இயேசு பிலாத்துவினிடம் ஒப்புக்கொடுக்கப்படுதல்
15 1விடியற்காலத்தில் பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும், வேதபாரகர்களும், ஆலோசனைச் சங்கத்தார் அனைவரும் ஒன்றாய் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி, கொண்டுபோய், பிலாத்துவினிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
2பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, “நீர் சொல்லுகிறபடிதான்” என்றார்.
3பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகக் குற்றங்களைச் சாட்டிக்கொண்டிருந்தார்கள். 4ஆகவே பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி, “நீ ஒன்றும் பிரதியுத்தரம் சொல்லுகிறதில்லையா? இதோ, இவர்கள் உன்மேல் எத்தனை குற்றங்களைச் சாட்டுகிறார்கள், பார்” என்று கேட்டான்.
5ஆனாலும் இயேசு அப்புறம் ஒன்றும் பேசாதிருந்தார்; அதனால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6பண்டிகைதோறும், மக்கள் கேட்டுக்கொள்ளுகிற எந்தக் கைதியையும் பிலாத்து அவர்களுக்காக விடுதலை செய்வது வழக்கம். 7அக்காலத்தில் கலகத்தில் கொலைசெய்திருந்த கலகக்காரரோடுகூட பரபாஸ் என்னும் ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். 8அப்பொழுது ஜனங்கள் கூடிவந்து, தங்களுக்கு அவன் எப்பொழுதும் செய்துவருகிறபடி செய்யும்படி பிலாத்துவைக் கேட்கத் தொடங்கினார்கள். 9பிலாத்து அவர்களுக்கு மறுமொழியாக, “யூதருடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா?” என்று கேட்டான்; 10ஏனெனில் பிரதான ஆசாரியர்கள் பொறாமையினாலேயே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். 11ஆனாலும் அவருக்குப் பதிலாகப் பரபாசை விடுதலை செய்யும்படி கேட்கவேண்டுமென்று பிரதான ஆசாரியர்கள் ஜனங்களைத் தூண்டிவிட்டார்கள். 12பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி, “அப்படியானால், யூதருடைய ராஜா என்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
13அதற்கு அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று மறுபடியும் கூக்குரலிட்டார்கள்.
14பிலாத்து அவர்களை நோக்கி, “ஏன்? இவன் என்ன பொல்லாங்கு செய்தான்?” என்று கேட்டான். ஆனால் அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டார்கள்.
15அப்பொழுது பிலாத்து ஜனங்களைத் திருப்திப்படுத்தும்படி, பரபாசை அவர்களுக்கு விடுதலை செய்து, இயேசுவைவோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தான்.
படைவீரர்கள் ராஜாவைப் பரிகாசம் செய்தல்
16படைவீரர்கள் அவரை மாளிகைக்குள் (அதாவது தேசாதிபதியின் அரண்மனைக்குள்) கொண்டுபோய், படைவீரர்களின் கூட்டம் அனைத்தையும் ஒன்றாய் வரவழைத்தார்கள். 17அவர்கள் அவருக்கு இரத்தாம்பரத்தை உடுத்தி, முள்ளுமுடியைப் பின்னி, அவர் சிரசில் வைத்து, 18“யூதருடைய ராஜாவே, வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினார்கள். 19மேலும் ஒரு கோலால் அவருடைய தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு, அவரைப் பரிகாசமாய் வணங்கினார்கள். 20அவரைப் பரிகாசம் செய்தபின்பு, இரத்தாம்பரத்தைக் கழற்றி, அவருடைய சொந்த வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, சிலுவையில் அறையும்படி அவரை வெளியே கொண்டுபோனார்கள்.
குமாரன் சிலுவையில் அறையப்படுதல்
21அப்பொழுது வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்த சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை—இவன் அலெக்சந்தருக்கும் ரூபுவுக்கும் தகப்பன்—அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி வலுவந்தமாய்ப் பிடித்தார்கள். 22பின்பு இயேசுவைக் கொல்கொதா என்னும் இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அதற்கு மண்டையோட்டின் இடம் என்று அர்த்தம். 23அங்கே அவருக்கு வெள்ளைப்போளங் கலந்த திராட்சரசத்தைக் கொடுத்தார்கள்; அவரோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
24அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வஸ்திரங்களை, யாருக்கு எது கிடைக்கவேண்டுமென்று சீட்டுப்போட்டு, தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள். 25அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணியாயிருந்தது. 26அவர்மேல் சாட்டப்பட்ட குற்றத்தை எழுதிய பலகையில், “யூதருடைய ராஜா” என்று எழுதியிருந்தது. 27அவரோடுகூட இரண்டு கள்ளர்களை, ஒருவனை அவருடைய வலதுபுறத்திலும் மற்றொருவனை அவருடைய இடதுபுறத்திலும், சிலுவைகளில் அறைந்தார்கள். a a v27 மிகப் பழைய கையெழுத்துப் பிரதிகளில் இங்கே 28-ம் வசனம் இல்லை; பிற்காலப் பிரதிகள் சேர்க்கின்றன: “‘அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்’ என்று சொல்லுகிற வேதவாக்கியம் நிறைவேறிற்று.”
29வழியே கடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி, “ஆ! ஆலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள் கட்டுகிறவனே, 30உன்னை நீயே இரட்சித்துக்கொண்டு, சிலுவையிலிருந்து இறங்கிவா!” என்று அவரை நிந்தித்தார்கள்.
31அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் தங்களுக்குள்ளே அவரைப் பரிகாசம் செய்து, “மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியாது. 32இஸ்ரவேலின் ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும்; அப்பொழுது நாங்கள் கண்டு விசுவாசிப்போம்” என்றார்கள். அவரோடுகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
பிதாவின் குமாரன் தமது ஜீவனை விடுதல்
33மத்தியானவேளையில், மூன்று மணிவரைக்கும் தேசமெங்கும் இருள் உண்டாயிற்று.
34பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு உரத்த சத்தமாய், “எலோயீ, எலோயீ, லாமா சபக்தானி?” என்று கூப்பிட்டார்; அதற்கு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அர்த்தம்.
35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபோது, “இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான், கேளுங்கள்” என்றார்கள்.
36ஒருவன் ஓடி, கடல்பஞ்சைக் காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து, “பொறுங்கள், எலியா இவனை இறக்கவருகிறானோ பார்ப்போம்” என்றான்.
37இயேசு உரத்த சத்தமிட்டு, தமது ஜீவனை விட்டார். 38அப்பொழுது ஆலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாய்க் கிழிந்தது. 39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி, அவர் இவ்விதமாய்த் தம்முடைய ஜீவனை விட்டதைக் கண்டு, “மெய்யாகவே இந்த மனிதன் தேவகுமாரனாயிருந்தான்” என்றான்.
40ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமேயும் இருந்தார்கள். 41இவர்கள் அவர் கலிலேயாவிலிருந்தபோது அவரைப் பின்பற்றி, அவருக்கு ஊழியஞ்செய்தவர்கள்; அவரோடுகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேக ஸ்திரீகளும் அங்கே இருந்தார்கள்.
கல்லறையில் வைக்கப்படுதல்
42அன்று ஆயத்தநாளாகிய ஓய்வுநாளுக்கு முந்தின நாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, 43எங்கள் பிதாவின் ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், மேன்மையான ஆலோசனைச் சங்கத்தானுமாகிய அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, தைரியமாய்ப் பிலாத்துவினிடம் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44அவர் இவ்வளவு சீக்கிரமாய் மரித்துப்போனதைக் குறித்துப் பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து, இயேசு மரித்து நெடுநேரமாயிற்றா என்று கேட்டான். 45நூற்றுக்கு அதிபதியிடமிருந்து அப்படியே என்று அறிந்துகொண்டபோது, சரீரத்தை யோசேப்புக்கு அளித்தான். 46யோசேப்பு மெல்லிய துப்பட்டியை வாங்கி, சரீரத்தை இறக்கி, அந்தத் துப்பட்டியில் சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். 47அவர் வைக்கப்பட்ட இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.