உம்முடைய நாமம் எத்துணை மகிமையுள்ளது
பாட்டுத் தலைவனுக்கு: கித்தீத் என்னும் இசைமுறையில். தாவீதின் சங்கீதம்.
8 1 எங்கள் ஆண்டவராகிய பிதாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எத்துணை மகிமையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகிமையை வானங்களுக்கு மேலாக நிலைநிறுத்தியிருக்கிறீர். 2 குழந்தைகளுடையவும் பாலகுடிக்கும் பிள்ளைகளுடையவும் வாயினின்று உம்முடைய எதிரிகளினிமித்தம், சத்துருவையும் பழிவாங்குகிறவனையும் அமர்த்திப்போட, பெலனை உண்டாக்கினீர். 3 உம்முடைய விரல்களின் வேலையாகிய உம்முடைய வானங்களை நான் பார்க்கும்போது, நீர் ஏற்படுத்திவைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது, 4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்? மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்? a a v4 எபிரெயருக்கு எழுதினவர் இந்த வார்த்தைகளை இயேசுவுக்குப் பொருத்திக் காட்டுகிறார் — சிறிது காலம் தூதர்களைப் பார்க்கிலும் தாழ்த்தப்பட்டு, பின்பு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட மனுஷகுமாரனுக்கே (எபிரெயர் 2:6-9). 5 ஆயினும் அவரை நீர் தேவதூதர்களைப் பார்க்கிலும் சற்றே தாழ்த்தி, மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடிசூட்டினீர். 6 உம்முடைய கைகளின் கிரியைகளின்மேல் அவருக்கு ஆளுகையைத் தந்தீர்; சகலத்தையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்: 7 ஆடுகள், மாடுகள் யாவையும், வெளியின் மிருகங்களையும், 8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்வழிகளில் சஞ்சரிக்கிற யாவையும் கீழ்ப்படுத்தினீர். 9 எங்கள் ஆண்டவராகிய பிதாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எத்துணை மகிமையுள்ளதாயிருக்கிறது!