மகா வேசி வெளிப்படுத்தப்படுகிறாள்
ஒரு தூதன் யோவானுக்கு, இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தால் வெறிகொண்டு, சிவப்பான ஒரு மிருகத்தின்மேல் ஏறியிருக்கிற, இரத்தாம்பரம் தரித்த ஒரு ஸ்திரீயைக் காண்பிக்கிறான். யோவான் மிகவும் ஆச்சரியப்படுகிறார்; தூதன் தலைகளையும் கொம்புகளையும் விளக்குகிறான். முடிவில் அந்த மிருகமும் அதின் ராஜாக்களும் அவளுக்கு விரோதமாகத் திரும்பி, அவளை அக்கினியால் சுட்டெரித்து, எங்கள் பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.
17 1ஏழு கலசங்களைப் பிடித்திருந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடே பேசி: “வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியின்மேல் வரும் நியாயத்தீர்ப்பை உனக்குக் காண்பிப்பேன். 2பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; அவளுடைய பாவத்தின் மதுவினால் பூமியின் மக்கள் வெறிகொண்டார்கள்” என்றான். 3அவன் என்னை ஆவிக்குள்ளாக ஒரு வனாந்தரத்திற்கு எடுத்துக்கொண்டுபோனான்; அங்கே ஒரு ஸ்திரீ தேவனை நிந்திக்கிற நாமங்களால் நிறைந்திருந்த சிவப்பான ஒரு மிருகத்தின்மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்; அந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. 4அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டு, தன் வேசித்தனத்தின் அருவருப்புகளாலும் அசுத்தங்களாலும் நிறைந்த ஒரு பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். 5அவளுடைய நெற்றியிலே, “மர்மம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியின் அருவருப்புகளுக்கும் தாய்” என்னும் ஒரு நாமம் எழுதப்பட்டிருந்தது.
6அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
7அப்பொழுது அந்தத் தூதன் என்னை நோக்கி: “ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயின் மர்மத்தையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள, அவளைச் சுமக்கிற மிருகத்தின் மர்மத்தையும் நான் உனக்குச் சொல்லுகிறேன். 8நீ கண்ட மிருகம் முன்னிருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, அழிவுக்குப் போகும். முன்னிருந்து, இப்பொழுது இல்லாமல், இனி வரப்போகிற அந்த மிருகத்தைக் காணும்போது, உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் தங்கள் பேர்கள் எழுதப்படாத பூமியின் குடிகள் ஆச்சரியப்படுவார்கள்.
9இதை அறியும்படி ஞானமுள்ள மனது வேண்டும்: அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகள்; அவைகள் ஏழு ராஜாக்களுமாம். 10இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றொருவன் இன்னும் வரவில்லை; அவன் வரும்போது, கொஞ்சக்காலம் மட்டும் தங்கவேண்டும். 11முன்னிருந்து இப்பொழுது இல்லாத மிருகமே எட்டாவதானவன்; அவனும் அந்த ஏழுபேரில் ஒருவனாயிருந்து, அழிவுக்குப் போகிறான். 12நீ கண்ட பத்துக் கொம்புகள் பத்து ராஜாக்கள்; இவர்கள் இன்னும் ராஜ்யத்தைப் பெறவில்லை; ஆனாலும் இவர்கள் மிருகத்தோடேகூட ராஜாக்கள்போல ஒருமணிநேரம் அதிகாரம் பெறுகிறார்கள். 13இவர்கள் ஒரே சிந்தையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.
14இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் இவர்களை ஜெயிப்பார்; ஏனெனில் அவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறார்; அவரோடேகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்” என்றான். 15பின்னும் அந்தத் தூதன் என்னை நோக்கி: “அந்த வேசி உட்கார்ந்திருக்க நீ கண்ட தண்ணீர்கள் ஜனங்களும், திரள்கூட்டங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமாம். 16நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவைகள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழாக்கவும் நிர்வாணமாக்கவும் பண்ணி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை அக்கினியினால் சுட்டெரித்துப்போடுவார்கள். 17ஏனெனில், தேவனுடைய வார்த்தைகள் நிறைவேறும்வரைக்கும், தமது சித்தத்தை நிறைவேற்றவும், ஒரே சிந்தையாய் ஒன்றித்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கவும், எங்கள் பிதா அவர்களுடைய இருதயங்களில் ஏவுதலை உண்டாக்கினார். a a v17 மிருகத்திற்குப் பணிசெய்யும் கலகக்கார ராஜாக்கள்கூட எங்கள் பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றுகிறார்கள். அவர் சரித்திரத்தை ஆட்டுக்குட்டியானவரின் வெற்றியை நோக்கி நடத்துகிறார். 18நீ கண்ட ஸ்திரீ பூமியின் ராஜாக்கள்மேல் ஆளுகைசெய்கிற மகா நகரமேயாம்” என்றான்.