குடும்பம் ஒன்றாகச் சேர்ந்து மதிலைத் திரும்பக் கட்டுகிறது
3 1பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும் அவனுடன் ஆசாரியராகிய அவனுடைய சகோதரரும் எழும்பி, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைப் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை நிறுத்தினார்கள்; நூற்றுவர் என்னும் கோபுரம்வரைக்கும், அனனெயேல் கோபுரம்வரைக்கும் அதைப் பிரதிஷ்டைபண்ணினார்கள். 2அவர்களுக்கடுத்து எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்களுக்கடுத்து இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.
3மீன்வாசலை ஹசெனாகாவின் குமாரர் திரும்பக் கட்டி, அதின் உத்திரங்களைப் போட்டு, அதின் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். 4அவர்களுக்கடுத்து ஆக்கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்களுக்கடுத்து மெசெசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்களுக்கடுத்து பாணாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான். 5அவர்களுக்கடுத்து தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; ஆனாலும் அவர்களுடைய பிரபுக்கள் தங்கள் எஜமான்களின் வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்க மனதில்லாதிருந்தார்கள்.
6பழைய வாசலை பாசெயாகின் குமாரன் யொயதாவும், பெசோதேயாவின் குமாரன் மெசுல்லாமும் பழுதுபார்த்து, அதின் உத்திரங்களைப் போட்டு, அதின் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். 7அவர்களுக்கடுத்து கிபியோனியனாகிய மெலத்தியாவும், மெரொனோத்தியனாகிய யாதோனும்—நதிக்கு அப்பாலிருக்கிற நாட்டின் அதிபதியின் ஆளுகைக்கு உட்பட்ட கிபியோன், மிஸ்பா ஊர்களின் மனுஷரும்—பழுதுபார்த்துக் கட்டினார்கள். a a v7 நதிக்கு அப்பாலிருக்கிற நாடு என்பது ஐப்பிராத்து நதிக்கு மேற்கே இருந்த யூதாவை உட்பட்ட எல்லா தேசங்களையும் உள்ளடக்கிய பெர்சிய அரசாங்கத்தின் நிர்வாகப் பகுதியாகும். 8அவனுக்கடுத்து தட்டார்களில் ஒருவனாகிய அர்காயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்கடுத்து வாசனைத் தைலம் செய்கிறவர்களில் ஒருவனாகிய அனனியா பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் எருசலேமை அகன்ற மதில்வரைக்கும் திரும்பக் கட்டினார்கள். 9அவர்களுக்கடுத்து எருசலேம் மாகாணத்தில் பாதிக்கு அதிபதியாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான். 10அவர்களுக்கடுத்து அரூமாபின் குமாரன் யெதாயா தன் வீட்டிற்கு எதிரே பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்கடுத்து அசபினியாவின் குமாரன் அத்தூஷ் பழுதுபார்த்துக் கட்டினான். 11ஆரிமின் குமாரன் மல்கியாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் மற்றொரு பகுதியையும் சூளைகளின் கோபுரத்தையும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 12அவனுக்கடுத்து எருசலேம் மாகாணத்தில் பாதிக்கு அதிபதியாகிய அல்லோகேசின் குமாரன் சல்லூம், அவனும் அவனுடைய குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
13பள்ளத்தாக்கு வாசலை ஆனூனும் சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்து, அதைத் திரும்பக் கட்டி, அதின் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரைக்கும் ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு அடி மதிலைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
14குப்பைமேட்டு வாசலை பெத்அக்கேரேம் மாகாணத்தின் அதிபதியாகிய ரேகாபின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைத் திரும்பக் கட்டி, அதின் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
15நீரூற்று வாசலை மிஸ்பா மாகாணத்தின் அதிபதியாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைத் திரும்பக் கட்டி, மேலே கூரையிட்டு, அதின் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்; இராஜாவின் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாக் குளத்தின் மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்வரைக்கும் அவன் பழுதுபார்த்துக் கட்டினான். 16அவனுக்குப்பின்பு பெத்சூர் மாகாணத்தில் பாதிக்கு அதிபதியாகிய அஸ்பூக்கின் குமாரன் நெகேமியா, தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், கட்டப்பட்ட குளம்வரைக்கும், பராக்கிரமசாலிகளின் வீடுவரைக்கும் பழுதுபார்த்துக் கட்டினான். 17அவனுக்குப்பின்பு லேவியர் பழுதுபார்த்துக் கட்டினார்கள்: பானியின் குமாரன் ரேகூம்; அவனுக்கடுத்து கேகிலா மாகாணத்தில் பாதிக்கு அதிபதியாகிய அஷபியா தன் மாகாணத்திற்காகப் பழுதுபார்த்துக் கட்டினான். 18அவனுக்குப்பின்பு அவர்களுடைய சகோதரராகிய லேவியரில் கேகிலா மாகாணத்தில் பாதிக்கு அதிபதியாகிய எனாதாதின் குமாரன் பாவாய் பழுதுபார்த்துக் கட்டினான். 19அவனுக்கடுத்து மிஸ்பாவின் அதிபதியாகிய யெசுவாவின் குமாரன் ஏசேர், மூலையிலிருக்கிற ஆயுதசாலைக்கு ஏறிப்போகிற இடத்திற்கு எதிரே இரண்டாம் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 20அவனுக்குப்பின்பு சபாயின் குமாரன் பாரூக் மனவுற்சாகத்தோடே, மூலைதுவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசிபின் வீட்டுவாசல்வரைக்கும் மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 21அவனுக்குப்பின்பு ஆக்கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத், எலியாசிபின் வீட்டுவாசல்துவக்கி அவன் வீடு முடியும் இடம்வரைக்கும் மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 22அவனுக்குப்பின்பு சுற்றுப்புறச் சமபூமியிலிருந்து வந்த ஆசாரியர் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 23அவர்களுக்கடுத்து பென்யமீனும் அசூபும் தங்கள் வீட்டிற்கு எதிரே பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்கடுத்து அனனியாவின் குமாரனாகிய மாசெயாவின் மகன் அசரியா தன் சொந்த வீட்டண்டையிலே பழுதுபார்த்துக் கட்டினான். 24அவனுக்குப்பின்பு எனாதாதின் குமாரன் பின்னூய், அசரியாவின் வீடுதுவக்கி மூலைக்கும் கோடிக்கும்வரைக்கும் மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 25ஊசாயின் குமாரன் பாலால் மூலைக்கு எதிரேயும், காவற்கூடத்தண்டையிலே இராஜாவின் மேல்மாளிகையிலிருந்து துருத்திக்கொண்டு நிற்கிற கோபுரத்திற்கு எதிரேயும் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப்பின்பு பாரோஷின் குமாரன் பெதாயா பழுதுபார்த்துக் கட்டினான். 26ஓபேலிலே குடியிருந்த ஆலய ஊழியக்காரர், கிழக்கே தண்ணீர்வாசலுக்கு எதிரான இடம்வரைக்கும், துருத்திக்கொண்டு நிற்கிற கோபுரம்வரைக்கும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 27அவர்களுக்குப்பின்பு தெக்கோவா ஊரார், துருத்திக்கொண்டு நிற்கிற பெரிய கோபுரத்திற்கு எதிரான இடம்துவக்கி ஓபேலின் மதில்வரைக்கும் இரண்டாம் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
28குதிரைவாசலுக்கு மேலே ஆசாரியர், அவரவர் தங்கள் சொந்த வீட்டிற்கு எதிரே பழுதுபார்த்துக் கட்டினார்கள். 29அவர்களுக்குப்பின்பு இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டிற்கு எதிரே பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப்பின்பு கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான். 30அவனுக்குப்பின்பு செலேமியாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாம் மகனாகிய ஆனூனும் மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப்பின்பு பெரகியாவின் குமாரன் மெசுல்லாம் தன் அறைவீட்டிற்கு எதிரே பழுதுபார்த்துக் கட்டினான். 31அவனுக்குப்பின்பு தட்டார்களில் ஒருவனாகிய மல்கியா, சோதனை வாசலுக்கு எதிரே ஆலய ஊழியக்காரரும் வர்த்தகரும் இருந்த வீடுவரைக்கும், மூலையிலிருக்கிற மேல்வீடுவரைக்கும் பழுதுபார்த்துக் கட்டினான். 32மூலையிலிருக்கிற மேல்வீட்டிற்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே தட்டார்களும் வர்த்தகரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.