ஆலயம் நிலைத்திராது
24 1இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீஷர்கள் ஆலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அருகில் வந்தார்கள்.
2அதற்கு அவர், “இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களல்லவா? மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இங்கே ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
3இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனிமையாக வந்து, “இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
4இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
5ஏனெனில், அநேகர் என் நாமத்தினாலே வந்து, ‘நானே கிறிஸ்து’ என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். 6யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதிருங்கள். இவைகள் நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு இன்னும் வரவில்லை. 7ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பல இடங்களில் பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும். 8இவைகளெல்லாம் வேதனைகளின் ஆரம்பமே.
9அப்பொழுது உங்களை உபத்திரவத்திற்கு ஒப்புக்கொடுத்து, கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் எல்லா ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10அக்காலத்தில் அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். 12அக்கிரமம் பெருகுகிறதினால், அநேகருடைய அன்பு தணிந்துபோகும். 13ஆனாலும் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 14ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி எல்லா ஜனங்களுக்கும் சாட்சியாக உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும்; அப்பொழுது முடிவு வரும்.
15ஆகையால், தீர்க்கதரிசியாகிய தானியேலால் சொல்லப்பட்ட பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்திலே நிற்பதைக் காணும்போது—வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்— 16அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
17வீட்டின்மேலிருக்கிறவன் தன் வீட்டிலிருந்து ஏதாகிலும் எடுக்கக் கீழே இறங்காதிருக்கக்கடவன். 18வயலிலிருக்கிறவன் தன் மேலங்கியை எடுக்கத் திரும்பிப் போகாதிருக்கக்கடவன். 19அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கும் தாய்மார்களுக்கும் ஐயோ, எத்தனை பயங்கரமாயிருக்கும்! 20உங்கள் ஓட்டம் மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது நேரிடாதபடி வேண்டிக்கொள்ளுங்கள். 21ஏனெனில், உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரைக்கும் உண்டாயிராததும், இனிமேலும் உண்டாகாததுமான மகா உபத்திரவம் அப்பொழுது உண்டாகும். 22அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனும் தப்பிப்பிழைப்பதில்லை; ஆனாலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்நாட்கள் குறைக்கப்படும்.
23அப்பொழுது, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்,’ அல்லது ‘அதோ, அங்கே இருக்கிறார்’ என்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால் நம்பாதிருங்கள். 24ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றத்தக்கதாக பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25இதோ, முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லிவைத்தேன்.
26ஆகையால், ‘இதோ, அவர் வனாந்தரத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால் புறப்படாதிருங்கள்; ‘இதோ, உள்ளறைகளில் இருக்கிறார்’ என்று சொன்னால் நம்பாதிருங்கள். 27மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28பிணம் எங்கேயிருக்கிறதோ, அங்கே கழுகுகள் கூடிவரும்.
29அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருண்டுபோகும், சந்திரன் ஒளிகொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். 30அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் தோன்றும்; அப்பொழுது பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் புலம்பி, மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைக் காண்பார்கள். 31பேரொலியுள்ள எக்காளத்தோடே அவர் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைவரைக்கும் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
32அத்திமரத்தினால் இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதின் கிளை இளகி, தளிர்விடும்போது, வேனிற்காலம் சமீபமாயிருக்கிறதென்று அறிகிறீர்கள். 33அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அது சமீபமாய், வாசற்படியிலே வந்திருக்கிறதென்று அறியுங்கள். 34மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இவைகளெல்லாம் நடந்துமுடியுமளவும் இந்தச் சந்ததி ஒழிந்துபோவதில்லை. 35வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனாலும் என் வார்த்தைகள் ஒழிந்துபோவதில்லை.
பிதாவானவர் மட்டுமே அறிவார்
36அந்த நாளையும் நாழிகையையும் ஒருவனும் அறியான்; வானத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்; பிதாவானவர் மட்டுமே அறிவார். 37நோவாவின் நாட்களில் எப்படி இருந்ததோ, அப்படியே மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 38எப்படியெனில், ஜலப்பிரளயத்திற்கு முந்தின நாட்களில், நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வந்தார்கள். 39ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் அடித்துக்கொண்டுபோகுமளவும் அவர்கள் ஒன்றும் அறியாதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 40அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விடப்படுவான். 41இரண்டு ஸ்திரீகள் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விடப்படுவாள். 42ஆகையால், உங்கள் கர்த்தர் இன்ன நாளிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். 43இதை அறிந்துகொள்ளுங்கள்: இரவில் இன்ன ஜாமத்தில் திருடன் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீடு உடைக்கப்படுவதற்கு இடங்கொடாதிருப்பான். 44ஆகையால், நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருவார்; அதனால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
45எஜமான் தன் வேலைக்காரருக்குத் தகுந்த வேளையிலே ஆகாரம் கொடுக்கும்படி, அவர்கள்மேல் விசாரணைக்கர்த்தனாக வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யார்? 46எஜமான் வரும்போது இப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். 47மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அவன் தனக்குள்ள யாவற்றின்மேலும் அவனை விசாரணைக்கர்த்தனாக வைப்பான். 48ஆனால் அந்தப் பொல்லாத ஊழியக்காரனோ, ‘என் எஜமான் வர நெடுநாள் தாமதிக்கிறார்’ என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, 49தன் உடன்வேலைக்காரரை அடிக்கவும், வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், 50அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் அறியாத நாழிகையிலும் அவனுடைய எஜமான் வந்து, 51அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”