நகோமியின் திட்டம்
3 1அப்பொழுது அவளுடைய மாமியாராகிய நகோமி அவளை நோக்கி, "என் மகளே, உனக்கு நன்மையுண்டாகும்படி நான் உனக்கு ஒரு வீட்டைத் தேடாதிருப்பேனோ? 2நீ யாருடைய வேலைக்காரிகளோடே இருந்தாயோ, அந்த போவாஸ் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவில் களத்திலே வாற்கோதுமையைத் தூற்றுகிறான். 3ஆகையால் நீ குளித்து, நறுமணத் தைலம் பூசி, உன் போர்வையை அணிந்துகொண்டு, களத்திற்குப் போ; ஆனால் அந்த மனுஷன் புசித்துக் குடித்து முடியும்வரையில் அவனுக்கு உன்னைக் காட்டாதே. 4அவன் படுத்துக்கொள்ளும்போது, அவன் படுத்திருக்கும் இடத்தைக் கவனித்து, உள்ளேபோய், அவனுடைய கால்களை விலக்கி, அங்கே படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான்" என்றாள்.
5அதற்கு ரூத்: "நீர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன்" என்று அவளிடத்தில் சொன்னாள். 6அவள் களத்திற்குப் போய், தன் மாமியார் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தாள். 7போவாஸ் புசித்துக் குடித்து, அவனுடைய இருதயம் மகிழ்ந்தபின்பு, தானியக் குவியலின் ஓரத்தில் படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள் மெதுவாய் வந்து, அவன் கால்களை விலக்கி, அங்கே படுத்துக்கொண்டாள். 8நடுராத்திரியிலே அந்த மனுஷன் திடுக்கிட்டு, திரும்பிப் பார்த்தபோது, இதோ, ஒரு ஸ்திரீ தன் கால்களருகே படுத்திருந்தாள்! 9"நீ யார்?" என்று அவன் கேட்டான். அதற்கு அவள்: "நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் மீட்கும் உறவினராயிருக்கிறபடியால், உம்முடைய போர்வையின் ஓரத்தை உம்முடைய அடியாளின்மேல் விரியும்" என்றாள். a a v9 ஒருவருடைய போர்வையின் ஓரத்தை மற்றொருவர்மேல் விரிப்பது, விவாகத்தையும் பாதுகாப்பையும் வேண்டிக்கொள்ளும் கோரிக்கையாயிருந்தது.
10அதற்கு அவன்: "என் மகளே, நீ எங்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவள்; ஏழையானாலும் ஐசுவரியவானானாலும், வாலிபரை நீ பின்தொடராதிருந்தபடியால், உன்னுடைய இந்தக் கடைசி தயவு முந்தினதைப்பார்க்கிலும் உத்தமமாயிருக்கிறது. 11இப்போதும் என் மகளே, பயப்படாதே; நீ கேட்கிறதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன்; நீ குணசாலியான ஸ்திரீ என்று என் ஊராரெல்லாரும் அறிவார்கள். 12இப்போது நான் மீட்கும் உறவினன் என்பது மெய்தான்; ஆகிலும் என்னிலும் கிட்டின மீட்கும் உறவினன் ஒருவன் இருக்கிறான். 13இந்த இரவில் இங்கே தங்கியிரு; விடியற்காலத்தில் அவன் உன்னை மீட்க மனதாயிருந்தால், நல்லது, அவன் மீட்கட்டும்; உன்னை மீட்க அவனுக்கு மனதில்லாவிட்டால், எங்கள் பிதா ஜீவித்திருப்பது நிச்சயம்போல், நான் உன்னை மீட்பேன் என்பதும் நிச்சயம்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு" என்றான்.
14அப்படியே அவள் விடியற்காலமட்டும் அவன் கால்களருகே படுத்திருந்து, ஒருவரையொருவர் இன்னாரென்று அறிந்துகொள்ளத்தக்க வெளிச்சமாகுமுன்னே எழுந்திருந்தாள்; ஏனெனில், "ஒரு ஸ்திரீ களத்திற்கு வந்ததை ஒருவரும் அறியலாகாது" என்று அவன் சொல்லியிருந்தான். 15பின்பு அவன்: "நீ போர்த்திருக்கிற மேலாடையைக் கொண்டுவந்து பிடி" என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் ஆறுபடி வாற்கோதுமையை அளந்து, அவள்மேல் வைத்து, நகரத்திற்குள் போனான்.
16அவள் தன் மாமியாரிடத்தில் வந்தபோது, நகோமி: "என் மகளே, காரியம் எப்படி நடந்தது?" என்று கேட்டாள்; அப்பொழுது அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவள் அவளுக்கு அறிவித்து, 17"நீ உன் மாமியாரிடத்தில் வெறுங்கையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையையும் அவர் எனக்குக் கொடுத்தார்" என்றாள்.
18அதற்கு நகோமி: "என் மகளே, இந்தக் காரியம் எப்படி முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கே இந்தக் காரியத்தை முடிக்கும்வரையில் அமர்ந்திரான்" என்றாள்.