வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

மத்தேயு 25

புத்தகம்

மணவாளன் திரும்பிவருவதற்கு ஆயத்தமாயிருத்தல்

அதிகாரம் 25.

"அப்பொழுது, எங்கள் பிதாவின் ராஜ்யம், தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள், ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு, தங்களுடனே எண்ணெயை எடுத்துக்கொள்ளவில்லை. புத்தியுள்ளவர்களோ தங்கள் தீவட்டிகளுடனே கூடச் சிமிழ்களில் எண்ணெயையும் எடுத்துக்கொண்டார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் தூக்கமயக்கமடைந்து நித்திரைபண்ணினார்கள். நடுஜாமத்திலோ, ‘இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்’ என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தம்பண்ணினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி, ‘உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே’ என்றார்கள். அதற்குப் புத்தியுள்ளவர்கள், ‘அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிருக்கும்; நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்கள். அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண விருந்துக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறவும்’ என்றார்கள். அதற்கு அவர், ‘மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களை அறியேன்’ என்றார். ஆகையால், நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால், விழித்திருங்கள்.

ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு வரத்திலும் உண்மையாயிருத்தல்

"அன்றியும், பரதேசத்துக்குப் புறப்படுகிற ஒரு மனிதன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புவித்ததுபோல் இருக்கிறது. அவன் அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக ஒருவனுக்கு ஐந்து பொற்பைகளையும், ஒருவனுக்கு இரண்டையும், ஒருவனுக்கு ஒன்றையும் கொடுத்து, உடனே பிரயாணமானான். ஐந்து பொற்பைகளைப் பெற்றவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து பொற்பைகளைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு பொற்பைகளைப் பெற்றவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒரு பொற்பையைப் பெற்றவனோ போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

"வெகுகாலத்திற்குப்பின்பு அந்த ஊழியக்காரரின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குப்பார்த்தான். ஐந்து பொற்பைகளைப் பெற்றவன் வேறு ஐந்து பொற்பைகளைக் கொண்டுவந்து, ‘எஜமானே, ஐந்து பொற்பைகளை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; இதோ, வேறு ஐந்து பொற்பைகளைச் சம்பாதித்தேன்’ என்றான்.

"அதற்கு அவனுடைய எஜமான், ‘நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்றான்.

"இரண்டு பொற்பைகளைப் பெற்றவனும் வந்து, ‘எஜமானே, இரண்டு பொற்பைகளை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; இதோ, வேறு இரண்டு பொற்பைகளைச் சம்பாதித்தேன்’ என்றான்.

"அதற்கு அவனுடைய எஜமான், ‘நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்றான்.

"பின்பு, ஒரு பொற்பையைப் பெற்றவனும் வந்து, ‘எஜமானே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று உம்மை அறிந்திருந்தேன். ஆகையால் நான் பயந்து, போய், உம்முடைய பணத்தை நிலத்தில் புதைத்துவைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்’ என்றான்.

"அதற்கு அவனுடைய எஜமான், ‘பொல்லாதவனும் சோம்பேறியுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே;

"அப்படியானால் நீ என் பணத்தைக் காசுக்காரரிடத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்ததே; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே. ஆகையால் அந்தப் பொற்பையை அவனிடத்தில் எடுத்து, பத்துப் பொற்பைகளையுடையவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற அந்த ஊழியக்காரனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்’ என்றான்.

மனுஷகுமாரன் ஜாதிகளை நியாயந்தீர்க்கிறார்

"அன்றியும், மனுஷகுமாரன் தமது மகிமையோடே தம்முடைய சகல தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்; மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்கிறதுபோல அவர்களை ஒருவரையொருவர் பிரிப்பார். செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

"ஏனெனில் நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்பார்."

"அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக, ‘ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு எப்பொழுது போஜனங்கொடுத்தோம்? தாகமுள்ளவராகக் கண்டு எப்பொழுது உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

"அந்நியராகக் கண்டு எப்பொழுது உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? வஸ்திரமில்லாதவராகக் கண்டு எப்பொழுது உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் உம்மை எப்பொழுது கண்டு உம்மிடத்தில் வந்தோம்?’ என்பார்கள்."

"அப்பொழுது ராஜா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, ‘மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்பார். பின்பு, தமது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர், ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். ஏனெனில் நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியாயும் காவலிலும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை’ என்பார்."

"அப்பொழுது அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக, ‘ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் எப்பொழுது கண்டு உமக்கு ஊழியஞ்செய்யாதிருந்தோம்?’ என்பார்கள்.

"அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, ‘மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்’ என்பார். அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனையையும், நீதிமான்களோ நித்தியஜீவனையும் அடையப்போவார்கள்" என்றார்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.