வானத்திலிருந்து அடையாளம் கேட்டல்
16 1பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி வந்து, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கும்படி அவரைக் கேட்டார்கள்.
2அவர் மறுமொழியாக: “மாலைவேளையானபோது, ‘வானம் சிவந்திருக்கிறது, ஆகையால் காலநிலை தெளிவாயிருக்கும்’ என்கிறீர்கள்.
3“காலையிலோ, ‘வானம் சிவந்து இருண்டிருக்கிறது, ஆகையால் இன்று புயல் மூளும்’ என்கிறீர்கள். வானத்தின் முகத்தைப் பகுத்தறிய அறிந்திருக்கிறீர்கள், ஆனால் காலங்களின் அடையாளங்களைப் பகுத்தறிய முடியாதிருக்கிறீர்கள்.
4“பொல்லாத, உண்மையற்ற சந்ததி அடையாளத்தைத் தேடுகிறது; யோனாவின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் அதற்குக் கொடுக்கப்படுவதில்லை” என்று சொல்லி, அவர்களை விட்டு அகன்றுபோனார்.
பொய்ப் போதகத்தின் புளித்தமாவு
5சீஷர்கள் அக்கரைக்குப் போனபோது, அப்பம் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6இயேசு அவர்களை நோக்கி: “பரிசேயர், சதுசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து விழிப்பாயிருங்கள்” என்றார்.
7அதற்கு அவர்கள்: “நாம் அப்பம் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
8இயேசு அதை அறிந்து: “அற்பவிசுவாசிகளே, உங்களிடத்தில் அப்பமில்லையென்று உங்களுக்குள்ளே ஏன் பேசிக்கொள்ளுகிறீர்கள்? 9இன்னும் நீங்கள் உணராதிருக்கிறீர்களா? ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்த அந்த ஐந்து அப்பங்களையும், எத்தனை கூடைகள் சேர்த்தெடுத்தீர்கள் என்பதையும் நினைவுகூராதிருக்கிறீர்களா?
10“அல்லது நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்த அந்த ஏழு அப்பங்களையும், எத்தனை கூடைகள் சேர்த்தெடுத்தீர்கள் என்பதையும் நினைவுகூராதிருக்கிறீர்களா?
11“நான் அப்பத்தைக்குறித்து உங்களோடே பேசவில்லை என்பதை நீங்கள் உணராதிருக்கிறதென்ன? பரிசேயர், சதுசேயருடைய புளித்தமாவைக்குறித்தே எச்சரிக்கையாயிருங்கள்” என்றார்.
12அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயருடைய போதகத்தைக்குறித்தே எச்சரிக்கையாயிருக்கும்படி அவர் சொன்னார் என்று அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
பேதுரு பிதாவின் குமாரனை அறிக்கையிடுதல்
13இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: “மனுஷகுமாரன் யார் என்று மக்கள் சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார்.
14அதற்கு அவர்கள்: “சிலர் ஸ்நானகனாகிய யோவான் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்” என்றார்கள்.
15அதற்கு அவர்: “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார்.
16சீமோன் பேதுரு மறுமொழியாக: “நீர் கிறிஸ்து, ஜீவனுள்ள பிதாவின் குமாரன்” என்றார்.
17இயேசு அவனை நோக்கி: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை வெளிப்படுத்தினார்.
18“மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ பேதுரு, இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
19“எங்கள் பிதாவின் ராஜ்யத்தின் திறவுகோல்களை உனக்குத் தருவேன்; பூமியிலே நீ எதைக் கட்டுகிறாயோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூமியிலே நீ எதை விடுதலையாக்குகிறாயோ அது பரலோகத்திலும் விடுதலையாக்கப்பட்டிருக்கும்” என்றார்.
20அப்பொழுது, தாம் கிறிஸ்து என்று ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று தம்முடைய சீஷர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
குமாரன் பாடுபட்டு உயிர்த்தெழவேண்டும்
21அதுமுதல், தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் அநேகம் பாடுபட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழவேண்டும் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
22அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: “ஆண்டவரே, இது ஒருபோதும் நேரிடலாகாது; இது உமக்கு ஒருக்காலும் சம்பவியாது” என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
23அவரோ திரும்பிப் பேதுருவை நோக்கி: “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ; நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; ஏனெனில் நீ எங்கள் பிதாவுக்குரியவைகளைச் சிந்தியாமல், மனிதருக்குரியவைகளைச் சிந்திக்கிறாய்” என்றார்.
24அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
25“ஏனெனில், தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
26“ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்துபோனால் அவனுக்கு லாபம் என்ன? அல்லது ஒரு மனிதன் தன் ஆத்துமாவுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
27“மனுஷகுமாரன் தம்முடைய தூதரோடேகூடத் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறார்; அப்பொழுது அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28“மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமளவும், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மரணத்தை ருசிபார்ப்பதில்லை.”