கோராகின் புத்திரர்
பிரதான கானத்தலைவனுக்கு; கோராகின் புத்திரரின் சங்கீதம்.
85 1 எங்கள் பிதாவே, தேவரீர் உம்முடைய தேசத்திற்குத் தயவு காண்பித்தீர்; யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 2 உம்முடைய ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்தீர்; அவர்களுடைய பாவமெல்லாம் மூடினீர். சேலா. 3 உம்முடைய உக்கிரம் அனைத்தையும் விலக்கினீர்; உம்முடைய கோபாக்கினியைவிட்டுத் திரும்பினீர்.
4 எங்கள் பிதாவே, எங்கள் இரட்சிப்பே, எங்களைத் திரும்பச் சீர்படுத்தும்; எங்கள்மேலுள்ள உமது கோபத்தை நீக்கிவிடும். 5 என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடிக்கச் செய்வீரோ? 6 எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரோ? உம்முடைய ஜனம் உம்மில் மகிழும்படியாக? 7 எங்கள் பிதாவே, உம்முடைய உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பியும், உம்முடைய இரட்சிப்பை எங்களுக்குத் தந்தருளும்.
8 எங்கள் பிதா சொல்வதை நான் கேட்பேனாக; அவர் தம்முடைய ஜனத்துக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தைப் பேசுவார்; ஆனாலும் அவர்கள் தங்கள் மதிகேட்டான வழிகளுக்குத் திரும்பாதிருப்பார்களாக. 9 அவருக்குப் பயந்தவர்களுக்கு அவருடைய இரட்சிப்பு நிச்சயமாய் சமீபமாயிருக்கிறது, நமது தேசத்தில் மகிமை வாசம்பண்ணும்படியே. 10 உறுதியான அன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்தித்தன; நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தமிட்டன. 11 உண்மை பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே நோக்கிப் பார்க்கும். 12 ஆம், எங்கள் பிதா நன்மையானதைத் தந்தருளுவார், நமது தேசம் தன் விளைச்சலைத் தரும். 13 நீதி அவருக்கு முன்பாகச் செல்லும், அவருடைய அடிச்சுவடுகளுக்கு வழியை ஆயத்தம்பண்ணும்.