அவருக்கே பயப்படவேண்டும். 5 ஜனங்களுடைய தேவர்களெல்லாம் விக்கிரகங்களே, எங்கள் பிதாவோ வானங்களை உண்டாக்கினார். 6 மேன்மையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கிறது; பெலனும் அழகும் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் உண்டு.
7 ஜனங்களின் வம்சங்களே, எங்கள் பிதாவுக்கே செலுத்துங்கள், எங்கள் பிதாவுக்கே மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள். 8 எங்கள் பிதாவுடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். 9 பரிசுத்தத்தின் அலங்காரத்தோடே எங்கள் பிதாவைத் தொழுதுகொள்ளுங்கள்; பூமியனைத்துமே, அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 10 ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்: “எங்கள் பிதா ராஜரிகம்பண்ணுகிறார்! பூலோகம் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது; அது ஒருபோதும் அசைக்கப்படாது. அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார்.”
11 வானங்கள் மகிழ்வதாக, பூமி களிகூருவதாக; சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. 12 வெளி களிகூருவதாக, அதிலுள்ள யாவும் மகிழ்வதாக; அப்பொழுது காட்டின் மரங்களெல்லாம் கெம்பீரமாய்ப் பாடும். 13 எங்கள் பிதாவுக்கு முன்பாகவே; ஏனெனில் அவர் வருகிறார், பூமியை நியாயந்தீர்க்க அவர் வருகிறார். அவர் உலகத்தை நீதியோடு நியாயந்தீர்ப்பார், ஜனங்களைத் தம்முடைய உண்மையின்படி நியாயந்தீர்ப்பார்.