நினிவேயின் நியாயத்தீர்ப்பின் வேளை
2 1நினிவே, சிதறடிக்கிறவன் உனக்கு விரோதமாய் வந்துவிட்டான். கோட்டையைக் காவல்காத்துக்கொள், வழியைக் கண்காணி, உன்னை உறுதிப்படுத்திக்கொள், உன் பலம் அனைத்தையும் திரட்டிக்கொள்!
2ஏனெனில் எங்கள் பிதா யாக்கோபின் மகிமையை மீண்டும் திரும்பக் கொடுக்கிறார், இஸ்ரவேலின் மகிமையைப்போலவே, கொள்ளையர் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய கிளைகளை அழித்திருந்தாலும்கூட. a a v2 நினிவேயின்மேல் நியாயத்தீர்ப்பு கூறும் புத்தகத்திலும்கூட, அதன் இருதயம் என்னவென்றால், எங்கள் பிதா தமது நசுக்கப்பட்ட பிள்ளைகளின் மேன்மையை மீண்டும் திரும்பக் கொடுப்பதேயாகும்.
3அவனுடைய போர்வீரரின் கேடயங்கள் சிவப்பாய்ச் சாயமிடப்பட்டிருக்கின்றன, பராக்கிரமசாலிகள் இரத்தாம்பரம் தரித்திருக்கிறார்கள்; இரதங்கள் அக்கினியைப்போல் மின்னுகின்றன ஆயத்தம் செய்யப்படும் நாளிலே, தேவதாரு ஈட்டிகள் ஓங்கி வீசப்படுகின்றன. 4இரதங்கள் வீதிகளில் பாய்ந்தோடுகின்றன, மைதானங்களில் இங்கும் அங்கும் விரைந்து ஓடுகின்றன; அவை தீவட்டிகளைப்போல் தோன்றுகின்றன, மின்னலைப்போல் பாய்ந்துசெல்கின்றன. 5அவன் தன் அதிகாரிகளை வரவழைக்கிறான்; அவர்கள் அணிவகுத்துச் செல்கையில் இடறுகிறார்கள்; மதிலை நோக்கி விரைந்தோடுகிறார்கள், காக்கும் கேடயமும் நிலைநிறுத்தப்படுகிறது. 6நதியின் வாசல்கள் திறந்துவிடப்படுகின்றன, அரண்மனையும் இடிந்து விழுகிறது. 7இது தீர்மானிக்கப்பட்டுவிட்டது: அவள் வெறுமையாக்கப்பட்டு சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுகிறாள், அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போல் புலம்புகிறார்கள், தங்கள் மார்பை அடித்துக்கொண்டு. 8நினிவே தண்ணீர் வடிந்துகொண்டிருக்கும் குளத்தைப்போல் இருக்கிறது. “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று அவர்கள் கூப்பிடுகிறார்கள், ஆனால் ஒருவரும் திரும்பிப் பார்க்கிறதில்லை. 9வெள்ளியைக் கொள்ளையிடுங்கள்! பொன்னைக் கொள்ளையிடுங்கள்! பொக்கிஷத்திற்கு முடிவேயில்லை, விலையேறப்பெற்ற சகல பொருள்களின் நிறைவே உண்டு. 10வெறுமை பாழும் அழிவும்! இருதயங்கள் கரைந்துபோகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, ஒவ்வொரு உடலையும் வேதனை பிடிக்கிறது, ஒவ்வொரு முகமும் வெளிறிப்போகிறது.
11சிங்கங்கள் தங்கிய குகை இப்பொழுது எங்கே? பாலசிங்கங்கள் தீனிதின்ற இடம் எங்கே? சிங்கமும் பெண்சிங்கமும் உலாவித் திரிந்த இடம், சிங்கக்குட்டிகளும் இருந்த இடம், தங்களைப் பயப்படுத்துவார் ஒருவரும் இல்லாமலிருந்த இடம் எங்கே? 12சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதுமான இரையைக் கிழித்தது தன் பெண்சிங்கங்களுக்காக இரையைத் தொண்டைநெரித்துக் கொன்றது; அது தன் குகைகளைக் கொன்ற இரையால் நிரப்பியது தன் வாசஸ்தலங்களைக் கிழித்த மாம்சத்தால் நிரப்பியது.
13“இதோ, நான் உனக்கு விரோதமாய் இருக்கிறேன்” என்று பரலோக சேனைகளின் பிதா கூறுகிறார். “நான் உன் இரதங்களைப் புகையாக எரித்துப்போடுவேன், பட்டயம் உன் பாலசிங்கங்களை விழுங்கும். பூமியிலிருந்து உன் இரையை நான் அறுத்துப்போடுவேன், உன் தூதுவர்களின் சத்தம் இனிமேல் கேட்கப்படுவதில்லை.”