அவருடைய சந்நிதியில் தங்கத் தகுதியுள்ளவர் யார்?
தாவீதின் சங்கீதம்.
15 1 பிதாவே, உம்முடைய கூடாரத்தில் தங்கத்தக்கவன் யார்? உம்முடைய பரிசுத்த மலையில் வாசம்பண்ணத்தக்கவன் யார்? 2 உத்தமமாய் நடக்கிறவனே, நீதியைச் செய்து, தன் இருதயத்தில் உண்மையைப் பேசுகிறவனே. 3 அவன் தன் நாவினால் புறங்கூறான், தன் அயலானுக்குத் தீங்கு செய்யான், தன் சிநேகிதனுக்கு விரோதமாய் நிந்தை சொல்லான். 4 அவன் நீசனை அற்பமாய் எண்ணி, எங்கள் பிதாவுக்குப் பயந்து நடக்கிறவர்களைக் கனம்பண்ணுகிறான்; தனக்கு நஷ்டமாய் இருந்தாலும், தான் இட்ட ஆணையை மாற்றாமல் காக்கிறான். 5 அவன் தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்கான், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய் லஞ்சம் வாங்கான். இவைகளைச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.