கண்ணி உடைந்தது
ஆரோகணப் பாட்டு. தாவீதின் பாடல்.
124 1 எங்கள் பிதா நம்முடைய பட்சத்தில் இராதிருந்தால்—இஸ்ரவேல் இப்பொழுது இதைச் சொல்வதாக— 2 மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, எங்கள் பிதா நம்முடைய பட்சத்தில் இராதிருந்தால், 3 அப்பொழுது அவர்கள் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள், அவர்களுடைய கோபம் மூண்டெழும்பினபோது நமக்கு விரோதமாய்; 4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மை அடித்துக்கொண்டு போயிருக்கும், பெருவெள்ளம் நம்மேல் புரண்டிருக்கும்; 5 அப்பொழுது கொந்தளிக்கும் தண்ணீர்கள் நம்மேல் புரண்டிருக்கும்.
6 எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம், அவர் நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காதிருந்தார்! 7 வேடரின் கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நாம் தப்பினோம்; கண்ணி உடைந்தது, நாம் தப்பினோம்! 8 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின எங்கள் பிதாவின் நாமத்திலே நமக்கு உதவி உண்டு.