நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை
இசைக்குழுத் தலைவனுக்கு; மகலாத் என்னும் இராகத்தில் பாடுவதற்கு. தாவீதின் ஞானப் பாடல்.
53 1 மூடன் தன் இருதயத்தில், “தேவன் இல்லை” என்று சொல்லுகிறான். அவர்கள் கெட்டுப்போய், அருவருப்பான அநீதியைச் செய்கிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 எங்கள் பிதா வானத்திலிருந்து நோக்கிப் பார்த்தார், உணர்வுள்ளவன் எவனாவது உண்டோ, தம்மைத் தேடுகிறவன் எவனாவது உண்டோ என்று மனுக்குலம் அனைத்தையும் நோக்கிப் பார்த்தார். 3 அவர்கள் எல்லாரும் விலகிப்போனார்கள்; அனைவரும் ஒருமிக்கக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4 அப்பத்தை உண்பதுபோல் என் ஜனத்தை விழுங்குகிற அக்கிரமக்காரருக்கு அறிவில்லையோ? அவர்கள் எங்கள் பிதாவைத் தொழுதுகொள்ளாமலும் இருக்கிறார்கள். 5 பயப்படுவதற்கு ஒன்றுமில்லாத இடத்தில், அவர்கள் மிகுந்த திகிலினால் அஞ்சினார்கள்; ஏனெனில் எங்கள் பிதா எலும்புகளை— உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை—சிதறடித்தார்; நீ அவர்களை வெட்கப்படுத்தினாய், ஏனெனில் எங்கள் பிதா அவர்களைப் புறக்கணித்தார்.
6 இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு சீயோனிலிருந்து வந்தால் எவ்வளவு நலம்! எங்கள் பிதா தம் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபு களிகூரட்டும், இஸ்ரவேல் மகிழட்டும்.