பிதாவின் ஒளியைத் தடுக்க முடியாது
4 1பின்பு என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து, நித்திரையிலிருந்து எழுப்பப்படுகிற ஒருவனைப்போல என்னை எழுப்பினான். 2அவன் என்னை நோக்கி, “நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு நான், “இதோ, முழுவதும் பொன்னாலாகிய ஒரு விளக்குத்தண்டையும், அதின் உச்சியில் ஒரு கிண்ணத்தையும், அதின்மேல் ஏழு அகல்களையும், அதின் உச்சியிலிருக்கிற ஒவ்வொரு அகலுக்கும் ஏழு குழாய்களையும் காண்கிறேன்.
3அதின் அருகில் இரண்டு ஒலிவமரங்கள் நிற்கின்றன; ஒன்று கிண்ணத்தின் வலதுபுறத்திலும், மற்றொன்று அதின் இடதுபுறத்திலும் இருக்கிறது” என்றேன்.
4அப்பொழுது நான் என்னோடே பேசின தூதனை நோக்கி, “என் ஆண்டவனே, இவைகள் என்ன?” என்று கேட்டேன்.
5என்னோடே பேசின தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக, “இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா?” என்றான். அதற்கு நான், “தெரியாது, என் ஆண்டவனே” என்றேன்.
6அப்பொழுது அவன் என்னை நோக்கி, “செருபாபேலுக்கு எங்கள் பிதா சொல்லுகிற வார்த்தை இதுவே: பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என் ஆவியினாலேயே ஆகும் என்று பரலோகச் சேனைகளின் பிதா சொல்லுகிறார். 7பெரிய மலையே, நீ யார்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய். ‘இதற்குக் கிருபை உண்டாவதாக, கிருபை உண்டாவதாக’ என்று ஆர்ப்பரிக்கையில், அவன் கடைக்கல்லை வெளியே கொண்டுவருவான்.”
8பின்பு எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் சொன்னது:
9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டது; அவனுடைய கைகளே அதை முடிக்கும். அப்பொழுது பரலோகச் சேனைகளின் பிதா என்னை உங்களிடத்தில் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 10சிறிய காரியங்களின் நாளை அசட்டைபண்ணினவன் யார்? செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது அவர்கள் சந்தோஷப்படுவார்கள். இந்த ஏழும் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிற எங்கள் பிதாவின் கண்களே.”
11அப்பொழுது நான் அவனை நோக்கி, “விளக்குத்தண்டின் வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்ன?” என்று கேட்டேன். 12நான் மறுபடியும், “பொன்னிற எண்ணெயைப் பீச்சுகிற இரண்டு பொன்குழாய்களண்டையில் இருக்கிற இந்த இரண்டு ஒலிவக்கிளைகள் என்ன?” என்று கேட்டேன்.
13அவன் என்னை நோக்கி, “இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா?” என்றான். அதற்கு நான், “தெரியாது, என் ஆண்டவனே” என்றேன்.
14அதற்கு அவன், “இவர்கள் சர்வபூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவரண்டையில் நிற்கிற அபிஷேகம்பண்ணப்பட்ட இரண்டுபேர்” என்றான்.