அவர்களுடைய ஊர்களில் போதித்தல்
11 1இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கு உபதேசித்து முடித்தபின்பு, அவர்களுடைய ஊர்களில் போதிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார்.
சிறையிலிருந்து யோவானின் கேள்வி
2யோவான் சிறைச்சாலையில் கிறிஸ்துவினுடைய கிரியைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷர்கள் மூலமாய்ச் சொல்லியனுப்பி, 3அவரிடத்தில், “வரப்போகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவருக்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா?” என்று கேட்டான்.
4இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: “நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்:
5குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாக்கப்படுகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுப்பப்படுகிறார்கள், தரித்திரருக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. 6என்னிமித்தம் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.”
7அவர்கள் போகையில், இயேசு யோவானைக்குறித்து ஜனக்கூட்டங்களுடனே சொல்லத் தொடங்கினார்: “எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 8அல்லது எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் தரித்த மனிதனையோ? இதோ, மெல்லிய வஸ்திரம் தரிக்கிறவர்கள் அரண்மனைகளில் இருக்கிறார்கள். 9பின்னை எதைப் பார்க்கப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவரையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10‘இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பாக உம்முடைய வழியை ஆயத்தம்பண்ணுவான்’ என்று எழுதப்பட்டவர் இவர்தான். 11மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவன். 12யோவான்ஸ்நானனுடைய நாட்கள்முதல் இதுவரைக்கும் எங்கள் பிதாவின் ராஜ்யம் பலவந்தமடைகிறது, பலவந்தக்காரர் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13ஏனெனில் தீர்க்கதரிசிகள் யாவரும் நியாயப்பிரமாணமும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. 14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வரப்போகிற எலியா இவன்தான். 15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
16இந்தச் சந்ததியை எதற்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்துக் கூப்பிடுகிற பிள்ளைகளுக்கு அது ஒப்பாயிருக்கிறது: 17‘உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்களோ கூத்தாடவில்லை; புலம்பல் பாட்டைப் பாடினோம், நீங்களோ துக்கங்கொண்டாடவில்லை.’ 18ஏனெனில் யோவான் புசிக்காமலும் குடியாமலும் வந்தான்; அதற்கு அவர்கள், ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள். 19மனுஷகுமாரன் புசித்தும் குடித்தும் வந்தார்; அதற்கு அவர்கள், ‘இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்!’ என்கிறார்கள். ஆகிலும் ஞானமானது அதின் கிரியைகளால் நீதியுள்ளதென்று விளங்கும்.”
மனந்திரும்பாத ஊர்களுக்கு ஐயோ
20அப்பொழுது, தமது பலத்த அற்புதங்கள் அதிகமாய் நடந்த ஊர்கள் மனந்திரும்பாதபடியால், அவர் அந்த ஊர்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
21“கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அவைகள் அந்நாளிலேயே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருக்கும். 22ஆனாலும் நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப் பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23கப்பர்நகூமே, நீ வானபரியந்தம் உயர்த்தப்படுவாயோ? பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். உன்னில் செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். 24ஆனாலும் நியாயத்தீர்ப்புநாளில் உனக்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் தேசத்துக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
குமாரனால் வெளிப்படுத்தப்படும் பிதாவானவர்
25அக்காலத்திலே இயேசு சொன்னது: “வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராகிய பிதாவே, இவைகளை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மைத் துதிக்கிறேன். 26ஆம், பிதாவே, இப்படிச் செய்வது உமது பார்வைக்குப் பிரியமாயிருந்தது. 27என் பிதாவினால் சகலமும் என்னிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவானவரைத்தவிர வேறொருவரும் குமாரனை அறியார்; குமாரனையும், குமாரன் எவனுக்கு பிதாவை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனையும்தவிர வேறொருவரும் பிதாவை அறியார்.
28“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”