வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

நெகேமியா 8

புத்தகம்

எஸ்றா நியாயப்பிரமாணத்தை உரத்த சத்தமாய் வாசிக்கிறான்

அதிகாரம் 8.

ஏழாம் மாதம் வந்தபோது, ஜனங்கள் எல்லாரும் ஏகமனதாய்த் தண்ணீர் வாசலுக்கு முன்னிருந்த வீதியில் கூடிவந்து, எங்கள் பிதா இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரும்படி வேதபாரகனாகிய எஸ்றாவைக் கேட்டுக்கொண்டார்கள். ஏழாம் மாதத்தின் முதலாந்தேதியிலே, ஆசாரியனாகிய எஸ்றா புருஷர், ஸ்திரீகள், கேட்டு உணர்ந்துகொள்ளத்தக்க எல்லாருமாகிய சபைக்கு முன்பாக நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்னிருந்த வீதிக்கு எதிராக நின்று, அதைப் புருஷருக்கும், ஸ்திரீகளுக்கும், உணர்ந்துகொள்ளத்தக்க எல்லாருக்கும் முன்பாக விடியற்காலந்தொடங்கி மத்தியானமட்டும் வாசித்தான்; ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். வேதபாரகனாகிய எஸ்றா, இதற்கென்று செய்யப்பட்ட உயர்ந்த மரமேடையின்மேல் நின்றான். அவன் வலதுபக்கத்தில் அவனருகே மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்களும்; அவன் இடதுபக்கத்தில் பெதாயா, மிசவேல், மல்கியா, ஆசூம், அஸ்பதானா, சகரியா, மெசுல்லாம் என்பவர்களும் நின்றார்கள். எஸ்றா ஜனங்களெல்லாருக்கும் உயரமாய் நின்றபடியால், அவன் எல்லா ஜனங்களுடைய கண்களுக்கு முன்பாகவும் புஸ்தகத்தைத் திறந்தான்; அதைத் திறந்தபோது ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள். எஸ்றா மகா தேவனாகிய எங்கள் பிதாவைத் துதித்தான்; ஜனங்கள் எல்லாரும் தங்கள் கைகளை உயர்த்தி, “ஆமென், ஆமென்” என்று மறுமொழி சொல்லி, தரைமட்டும் முகங்குனிந்து எங்கள் பிதாவைப் பணிந்துகொண்டார்கள்.

லேவியரான யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சப்பேதாயி, ஒதியா, மாசெயா, கெலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்கள், ஜனங்கள் தங்கள் நிலையில் நிற்கையில், அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தை விளக்கிச் சொன்னார்கள். அவர்கள் எங்கள் பிதாவின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தெளிவாய் வாசித்து, அதின் பொருளை விளக்கிச் சொன்னதால், ஜனங்கள் வாசிக்கப்பட்டதை உணர்ந்துகொண்டார்கள்.

அப்பொழுது தலைவனாகிய நெகேமியாவும், ஆசாரியனும் வேதபாரகனுமாகிய எஸ்றாவும், ஜனங்களுக்குப் போதித்த லேவியரும், எல்லாரையும் நோக்கி, “இந்த நாள் உங்கள் பிதாவுக்குப் பரிசுத்தமானது; நீங்கள் துக்கப்படாமலும் அழாமலும் இருங்கள்” என்றார்கள்; ஏனெனில் ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாண வார்த்தைகளைக் கேட்டபோது அழுதார்கள். மேலும் நெகேமியா அவர்களை நோக்கி, “நீங்கள் போய்ச் சுவையான உணவைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றும் ஆயத்தம்பண்ணாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் எங்கள் ஆண்டவராகிய பிதாவுக்குப் பரிசுத்தமானது; விசனப்படாதிருங்கள்; எங்கள் பிதாவின் சந்தோஷமே உங்கள் பெலன்” என்றான்.

லேவியரும், “இந்த நாள் பரிசுத்தமானது, நீங்கள் அமைதலாயிருங்கள், விசனப்படாதிருங்கள்” என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரையும் அமர்த்தினார்கள்.

அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசிக்கவும் குடிக்கவும் பங்குகளைப் பகிர்ந்துகொடுக்கவும் மிகுந்த சந்தோஷத்துடன் களிகூரவும் போனார்கள்.

கூடாரப் பண்டிகையை ஆசரித்தல்

இரண்டாம் நாளிலே, ஜனங்கள் எல்லாருடைய பிதாக்களின் வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கவனித்துப் படிக்கும்படி வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று எங்கள் பிதா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டதாய் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள். “நீங்கள் மலைகளுக்குப் போய், எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, ஒலிவ கிளைகளையும், காட்டொலிவ கிளைகளையும், மிருதுச் செடியின் கிளைகளையும், பேரீச்சமட்டைகளையும், மற்ற தழைத்த மரங்களின் கிளைகளையும் கொண்டுவாருங்கள்” என்று தங்கள் சகல பட்டணங்களிலும் எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தவேண்டியதாயிருந்தது.

அப்பொழுது ஜனங்கள் போய், கிளைகளைக் கொண்டுவந்து, அவனவன் தன் தன் வீட்டின்மேலும், தங்கள் முற்றங்களிலும், எங்கள் பிதாவின் ஆலய முற்றங்களிலும், தண்ணீர் வாசலின் வீதியிலும், எப்பிராயீம் வாசலின் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டுக்கொண்டார்கள். சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, அவைகளில் குடியிருந்தார்கள்; நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்வரைக்கும் இஸ்ரவேல் புத்திரர் இப்படிச் செய்யவில்லை; அவர்களுடைய சந்தோஷம் மகா பெரிதாயிருந்தது. முதலாம் நாள்முதல் கடைசி நாள்வரைக்கும் தினந்தோறும் எஸ்றா எங்கள் பிதாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தான்; அவர்கள் ஏழுநாள் பண்டிகையை ஆசரித்து, நியாயப்பிரமாணம் கட்டளையிட்டபடி எட்டாம் நாளிலே விசேஷித்த ஆசரிப்பைக் கொண்டாடினார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.