பிதாவானவர் வழியை ஆயத்தம் செய்கிறார்
3 1அந்நாட்களில் யோவான்ஸ்நானன் வந்து, யூதேயாவின் வனாந்தரத்தில் பிரசங்கம் செய்து, 2“மனந்திரும்புங்கள், ஏனெனில் எங்கள் பிதாவின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்றான். 3ஏசாயா தீர்க்கதரிசி குறித்துச் சொன்னவன் இவனே: “வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள்.”
4யோவான் ஒட்டகமயிர் ஆடையை உடுத்தி, தன் அரையில் தோல்கச்சையைக் கட்டியிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுடைய உணவாயிருந்தது. 5அப்பொழுது எருசலேமும், யூதேயா முழுவதும், யோர்தானைச் சுற்றியுள்ள சகல நாடும் அவனிடத்தில் புறப்பட்டு வந்து, 6தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7அநேக பரிசேயரும் சதுசேயரும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வருகிறதை அவன் கண்டு, அவர்களை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வரப்போகிற கோபத்திற்குத் தப்பியோட உங்களுக்கு எச்சரித்தவன் யார்? 8ஆகையால் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 9‘ஆபிரகாம் எங்கள் தகப்பன்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்காதேயுங்கள்; ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இந்தக் கல்லுகளிலிருந்து ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க எங்கள் பிதாவால் கூடும். 10இப்பொழுதே கோடரி மரங்களின் வேரில் வைக்கப்பட்டிருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத எந்த மரமும் வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படும்.
11“மனந்திரும்புதலுக்கென்று நான் உங்களைத் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; ஆனால் எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவர்; அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல. அவர் உங்களைப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். 12சுளகு அவருடைய கையில் இருக்கிறது; அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கி, தம்முடைய கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.” a a v12 சுளகு போரடித்த தானியத்தைக் காற்றில் தூற்றப் பயன்பட்டது; கனமான கோதுமை தரையில் திரும்பி விழுந்தது, இலேசான பதர் காற்றில் பறந்துபோனது.
பிதாவானவர் தம்முடைய குமாரனை வரவேற்கிறார்
13அப்பொழுது இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு, கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கு அவனிடத்தில் வந்தார். 14யோவான் அவரைத் தடுத்து: “நான் உம்மால் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வருகிறீரோ?” என்றான்.
15இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: “இப்பொழுது இடங்கொடு; இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார். அப்பொழுது யோவான் அவருக்கு இடங்கொடுத்தான்.
16இயேசு ஞானஸ்நானம் பெற்றபின்பு, உடனே தண்ணீரிலிருந்து கரையேறினார்; இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; எங்கள் பிதாவின் ஆவி புறாவைப்போல் இறங்கி, தம்மேல் வந்தமர்கிறதைக் கண்டார்.
17அப்பொழுது: “இவர் என்னுடைய குமாரன், நான் நேசிக்கிறவர்; இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.