அவருக்குப் புதிய பாட்டைப் பாடுங்கள்
33 1 நீதிமான்களே, எங்கள் பிதாவுக்குள் களிகூருங்கள்; செம்மையானவர்களுக்குத் துதி தகுதியானது. 2 சுரமண்டலத்தால் எங்கள் பிதாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையால் அவருக்குக் கீதம் பாடுங்கள். 3 அவருக்குப் புதிய பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த ஆரவாரத்தோடு திறம்பட வாசியுங்கள்.
4 எங்கள் பிதாவின் வார்த்தை செம்மையானது, அவருடைய செயல்கள் யாவும் உண்மையில் செய்யப்படுகின்றன. 5 அவர் நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; எங்கள் பிதாவின் உடன்படிக்கை அன்பினால் பூமி நிறைந்திருக்கிறது.
6 எங்கள் பிதாவின் வார்த்தையால் வானங்கள் உண்டாக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தால் அவற்றின் சர்வ சேனையும் உண்டாயின. 7 அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை குவியலைப்போலச் சேர்க்கிறார்; ஆழங்களைத் தம்முடைய களஞ்சியங்களில் வைக்கிறார். 8 பூமியனைத்தும் எங்கள் பிதாவுக்குப் பயப்படக்கடவது; உலகத்தின் குடிகளெல்லாம் அவருக்கு முன்பாகப் பயபக்தியாய் நிற்பார்களாக. 9 அவர் சொல்ல, அது உண்டாயிற்று; அவர் கட்டளையிட, அது நிலைநின்றது.
10 எங்கள் பிதா ஜாதிகளின் ஆலோசனையை வீணாக்குகிறார்; ஜனங்களின் திட்டங்களைப் பயனற்றதாக்குகிறார். 11 எங்கள் பிதாவின் ஆலோசனை என்றென்றைக்கும் நிலைநிற்கிறது, அவருடைய இருதயத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
12 எங்கள் பிதாவைத் தம் பிதாவாகக் கொண்ட ஜாதி பாக்கியமுள்ளது, அவர் தமக்குச் சொந்த சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள். 13 வானத்திலிருந்து எங்கள் பிதா நோக்கிப்பார்க்கிறார்; மனுஷர் யாவரையும் காண்கிறார். 14 தாம் வாசம்பண்ணும் இடத்திலிருந்து அவர் பூமியின் குடிகள் அனைவரையும் கண்ணோக்குகிறார். 15 அவர் அவர்கள் எல்லாருடைய இருதயங்களையும் உருவாக்குகிறார்; அவர்களுடைய செய்கைகள் யாவையும் ஆராய்ந்தறிகிறார்.
16 எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படுவதில்லை; வீரன் தன் மிகுந்த பலத்தால் தப்புவிக்கப்படுவதில்லை. 17 குதிரை ஜெயத்திற்குப் பொய்யான நம்பிக்கையாயிருக்கிறது; அதின் மிகுந்த பலத்தினாலும் அது தப்புவிக்கமாட்டாது.
18 ஆனால் எங்கள் பிதாவின் கண் அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய உடன்படிக்கை அன்பில் நம்பிக்கை வைக்கிறவர்கள்மேலும் இருக்கிறது, 19 அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்குத் தப்புவிக்கவும், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவுமே.
20 நம்முடைய ஆத்துமா எங்கள் பிதாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நம்முடைய துணையும் நம்முடைய கேடகமுமாயிருக்கிறார். 21 நம்முடைய இருதயம் அவருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறது, அவருடைய பரிசுத்த நாமத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். 22 எங்கள் பிதாவே, நாங்கள் உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறபடியே, உம்முடைய உடன்படிக்கை அன்பு எங்கள்மேல் இருப்பதாக.