வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

மாற்கு 1

புத்தகம்

பிதாவானவர் தம்முடைய தூதனை அனுப்புகிறார்

அதிகாரம் 1.

எங்கள் பிதாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். a a v1 சில பூர்வ பிரதிகளில் “எங்கள் பிதாவின் குமாரன்” என்பது காணப்படவில்லை. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “இதோ, உனக்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புகிறேன்; அவன் உன் வழியை ஆயத்தப்படுத்துவான். வனாந்தரத்திலே கூப்பிடுகிற ஒருவனுடைய சத்தம்: ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்.’”

யோவான் வனாந்தரத்திலே ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்துக்கொண்டு வந்தான். யூதேயா தேசத்தார் அனைவரும், எருசலேம் நகரத்தார் யாவரும் அவனிடத்தில் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியிலே அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் உடையை அணிந்து, தன் அரையிலே தோல்கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசித்து வந்தான். அவன் அறிவித்ததாவது: “என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னாக வருகிறார்; நான் குனிந்து அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கிறதற்கும் பாத்திரன் அல்ல. நான் உங்களுக்கு ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரினாலே ஞானஸ்நானம் கொடுப்பார்.”

பிதாவானவர் தம்முடைய குமாரனைக் குறித்துப் பேசுகிறார்

அந்நாட்களிலே இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தானிலே யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானங்கள் திறக்கப்படுவதையும், பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.

அப்பொழுது: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

உடனே பரிசுத்த ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குள் தள்ளிவிட்டார். அவர் வனாந்தரத்திலே நாற்பது நாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்கே காட்டுமிருகங்களோடு இருந்தார், தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

யோவான் காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவுக்கு வந்து, எங்கள் பிதாவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:

“காலம் நிறைவேறிற்று, எங்கள் பிதாவின் ராஜ்யம் சமீபமாயிருக்கிறது; மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.

இயேசு தம்முடைய முதல் சீஷர்களை அழைக்கிறார்

இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும் அவன் சகோதரனாகிய அந்திரேயாவும் கடலிலே வலைபோடுகிறதைக் கண்டார்.

இயேசு அவர்களை நோக்கி: “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்றார்.

உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

அவர் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபும் அவன் சகோதரனாகிய யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டார். உடனே அவர் அவர்களை அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலிக்காரரோடு படகிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

இருளின்மேல் அதிகாரம்

அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே, ஓய்வுநாளிலே அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசம்பண்ணத் தொடங்கினார். அவருடைய உபதேசத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; ஏனெனில் அவர் வேதபாரகரைப்போலல்ல, அதிகாரமுடையவராகவே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் உடனே கூக்குரலிட்டு: “நசரேயனாகிய இயேசுவே, எங்களோடு உமக்கென்ன? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் யார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர்!” என்றான்.

அதற்கு இயேசு: “நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ!” என்று அதை அதட்டினார்.

அப்பொழுது அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மகா சத்தமிட்டுக் கூப்பிட்டு, அவனைவிட்டுப் புறப்பட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: “இது என்ன? இது அதிகாரமுள்ள புதிய உபதேசமே; இவர் அசுத்த ஆவிகளுக்குங்கூடக் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று ஒருவரோடொருவர் கேட்டுக்கொண்டார்கள். உடனே அவருடைய கீர்த்தி கலிலேயாவைச் சுற்றியிருந்த திசைகளெங்கும் எங்கும் பரவிற்று.

சீமோனுடைய வீட்டிற்குச் சுகம் வருகிறது

அவர்கள் ஜெபஆலயத்தைவிட்டு வெளியே வந்தவுடனே, யாக்கோபோடும் யோவானோடுங்கூட சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். அவர் அருகில் வந்து, அவளுடைய கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று, அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, வியாதிக்காரர் அனைவரையும், பிசாசு பிடித்தவர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். ஊரார் அனைவரும் வாசற்படியிலே கூடிவந்தார்கள். பலவித வியாதிகளால் வருந்திய அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்தினார்; பிசாசுகள் அவரை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

இயேசு ஜெபிக்கத் தனிமையாகச் செல்கிறார்

அதிகாலையில், இருட்டோடே அவர் எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஒரு இடத்திற்குப் போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடிருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்று, அவரைக் கண்டபோது: “எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடத்தில் சொன்னார்கள்.

அவர்: “அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணும்படி வேறே இடங்களுக்குப் போவோம், அதற்காகவே நான் வந்தேன்” என்றார்.

அப்படியே அவர் கலிலேயா முழுவதிலும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணி, பிசாசுகளைத் துரத்திக்கொண்டு போனார்.

குஷ்டரோகி சுத்தமாக்கப்படுகிறான்

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, முழங்கால்படியிட்டு: “உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்” என்று அவரை வேண்டிக்கொண்டான்.

இயேசு மிகுந்த மனதுருக்கமடைந்து, தம்முடைய கையை நீட்டி, அவனைத் தொட்டு: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார்.

இப்படி அவர் சொன்னவுடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். அவர் அவனைக் கண்டிப்பாய் எச்சரித்து, உடனே அவனை அனுப்பிவிட்டு:

“நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆனாலும் போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, உன் சுத்தமாகுதலைக்குறித்து மோசே கட்டளையிட்டவைகளை மக்களுக்குச் சாட்சியாகச் செலுத்து” என்றார்.

அவனோ புறப்பட்டுப்போய், அதை மிகுதியாய்ப் பிரசித்தப்படுத்தி, செய்தியைப் பரப்பினான்; அதினால் இயேசு வெளியரங்கமாய் ஊருக்குள் பிரவேசிக்கக்கூடாதபடியிருந்தது; வெளியே தனித்த இடங்களில் தங்கியிருந்தார். ஆயினும் எங்கும் இருந்து ஜனங்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.