கோராகு மோசேக்கு விரோதமாய் எழும்புதல்
16 1லேவியின் மகனாகிய கோகாத்தின் மகனான இத்சார் என்பவனுடைய மகன் கோராகு, எலியாபின் குமாரராகிய தாத்தான், அபிராம் என்பவர்களோடும், ரூபன் சந்ததியாருள் பேலேத்தின் மகனாகிய ஓன் என்பவனோடும் சேர்ந்து ஆட்களைத் திரட்டி, 2மோசேக்கு முன்பாக எழுந்து நின்றார்கள்; அவர்களோடு சபையிலே தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், பேர்பெற்றவர்களுமாகிய இஸ்ரவேல் தலைவர்கள் இருநூற்று ஐம்பதுபேரும் நின்றார்கள். 3அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாய்க் கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போனீர்கள்! சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள், அவர்கள் அனைவருக்குள்ளும் எங்கள் பிதா இருக்கிறார்; அப்படியிருக்க, எங்கள் பிதாவின் சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்திக்கொள்ளுகிறீர்கள்?” என்றார்கள்.
4மோசே இதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். 5அவன் கோராகையும் அவனுடைய கூட்டத்தார் எல்லாரையும் நோக்கி: “காலையிலே எங்கள் பிதா தமக்குரியவன் யார், பரிசுத்தமானவன் யார் என்பதைக் காண்பித்து, அவனைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்ளுவார்; அவர் தெரிந்துகொள்ளுகிறவனையே தம்மிடத்தில் சேர்த்துக்கொள்ளுவார். 6கோராகே, நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் இப்படிச் செய்யுங்கள்: தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, 7நாளைக்கு எங்கள் பிதாவுக்கு முன்பாக அவைகளில் அக்கினியைப் போட்டு, தூபவர்க்கத்தை இடுங்கள்; அப்பொழுது எங்கள் பிதா தெரிந்துகொள்ளுகிற மனிதனே பரிசுத்தமானவன். லேவியின் புத்திரரே, நீங்கள் மிஞ்சிப்போனீர்கள்!” என்றான்.
8மோசே பின்னும் கோராகை நோக்கி: “லேவியின் புத்திரரே, இப்பொழுது கேளுங்கள்: 9இஸ்ரவேலின் பிதா உங்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்ளவும், எங்கள் பிதாவின் வாசஸ்தலத்தின் வேலையைச் செய்யவும், சபைக்கு முன்பாக நின்று அவர்களுக்குப் பணிவிடை செய்யவுமாக, இஸ்ரவேல் சபையிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது உங்களுக்குப் போதாதோ? 10அவர் உன்னையும் லேவியின் புத்திரராகிய உன் சகோதரர் அனைவரையும் தம்மிடத்தில் சேர்த்துக்கொண்டிருக்க, இப்பொழுது ஆசாரிய ஊழியத்தையும் தேடுகிறீர்களா? 11இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் எங்கள் பிதாவுக்கு விரோதமாய்க் கூடினீர்கள்; நீங்கள் ஆரோனுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்?” என்றான்.
12பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைப்பித்தான். அவர்களோ: “நாங்கள் வரமாட்டோம்! 13பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களை வனாந்தரத்தில் கொல்லும்படி நீ கொண்டுவந்தது போதாதென்று, எங்கள்மேல் அதிகாரியாய் இருக்கவும் விரும்புகிறாயோ? 14மேலும், பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு நீ எங்களைக் கொண்டுவரவுமில்லை, வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகத் தரவுமில்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கிப்போடுவாயோ? நாங்கள் வரமாட்டோம்!” என்றார்கள்.
15அப்பொழுது மோசே மிகுந்த கோபமடைந்து, எங்கள் பிதாவை நோக்கி: “அவர்களுடைய காணிக்கையை நீர் அங்கீகரியாதேயும்; நான் அவர்களிடத்திலிருந்து ஒரு கழுதையையாகிலும் எடுத்துக்கொள்ளவில்லை, அவர்களில் ஒருவனுக்கும் தீங்கு செய்யவுமில்லை” என்றான்.
16பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் நாளைக்கு எங்கள் பிதாவுக்கு முன்பாக வந்து நில்லுங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் நிற்கவேண்டும். 17நீங்கள் அவரவர் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அதில் தூபவர்க்கத்தை இட்டு, அவரவர் தன்தன் தூபகலசமாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் எங்கள் பிதாவுக்கு முன்பாகக் கொண்டுவாருங்கள்; நீயும் ஆரோனும் அவரவர் தன்தன் தூபகலசத்தைக் கொண்டுவரவேண்டும்” என்றான்.
18அப்படியே அவரவர் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அதில் அக்கினியைப் போட்டு, தூபவர்க்கத்தை இட்டு, மோசேயோடும் ஆரோனோடும் ஆசரிப்புக்கூடாரவாசலிலே நின்றார்கள். 19கோராகு சபையார் எல்லாரையும் அவர்களுக்கு விரோதமாய் ஆசரிப்புக்கூடாரவாசலிலே கூடிவரச்செய்தான்; அப்பொழுது எங்கள் பிதாவின் மகிமை சபையார் அனைவருக்கும் காணப்பட்டது.
20எங்கள் பிதா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
21“நான் இந்தச் சபையாரை ஒரு நிமிஷத்திலே அழித்துப்போடும்படி, நீங்கள் இவர்களைவிட்டு விலகுங்கள்” என்றார்.
22அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “ஓ எங்கள் பிதாவே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் பிதாவாயிருக்கிறவரே, ஒரு மனிதன் பாவம் செய்தால், சபையார் எல்லார்மேலும் நீர் கோபமாயிருப்பீரோ?” என்று வேண்டிக்கொண்டார்கள். 23அப்பொழுது எங்கள் பிதா மோசேயை நோக்கி:
24“கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலங்களைவிட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.
25மோசே எழுந்து தாத்தானிடத்துக்கும் அபிராமிடத்துக்கும் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்தொடர்ந்து போனார்கள். 26அவன் சபையாரை நோக்கி: “இந்தத் துன்மார்க்கருடைய கூடாரங்களை விட்டு விலகுங்கள்; அவர்களுடைய பாவங்களெல்லாவற்றிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்களுக்குரிய ஒன்றையும் தொடாதிருங்கள்” என்றான்.
27அப்படியே அவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலங்களை விட்டு நாலாபுறமும் விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் மனைவிகளோடும், குமாரரோடும், குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசல்களில் நின்றார்கள்.
28அப்பொழுது மோசே: “இந்தச் செய்கைகளையெல்லாம் செய்யும்படி எங்கள் பிதா என்னை அனுப்பினார் என்பதையும், இவை ஒன்றும் என் சுயமனதின்படி செய்யப்படவில்லை என்பதையும், நீங்கள் இதனாலே அறிவீர்கள்: 29எல்லா மனிதரும் மரிக்கிறபடியே இவர்கள் மரித்து, எல்லா மனிதருக்கும் நேரிடுகிறது இவர்களுக்கு நேரிட்டால், எங்கள் பிதா என்னை அனுப்பவில்லை. 30ஆனால் எங்கள் பிதா ஒரு புதுமையை உண்டாக்கி, பூமி தன் வாயைத் திறந்து, இவர்களையும் இவர்களுக்குரிய யாவையும் விழுங்கி, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கினால், இந்த மனிதர் எங்கள் பிதாவை அசட்டைபண்ணினார்கள் என்பதை அப்பொழுது அறிவீர்கள்” என்றான்.
31அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்களுக்குக் கீழே இருந்த தரை பிளந்து, 32பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும், கோராகைச் சேர்ந்த எல்லா மனிதரையும், அவர்களுடைய சகல உடைமைகளையும் விழுங்கிற்று. 33அவர்களும் அவர்களைச் சேர்ந்த யாவரும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்கள்மேல் மூடிக்கொண்டது; அவர்கள் சபையிலிருந்து அழிந்துபோனார்கள். 34“பூமி எங்களையும் விழுங்கிப்போடுமோ!” என்று சொல்லி, அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் அனைவரும் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு ஓடிப்போனார்கள். 35அன்றியும் எங்கள் பிதாவிடத்திலிருந்து அக்கினி புறப்பட்டு, தூபங்காட்டின அந்த இருநூற்று ஐம்பதுபேரையும் பட்சித்துப்போட்டது.