பொறுப்பற்ற வார்த்தைகள், சொஸ்தமளிக்கும் நாவு
12 1புத்திமதியை நேசிக்கிறவன் அறிவை நேசிக்கிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மதிகேடன். 2நல்ல மனுஷன் எங்கள் பிதாவினிடத்தில் தயவைப் பெறுகிறான்; தீமையைத் திட்டமிடுகிற மனுஷனையோ அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார். 3துன்மார்க்கத்தினால் ஒருவனும் நிலைநிறுத்தப்படுவதில்லை; நீதிமான்களின் வேரோ ஒருபோதும் அசைக்கப்படாது. 4நற்குணமுள்ள மனைவி தன் புருஷனுக்கு கிரீடம்; வெட்கத்தை வருவிக்கிறவளோ அவன் எலும்புகளிலுள்ள சொத்தை போலிருக்கிறாள். 5நீதிமான்களின் யோசனைகள் நியாயமானவை; துன்மார்க்கரின் ஆலோசனையோ கபடமுள்ளது. 6துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தத்திற்காக பதிவிருக்கின்றன; செம்மையானவர்களின் பேச்சோ குற்றமற்றவர்களை விடுவிக்கிறது. 7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்; நீதிமான்களின் வீடோ நிலைத்திருக்கும். 8ஒருவன் தன் நல்லறிவுக்குத் தக்கதாகப் புகழப்படுகிறான்; மாறுபாடான மனமுள்ளவனோ அவமதிக்கப்படுகிறான். 9பெருமைபாராட்டி பட்டினியாய் இருப்பதைவிட, தாழ்மையாயிருந்து ஒரு வேலைக்காரனை உடையவனாய் இருப்பது நலம். 10நீதிமான் தன் மிருகங்களின் தேவைகளை கவனிக்கிறான்; துன்மார்க்கரின் இரக்கமோ கொடுமையாயிருக்கிறது. 11தன் நிலத்தைப் பயிரிடுகிறவனுக்கு உணவு நிறைவாய் இருக்கும்; வீணானவைகளைப் பின்தொடருகிறவனோ மதியற்றவன். 12துன்மார்க்கர் தீயவர்களின் கொள்ளைப்பொருளை ஆசிக்கிறார்கள்; நீதிமான்களின் வேரோ கனிகொடுக்கும். 13தீய மனுஷன் தன் பாவமான பேச்சினால் சிக்கிக்கொள்ளுகிறான்; நீதிமானோ இக்கட்டிலிருந்து தப்பிக்கொள்ளுகிறான். 14தன் வார்த்தைகளின் கனியினால் ஒருவன் நன்மைகளால் நிரப்பப்படுகிறான்; அவன் கைகளின் கிரியை அவனுக்குப் பலனாய்த் திரும்பிவரும். 15மூடனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாய்த் தோன்றும்; ஞானமுள்ளவனோ ஆலோசனையைக் கேட்கிறான். 16மூடன் தன் கோபத்தை உடனே காண்பிக்கிறான்; விவேகியோ அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறான். 17சத்தியத்தைப் பேசுகிறவன் நேர்மையான சாட்சி கூறுகிறான்; பொய்ச்சாட்சியோ பொய்களைச் சொல்லுகிறான். 18பொறுப்பற்ற வார்த்தைகள் பட்டயத்தைப்போல் குத்துகின்றன; ஞானமுள்ளவனின் நாவோ சொஸ்தத்தைத் தருகிறது. 19சத்தியமுள்ள உதடுகள் என்றென்றைக்கும் நிலைக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமே நிலைக்கும். 20தீமையைத் திட்டமிடுகிறவர்களின் இருதயங்கள் கபடத்தால் நிறைந்திருக்கின்றன; சமாதானத்தை நாடுகிறவர்களுக்கோ சந்தோஷம் உண்டு. 21நீதிமானுக்கு ஒரு கேடும் நேரிடாது; துன்மார்க்கரோ துன்பத்தால் நிறைந்திருக்கிறார்கள். 22பொய்யுரைக்கும் உதடுகள் எங்கள் பிதாவுக்கு அருவருப்பானவை; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருடைய பிரியம். 23விவேகி தன் அறிவைத் தனக்குள் அடக்கிவைக்கிறான்; மூடரின் இருதயமோ மதியீனத்தை வெளிப்படுத்துகிறது. 24ஜாக்கிரதையுள்ள கைகள் ஆளுகை செய்யும்; சோம்பலோ கட்டாய வேலையில் முடியும். 25கவலை இருதயத்தை பாரமாய் அழுத்துகிறது; தயவான வார்த்தையோ அதை மகிழ்விக்கிறது. 26நீதிமான் தன் அயலானுக்கு வழிகாட்டுகிறான்; துன்மார்க்கரின் வழியோ அவர்களை வழிதப்பப்பண்ணுகிறது. 27சோம்பேறி தான் வேட்டையாடினதைச் சுட்டுச் சாப்பிடுவதில்லை; ஜாக்கிரதையுள்ளவனோ தன் ஆஸ்திகளை அருமையாகக் கருதுகிறான். 28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்த வழியிலே மரணமில்லை.