திருமணத்திற்கான எங்கள் பிதாவின் திட்டம்
19 1இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின், அவர் கலிலேயாவைவிட்டு, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள யூதேயாவின் எல்லைப்பகுதிக்குச் சென்றார். 2திரளான ஜனங்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்; அவர் அங்கே அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
3அப்பொழுது பரிசேயர் அவரைச் சோதிக்கும்படி அவரிடம் வந்து, “ஒரு மனிதன் எந்தக் காரணத்திற்காகிலும் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா?” என்று கேட்டார்கள்.
4அதற்கு அவர், “ஆதியிலே அவர்களை உண்டாக்கின எங்கள் பிதா, ஆணும் பெண்ணுமாக அவர்களை உண்டாக்கினார் என்பதையும், 5‘இதினிமித்தம் ஒரு மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவ்விருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ என்று சொல்லப்பட்டதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? 6அப்படியிருக்க, அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், எங்கள் பிதா இணைத்ததை ஒருவனும் பிரிக்காதிருக்கக்கடவன்” என்றார்.
7அதற்கு அவர்கள், “அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து அவளைத் தள்ளிவிடும்படி மோசே ஏன் கட்டளையிட்டான்?” என்று அவரிடம் கேட்டார்கள்.
8அதற்கு அவர், “உங்கள் இருதயகடினத்தினிமித்தமே உங்கள் மனைவிகளைத் தள்ளிவிட மோசே உங்களுக்கு இடங்கொடுத்தான்; ஆதிமுதலாய் அப்படியிருந்ததில்லை. 9நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: வேசித்தனத்தினிமித்தமேயன்றி, தன் மனைவியைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரம்பண்ணுகிறான்” என்றார்.
10அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி, “புருஷனுக்கும் மனைவிக்கும் இடையிலுள்ள காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணாதிருப்பதே நலம்” என்றார்கள்.
11அதற்கு அவர், “இந்த வார்த்தையை எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது; இது எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களால் மட்டுமே முடியும். 12தாயின் கர்ப்பத்திலிருந்தே அப்படிப் பிறந்த அண்ணகர் உண்டு; மற்றவர்களால் அப்படியாக்கப்பட்ட அண்ணகர் உண்டு; எங்கள் பிதாவின் ராஜ்யத்தினிமித்தம் தங்களைத்தாமே அப்படியாக்கிக்கொண்ட அண்ணகரும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்” என்றார்.
இயேசு சிறுபிள்ளைகளை வரவேற்கிறார்
13அப்பொழுது, அவர் தம் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படி சிறுபிள்ளைகள் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டார்கள்; சீஷர்களோ அவர்களைக் கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
14ஆனால் இயேசு, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதேயுங்கள்; ஏனெனில் எங்கள் பிதாவின் ராஜ்யம் இவர்களைப்போன்றவர்களுடையது” என்றார்.
15பின்பு அவர் தம் கைகளை அவர்கள்மேல் வைத்து, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்.
அவனுக்குக் குறைவாயிருந்த ஒரே காரியம்
16அப்பொழுது ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நித்தியஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
17அதற்கு அவர், “நன்மையானதைக்குறித்து ஏன் என்னிடம் கேட்கிறாய்? நல்லவர் ஒருவரே. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால், கற்பனைகளைக் கைக்கொள்” என்றார்.
18“எவைகளை?” என்று அவன் கேட்டான். இயேசு சொன்னார்: “கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, 19உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக, உன்னில் நீ அன்புகூருவதுபோல உன் அயலானிலும் அன்புகூருவாயாக” என்றார்.
20அந்த வாலிபன் அவரை நோக்கி, “இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் எனக்கு என்ன குறைவாயிருக்கிறது?” என்றான்.
21இயேசு அவனை நோக்கி, “நீ பூரணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
22அந்த வாலிபன் இந்த வார்த்தையைக் கேட்டபோது, தனக்கு அதிக ஆஸ்தி இருந்தபடியால், துக்கத்தோடே போய்விட்டான்.
23அப்பொழுது இயேசு தம் சீஷர்களை நோக்கி, “ஐசுவரியவான் எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது வெகு அரிது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24மறுபடியும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஐசுவரியவான் எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிது” என்றார்.
25அவருடைய சீஷர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆச்சரியப்பட்டு, “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்?” என்று கேட்டார்கள்.
26இயேசு அவர்களைப் பார்த்து, “இது மனிதரால் முடியாத காரியம்; ஆனால் எங்கள் பிதாவினால் எல்லாம் முடியும்” என்றார்.
27அப்பொழுது பேதுரு அவரை நோக்கி, “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே; அப்படியானால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான்.
28அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் உட்கார்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.
29என் நாமத்தினிமித்தம் வீடுகளையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும் நூறத்தனை பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்வான். 30ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாயிருப்பார்கள்; பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாயிருப்பார்கள்” என்றார்.