சாந்தமான பதில் கோபத்தை விலக்குகிறது
15 1சாந்தமான பதில் கோபத்தை விலக்குகிறது; கடுஞ்சொல்லோ கோபத்தை எழுப்பிவிடுகிறது. 2ஞானிகளின் நாவு அறிவைப் புகழ்ந்துரைக்கிறது; மூடரின் வாயோ மதியீனத்தைப் பொழிந்துவிடுகிறது. 3எங்கள் பிதாவின் கண்கள் எவ்விடத்திலும் இருக்கின்றன, தீயவர்களையும் நல்லவர்களையும் கவனித்துப் பார்க்கின்றன. 4சாந்தமான நாவு ஜீவவிருட்சம்; வஞ்சகமான நாவோ ஆவியை நொறுக்குகிறது. 5மூடன் தன் தகப்பனுடைய போதனையை அசட்டைபண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனிக்கிறவனோ விவேகி. 6நீதிமானுடைய வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு; துன்மார்க்கருடைய வருமானமோ கலக்கத்தைக் கொண்டுவருகிறது. 7ஞானிகளின் உதடுகள் அறிவைப் பரப்புகின்றன; மூடரின் இருதயமோ அப்படியல்ல. 8துன்மார்க்கருடைய பலி எங்கள் பிதாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 9துன்மார்க்கருடைய வழி எங்கள் பிதாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்தொடருகிறவனையோ அவர் நேசிக்கிறார். 10பாதையைவிட்டு விலகுகிறவனுக்குக் கடுமையான தண்டனை உண்டு; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் மரிப்பான். 11பாதாளமும் அழிவும் எங்கள் பிதாவுக்கு முன்பாகத் திறந்திருக்கின்றன; மனுஷருடைய இருதயங்கள் எத்தனை அதிகமாய்! 12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுதலை விரும்புவதில்லை; அவன் ஞானிகளிடத்திற்குப் போகமாட்டான். 13மகிழ்ச்சியான இருதயம் முகத்தை மலரச்செய்கிறது; துக்கமுள்ள இருதயமோ ஆவியை நொறுக்குகிறது. 14விவேகமுள்ள இருதயம் அறிவை நாடுகிறது; மூடரின் வாயோ மதியீனத்தை மேய்கிறது. 15சிறுமைப்பட்டவனின் நாட்கள் யாவும் கடினமானவை; மகிழ்ச்சியான இருதயத்திற்கோ நித்திய விருந்து உண்டு. 16எங்கள் பிதாவுக்குப் பயந்திருந்து கொஞ்சமிருப்பது, கலக்கத்தோடு கூடிய மிகுந்த செல்வத்தைவிட நலம். 17அன்பிருக்கும் இடத்தில் கீரை உணவு, பகையோடு கூடிய கொழுத்த மாட்டைவிட நலம். 18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ வழக்கை அமர்த்துகிறான். 19சோம்பேறியின் வழி முள்வேலிபோலிருக்கிறது; செம்மையானவர்களின் பாதையோ சமனான ராஜபாதை. 20ஞானமுள்ள மகன் தகப்பனை மகிழ்விக்கிறான்; மூடனோ தன் தாயை அசட்டைபண்ணுகிறான். 21மதியீனனுக்கு மூடத்தனம் சந்தோஷம்; புத்தியுள்ளவனோ செம்மையான பாதையில் நடக்கிறான். 22ஆலோசனையில்லாமல் திட்டங்கள் தவறிப்போகின்றன; அநேக ஆலோசகர்களால் அவை நிலைநிற்கின்றன. 23தகுந்த பதிலைச் சொல்வதில் மனுஷன் சந்தோஷம் அடைகிறான்; ஏற்ற வேளையில் சொல்லப்படும் வார்த்தை எத்தனை நல்லது! 24விவேகிக்கு ஜீவவழி மேலாய் நடத்துகிறது, கீழேயுள்ள பாதாளத்தினின்று அவனை விலக்குகிறது. 25எங்கள் பிதா அகந்தையுள்ளவர்களின் வீட்டைத் தகர்க்கிறார்; விதவையின் எல்லையையோ அவர் காக்கிறார். 26துன்மார்க்கருடைய எண்ணங்கள் எங்கள் பிதாவுக்கு அருவருப்பானவை; இனிமையான வார்த்தைகளோ சுத்தமானவை. 27அநியாய லாபத்திற்குப் பேராசைப்படுகிறவன் தன் சொந்த வீட்டிற்குக் கலக்கத்தைக் கொண்டுவருகிறான்; லஞ்சத்தை வெறுக்கிறவனோ பிழைப்பான். 28நீதிமானுடைய இருதயம் எப்படிப் பதில் சொல்வது என்று சிந்திக்கிறது; துன்மார்க்கருடைய வாயோ தீமையைப் பொழிந்துவிடுகிறது. 29எங்கள் பிதா துன்மார்க்கருக்குத் தூரமாய் இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ அவர் கேட்கிறார். 30கண்களின் ஒளி இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது; நற்செய்தி எலும்புகளுக்குப் புத்துயிர் அளிக்கிறது. 31ஜீவனுள்ள கடிந்துகொள்ளுதலைக் கேட்கிற செவி ஞானிகள் நடுவே தங்கும். 32போதனையை அசட்டைபண்ணுகிறவன் தன்னைத்தானே அற்பமாய் எண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ புத்தியை அடைகிறான். 33எங்கள் பிதாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் போதனை; கனத்திற்கு முன்பாகத் தாழ்மை வருகிறது.