மூடன் தன் மூடத்தனத்தைத் திரும்பச் செய்கிறான்
26 1கோடைகாலத்தில் உறைபனியும் அறுவடைக்காலத்தில் மழையும் பொருந்தாததுபோல, மூடனுக்கு மேன்மை பொருந்தாது. 2அலைந்து பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும், விரைந்து செல்லும் தகைவிலான் குருவியைப்போலவும், காரணமில்லாத சாபம் தங்கி நிலைக்காது. 3குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், மூடர்களின் முதுகுக்கு தடியும். 4மூடனுக்கு அவனுடைய மூடத்தனத்திற்குத்தக்கதாய் மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல் ஆவாய். 5மூடனுக்கு அவனுடைய மூடத்தனத்திற்குத்தக்கதாய் மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வையில் ஞானியாய் இருப்பான். 6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் சொந்தக் கால்களைத் தானே வெட்டிக்கொண்டு, கொடுமையைக் குடிக்கிறான். 7நொண்டியின் கால்கள் பயனற்று தொங்குகிறதுபோல, மூடர்களின் வாயிலுள்ள பழமொழியும் இருக்கும். 8கவணிலே கல்லைக் கட்டி வைப்பதுபோல மூடனுக்கு மேன்மை கொடுப்பதாம். 9வெறியன் கையில் முள்செடி தைக்கிறதுபோல மூடர்களின் வாயிலுள்ள பழமொழியும் இருக்கும். 10எல்லாரையும் காயப்படுத்தும் வில்வீரனைப்போல, மூடனைக் கூலிக்கு அமர்த்துகிறவனும், வழிப்போக்கனை எவனையும் கூலிக்கு அமர்த்துகிறவனும் இருக்கிறான். 11நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்புவதுபோல, மூடன் தன் மூடத்தனத்தைத் திரும்பச் செய்கிறான். 12தன் பார்வையில் ஞானியாய் இருக்கிறவனை நீ காண்கிறாயா? அவனைவிட மூடனுக்கு அதிக நம்பிக்கை உண்டு.
13சோம்பேறி, “வழியிலே சிங்கம் இருக்கிறது! வீதிகளிலே சிங்கம் இருக்கிறது!” என்கிறான். 14கதவு தன் கீல்களில் திரும்புவதுபோல, சோம்பேறி தன் படுக்கையில் புரண்டு திரும்புகிறான். 15சோம்பேறி தன் கையைக் கலத்திலே விட்டு மறைத்துக்கொள்கிறான்; அதைத் தன் வாய்க்குத் திரும்பக் கொண்டுவரவும் அவனுக்குச் சோர்வாயிருக்கிறது. 16சோம்பேறி தன் பார்வையில் அதிக ஞானியாயிருக்கிறான், புத்தியாய் மறுஉத்தரவு சொல்லக்கூடிய ஏழு பேரைவிட.
17நாயைக் காதுகளால் பிடிக்கிறவனைப்போல் தனக்குரியதல்லாத சண்டையில் தலையிடும் வழிப்போக்கன் இருக்கிறான்.
18கொள்ளிகளையும் எய்யும் பைத்தியக்காரனைப்போலவே, அம்புகளையும், சாவையும் எய்பவனைப்போலவே, 19தன் அயலானை வஞ்சிக்கிறவனும், “நான் விளையாட்டாய்த்தானே செய்தேன்!” என்று சொல்கிறவனும் அப்படியே இருக்கிறான்.
20விறகில்லாவிட்டால் நெருப்பு அணைந்துபோகும்; கோள்சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சண்டை அடங்கிப்போகும். 21கரி நெருப்புத்தணலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுசெய்கிறவன் சண்டையைக் கொளுத்துகிறான். 22கோள்சொல்லுகிறவனுடைய வார்த்தைகள் சுவையான உணவுத்துணுக்குகளைப்போல் இருக்கின்றன; அவை உள்ளத்தின் ஆழத்தில் இறங்கிப்போகின்றன.
23மண்பாண்டத்தை மூடும் மெருகைப்போல, தீய இருதயத்தோடு கூடிய இனிமையான உதடுகள் இருக்கின்றன. 24பகைஞன் தன் உதடுகளால் தன்னை மாறுவேடமிட்டுக்கொள்கிறான்; ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சகத்தைப் பதுக்கிவைக்கிறான். 25அவன் தயவாய்ப் பேசினாலும் நம்பாதே அவனை; ஏனெனில் ஏழு அருவருப்புகள் அவன் இருதயத்தை நிறைத்திருக்கின்றன. 26அவனுடைய பகை வஞ்சகத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கொடுமை சபையிலே வெளியரங்கமாக்கப்படும். 27படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; கல்லை உருட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்பி உருண்டுவரும். 28பொய் நாவு தன்னால் நசுக்கப்பட்டவர்களைப் பகைக்கிறது; முகஸ்துதி செய்யும் வாய் அழிவை உண்டாக்குகிறது.