பாழாய்ப்போன எருசலேம்
ஆசாபின் சங்கீதம்.
79 1 எங்கள் பிதாவே, புறஜாதிகள் உம்முடைய சுதந்தரத்தில் படையெடுத்து வந்தார்கள்; உம்முடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்; எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
2 உம்முடைய ஊழியக்காரரின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உம்முடைய பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். 3 அவர்களுடைய இரத்தத்தைத் தண்ணீரைப்போல் ஊற்றினார்கள் எருசலேமைச் சுற்றிலும், அவர்களை அடக்கம்பண்ணுவார் ஒருவரும் இல்லாதிருந்தது. 4 எங்கள் அயலாருக்கு நிந்தையாய் ஆனோம்; எங்களைச் சுற்றி இருக்கிறவர்களால் பரியாசமும் இகழ்ச்சியும் அடைந்தோம்.
5 எதுவரைக்கும், எங்கள் பிதாவே? என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ? 6 புறஜாதிகள்மேல் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும், உம்மை அறியாதவர்கள்மேலும், ராஜ்யங்கள்மேலும், உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளாதவர்கள்மேலுமே. 7 அவர்கள் யாக்கோபை விழுங்கினார்களே, அவனுடைய வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்கள். 8 எங்களுக்கு விரோதமாய் நினையாதேயும், எங்கள் முன்னோர்களின் அக்கிரமங்களை; உம்முடைய தயவான இரக்கம் சீக்கிரமாய் எங்களைச் சந்திக்கட்டும்; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டோம்.
9 எங்களை இரட்சிக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமத்தின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்யும்; எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவர்த்திசெய்யும் உம்முடைய நாமத்தினிமித்தம். 10 “அவர்களுடைய தேவன் எங்கே?” என்று புறஜாதிகள் சொல்வானேன்? எங்கள் கண்களுக்கு முன்பாகப் புறஜாதிகளுக்குள்ளே அறியப்படுவதாக, உம்முடைய ஊழியக்காரரின் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக நீர் நீதிசெய்கிறீர் என்று. 11 கட்டப்பட்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வருவதாக; உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் சாவுக்கு நியமிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும்.
12 எங்கள் அயலாருக்குச் சரிக்கட்டும் ஆண்டவராகிய பிதாவே, அவர்கள் உம்மை நிந்தித்த நிந்தையை ஏழுமடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச் சரிக்கட்டும். 13 அப்பொழுது உம்முடைய ஜனமும், உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள், உம்மை என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்போம்; தலைமுறை தலைமுறையாக உம்முடைய துதியை அறிவிப்போம்.