பிதாவின் ராஜ்யத்திற்குக் கேட்கும் காதுகள் உண்டு
4 1இயேசு மறுபடியும் கடலோரத்தில் போதித்தார். அவரைச் சுற்றி மிகுந்த திரளான ஜனங்கள் கூடிவந்ததால், அவர் தண்ணீரின்மேல் இருந்த ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்கள் எல்லாரும் கடலோரத்தில் கரையிலே நின்றார்கள். 2அவர் அவர்களுக்கு அநேக காரியங்களை உவமைகளாய்ப் போதித்தார்; தமது போதனையில் அவர்களை நோக்கி:
3“கேளுங்கள்! விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். 4அவன் விதைக்கையில், சில விதைகள் வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதை விழுங்கிப்போட்டது. 5வேறு சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; நிலத்திற்கு ஆழமில்லாதிருந்ததால் உடனே முளைத்தது. 6சூரியன் உதித்தபோது, அந்தச் செடிகள் காய்ந்துபோயின; வேரில்லாதிருந்ததால் உலர்ந்துபோயின. 7வேறு சில விதைகள் முள்ளுள்ள இடத்தில் விழுந்தது; முட்கள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டதால் அது தானியம் தரவில்லை. 8வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது; அது முளைத்து வளர்ந்து, விதைக்கப்பட்டதற்கு முப்பதும், அறுபதும், நூறுமாகத் தானியம் தந்தது.” 9பின்பு அவர்: “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்.
10அவர் தனிமையாக இருந்தபோது, அவரைச் சூழ்ந்திருந்தவர்களும் பன்னிருவரும் அந்த உவமைகளைக்குறித்து அவரிடம் விசாரித்தார்கள்.
11அவர் அவர்களை நோக்கி: “எங்கள் பிதாவின் ராஜ்யத்தின் இரகசியம் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாக வருகிறது. 12‘அவர்கள் பார்த்தும் காணாதிருக்கவும், கேட்டும் உணராதிருக்கவும், மனந்திரும்பி மன்னிக்கப்படாதிருக்கவும் இப்படி நடக்கிறது’ என்றார்.”
13மேலும் அவர் அவர்களை நோக்கி: “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால் மற்ற எல்லா உவமைகளையும் எப்படி அறிந்துகொள்வீர்கள்? 14விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். 15வசனம் விதைக்கப்படும் வழியருகே இருக்கிறவர்கள் இவர்களே: அவர்கள் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்களுக்குள் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். 16கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் இவர்களே: இவர்கள் வசனத்தைக் கேட்டவுடனே சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறார்கள். 17ஆனால் அவர்களுக்குள் வேரில்லாததால் கொஞ்சக்காலம்மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்; வசனத்தினிமித்தம் உபத்திரவமோ துன்பமோ வரும்போது உடனே இடறிவிழுகிறார்கள். 18வேறே சிலர் முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள். இவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்கள், 19ஆனால் இந்த உலகத்தின் கவலைகளும், ஐசுவரியத்தின் வஞ்சகமும், மற்றக் காரியங்களின்மேலுள்ள இச்சைகளும் உட்பிரவேசித்து வசனத்தை நெருக்கிப்போடுகிறதால், அது கனிகொடாமல் போகிறது. 20நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் இவர்களே: இவர்கள் வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, முப்பதும், அறுபதும், நூறுமாய்க் கனிகொடுக்கிறார்கள்.”
வெளிச்சம் பிரகாசிக்கும்படி வைக்கப்படுகிறது
21பின்பு அவர் அவர்களை நோக்கி: “விளக்கை மரக்காலுக்குக் கீழேயாவது கட்டிலின்கீழேயாவது வைக்க யாராவது கொண்டுவருவார்களா? விளக்குத்தண்டின்மேல் அல்லவா வைப்பார்கள்? 22வெளியரங்கமாகாத மறைவானது ஒன்றுமில்லை; வெளிப்படாத ரகசியமும் ஒன்றுமில்லை. 23கேட்கிறதற்குக் காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்” என்றார்.
24மேலும் அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் கேட்கிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அந்த அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; அதிகமாகவும் கூட்டிக்கொடுக்கப்படும். 25உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலோ அவனுக்கு உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
விதை தானாகவே வளருகிறது
26மேலும் அவர்: “எங்கள் பிதாவின் ராஜ்யம் எப்படியிருக்கிறதென்றால்: ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைக்கிறான். 27அவன் இரவும் பகலும் தூங்கியும் விழித்தும் இருக்கையில், அந்த விதை எப்படி முளைத்து வளருகிறதென்று அவனுக்குத் தெரியாதிருந்தும், அது முளைத்து வளர்கிறது. 28நிலம் தானாகவே தானியத்தை விளைவிக்கிறது; முதலில் தளிரும், பின்பு கதிரும், பின்பு கதிரிலே நிறைந்த தானியமும் விளைகிறது. 29தானியம் விளைந்தபின், அறுப்புக்காலம் வந்துவிட்டதால் அவன் உடனே அரிவாளை அனுப்புகிறான்” என்றார்.
கடுகுவிதை
30மேலும் அவர்: “எங்கள் பிதாவின் ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினால் அதை விவரிப்போம்? 31அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது நிலத்தில் விதைக்கப்படும்போது எல்லா விதைகளிலும் சிறியதாயிருக்கிறது. 32ஆனாலும் விதைக்கப்பட்டபின், அது வளர்ந்து சகல செடிகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலிலே கூடுகட்டத்தக்கதாக பெரிய கிளைகளை விடுகிறது” என்றார்.
33அவர்கள் கேட்டறியத்தக்கவிதமாய், இப்படிப்பட்ட அநேக உவமைகளினால் அவர் அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். 34உவமையில்லாமல் அவர் அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; ஆனால் தமது சொந்த சீஷர்களுக்குத் தனிமையில் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்.
இயேசு புயலை அமர்த்துகிறார்
35அன்று மாலைநேரமானபோது, அவர் அவர்களை நோக்கி: “நாம் அக்கரைக்குப் போவோம்” என்றார்.
36அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் இருந்த நிலைமையிலேயே அவரைப் படகிலே ஏற்றிக்கொண்டு போனார்கள்; வேறே படகுகளும் அவரோடேகூடச் சென்றன. 37அப்பொழுது பலத்த சூறாவளிக்காற்று எழும்பியது; அலைகள் படகின்மேல் மோதி, படகு தண்ணீரால் நிரம்பத்தொடங்கியது. 38ஆனால் இயேசு படகின் பின்பகுதியில் தலையணையின்மேல் நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: “போதகரே, நாங்கள் அழிந்துபோகிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.
39அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: “அமைதலாயிரு! அடங்கிப்போ!” என்றார். அப்பொழுது காற்று நின்று, மிகுந்த அமைதலுண்டாயிற்று. 40பின்பு அவர் அவர்களை நோக்கி: “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? இன்னும் உங்களுக்கு விசுவாசம் இல்லையா?” என்றார்.
41அவர்கள் மிகவும் பயந்து: “இவர் யாரோ? காற்றும் கடலுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று ஒருவரையொருவர் நோக்கிச் சொல்லிக்கொண்டார்கள்.