ஏழு கடைசி வாதைகள்
மிருகத்தை மறுத்தவர்கள் பளிங்குக் கடலின் அருகே நின்று, மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடி, நம்முடைய பிதாவின் வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் என்கிறார்கள். ஏழு தூதர்கள் பிரகாசமான மெல்லிய வஸ்திரம் தரித்து ஏழு கலசங்களோடே புறப்படுகிறார்கள்; அவைகள் ஊற்றப்படும்வரை ஒருவனும் பிரவேசிக்கக்கூடாதபடி ஆலயம் புகையால் நிறைகிறது.
15 1பரலோகத்தில் பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளத்தைக் கண்டேன்: ஏழு கடைசி வாதைகளைப் பிடித்திருந்த ஏழு தூதர்கள்; ஏனெனில் அவைகளால் எங்கள் பிதாவின் கோபம் முடிவுற்றது.
2நெருப்புக் கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றைக் கண்டேன்; அந்த மிருகத்தையும், அதின் உருவத்தையும், அதின் நாமத்தின் இலக்கத்தையும் ஜெயித்தவர்கள் எங்கள் பிதாவினிடத்திலிருந்து பெற்ற சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அதின் அருகே நின்றார்கள். 3அவர்கள் எங்கள் பிதாவின் ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள சர்வாதிபதியாகிய பிதாவே! உம்முடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்! ஜாதிகளின் ராஜாவே, உம்முடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்! 4பிதாவே, யார் உமக்குப் பயந்து, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தாதிருப்பார்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; ஏனெனில் உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டன.”
5இதற்குப் பின்பு நான் பார்த்தேன், பரலோகத்தில் சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது. 6ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு, ஆலயத்திலிருந்து புறப்பட்டு வந்தார்கள்.
7அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற எங்கள் பிதாவின் கோபத்தால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. 8எங்கள் பிதாவின் மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகை ஆலயத்தை நிரப்பிற்று; ஏழு தூதர்களின் ஏழு வாதைகள் முடியும்வரைக்கும் ஒருவனும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.