நட்சத்திரங்களைப் பிடித்திருக்கிறவர்
இயேசு நான்கு நிருபங்களைச் சொல்லி எழுதுவிக்கிறார். எபேசு கடினமாய் உழைக்கிறது, ஆனால் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டது. சிமிர்னா தரித்திரமாயிருக்கிறது, சிறையில் போடப்படப்போகிறது. பெர்கமு பிலேயாமின் போதகத்தைச் சகிக்கிறது, தியத்தீரா யேசபேலைச் சகிக்கிறது. ஒவ்வொரு குற்றமும் பெயர் சொல்லிக் காட்டப்படுகிறது; பின்பு நம்முடைய பிதாவின் பரதீசிலுள்ள ஜீவவிருட்சத்தின் வாக்குத்தத்தம்.
2 1“எபேசுவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுது: தமது வலதுகரத்தில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டு, ஏழு பொன் விளக்குத்தண்டுகளின் நடுவே உலாவுகிறவர் சொல்லுகிறதாவது:
2“உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கமாட்டாய் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்; அப்போஸ்தலர்கள் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய். 3நீ சகித்து, என் நாமத்தினிமித்தம் பொறுமையாயிருந்து, சோர்ந்துபோகவில்லை. 4ஆயினும், உனக்கு விரோதமாய் என்னிடத்தில் ஒரு குறை உண்டு; நீ ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பைவிட்டு விலகிவிட்டாய். 5ஆகையால், நீ எங்கிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனந்திரும்பி, முந்தின கிரியைகளைச் செய். இல்லாவிட்டால், நீ மனந்திரும்பாதபட்சத்தில், நான் உன்னிடத்தில் வந்து, உன் விளக்குத்தண்டை அதின் இடத்திலிருந்து நீக்கிப்போடுவேன். 6ஆனாலும், நிக்கொலாய் மதத்தாருடைய கிரியைகளை நீ வெறுக்கிறாய்; நானும் அவைகளை வெறுக்கிறேன்; இது உன்னிடத்தில் உண்டு. 7பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எங்கள் பிதாவின் பரதீசிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்.
முந்தினவரும் பிந்தினவரும்
8“சிமிர்னாவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுது: மரித்திருந்து பின்பு உயிரோடிருக்கிறவரும், முந்தினவரும் பிந்தினவருமாகிய அவர் சொல்லுகிறதாவது:
9“உன் உபத்திரவத்தையும், உன் தரித்திரத்தையும் நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் நீ ஐசுவரியவான்; யூதரல்லாதிருந்தும் தங்களை யூதர் என்று சொல்லுகிறவர்களுடைய தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்; அவர்கள் சாத்தானுடைய ஜெபஆலயமாயிருக்கிறார்கள். 10நீ படப்போகிற பாடுகளைக்குறித்துப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்படி பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடப்போகிறான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். 11பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படமாட்டான்.
இருபுறமும் கருக்குள்ள கூர்மையான பட்டயம்
12“பெர்கமுவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுது: இருபுறமும் கருக்குள்ள கூர்மையான பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது:
13“நீ வாசம்பண்ணுகிற இடத்தை நான் அறிந்திருக்கிறேன்; அங்கே சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிறது. ஆயினும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறாய்; சாத்தான் வாசம்பண்ணுகிற இடத்தில் என் உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா உங்களுக்குள்ளே கொலைசெய்யப்பட்ட நாட்களிலும், நீ என்னைப்பற்றும் விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. 14ஆயினும், சில குறைகள் உனக்கு விரோதமாய் என்னிடத்தில் உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் வேசித்தனம்பண்ணவும், இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக இடறல் வைக்கும்படி பாலாகுக்குப் போதித்த பிலேயாமுடைய போதகத்தைப் பிடித்திருக்கிறவர்கள் அங்கே சிலர் உண்டு. 15அப்படியே நிக்கொலாய் மதத்தாருடைய போதகத்தைப் பிடித்திருக்கிறவர்களும் உன்னிடத்தில் உண்டு. 16ஆகையால் மனந்திரும்பு; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன். 17பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, ஒரு வெள்ளைக் கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்ட புதிய நாமத்தையும் கொடுப்பேன்; அதைப் பெற்றுக்கொள்ளுகிறவனேயன்றி வேறொருவனும் அந்த நாமத்தை அறியான்.
அக்கினிச்சுவாலையைப்போன்ற கண்கள்
18“தியத்தீராவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுது: அக்கினிச்சுவாலையைப்போன்ற கண்களையும், பளபளப்பான வெண்கலம்போன்ற பாதங்களையும் உடையவரும், எங்கள் பிதாவின் குமாரனுமாகிய அவர் சொல்லுகிறதாவது:
19“உன் கிரியைகளையும், உன் அன்பையும், விசுவாசத்தையும், ஊழியத்தையும், உன் பொறுமையையும், நீ செய்த பிந்தின கிரியைகள் முந்தினவைகளிலும் அதிகமாயிருக்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன். 20ஆயினும், உனக்கு விரோதமாய் என்னிடத்தில் ஒரு குறை உண்டு; தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீ, என் ஊழியக்காரர்களுக்குப் போதித்து, வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களை வழிதப்பப்பண்ணுகிறதற்கு நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். 21அவள் மனந்திரும்பும்படி நான் அவளுக்குக் காலம் கொடுத்தேன்; ஆனாலும் தன் வேசித்தனத்தைவிட்டு மனந்திரும்ப அவளுக்கு மனதில்லை. 22இதோ, நான் அவளைப் படுக்கையிலே தள்ளுவேன்; அவளுடன் விபசாரம்பண்ணுகிறவர்கள் தங்கள் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவேன். 23அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று சபைகளெல்லாம் அறிந்துகொள்ளும்; உங்களில் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாக உங்களுக்குப் பலனளிப்பேன். 24தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று சொல்லப்படுகிறவைகளை அறியாமலும் இருக்கிற உங்களில் மற்றவர்களுக்கு நான் சொல்லுகிறதாவது: வேறொரு பாரத்தை உங்கள்மேல் நான் சுமத்தமாட்டேன். 25உங்களுக்கு உள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். 26ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு ஜாதிகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன்; 27நானும் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றுக்கொண்டதுபோலவே, அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; மண்பாண்டங்களைப்போல் அவர்களை நொறுக்கிப்போடுவான். 28விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். 29பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.”