ஒரு போர்வீரனின் விசுவாசம் இயேசுவை ஆச்சரியப்படுத்துகிறது
7 1மக்களுக்கு இவைகளையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்குள் பிரவேசித்தார். 2அங்கே ஒரு நூற்றுக்கு அதிபதிக்குப் பிரியமான வேலைக்காரன் ஒருவன் வியாதிப்பட்டு, மரண அவஸ்தையில் இருந்தான். 3அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவர் வந்து தன் வேலைக்காரனைச் சுகமாக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும்படி யூத மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். 4அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரை ஊக்கமாய் வேண்டிக்கொண்டு: நீர் இதை இவனுக்குச் செய்கிறதற்கு இவன் பாத்திரன்; 5ஏனெனில் அவன் நம்முடைய ஜாதியை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் அவனே கட்டித்தந்தான் என்றார்கள். 6அப்பொழுது இயேசு அவர்களோடேகூடப் போனார். அவர் வீட்டிற்குச் சமீபமாய் வந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை அவரிடத்தில் அனுப்பி: ஆண்டவரே, நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் கூரையின்கீழ் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; 7ஆகையால் உம்மிடத்தில் வரவும் நான் என்னைப் பாத்திரன் என்று எண்ணவில்லை. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான். 8நானும் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவன்; என் கீழும் போர்ச்சேவகர் இருக்கிறார்கள்; நான் ஒருவனை: போ என்றால் போகிறான்; வேறொருவனை: வா என்றால் வருகிறான்; என் வேலைக்காரனை: இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
9இயேசு இதைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, தம்மைப் பின்தொடர்ந்து வந்த திரளான ஜனங்களை நோக்கிப் பார்த்து: இஸ்ரவேலிலும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதிப்பட்டிருந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கக் கண்டார்கள்.
ஒரு விதவையின் மகனை இயேசு உயிர்ப்பிக்கிறார்
11அதற்குப் பின்பு, அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் அவரோடேகூடப் போனார்கள். 12அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை வெளியே எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே பேறான குமாரன்; அவளோ விதவை; ஊரிலுள்ள திரளான ஜனங்கள் அவளோடேகூட இருந்தார்கள்.
13கர்த்தர் அவளைக் கண்டு, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, 14கிட்டவந்து பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15மரித்தவன் உயிரோடெழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். இயேசு அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
16எல்லாரையும் பயம் பிடித்தது; அவர்கள் எங்கள் பிதாவை மகிமைப்படுத்தி: மகா தீர்க்கதரிசி ஒருவர் நமக்குள்ளே எழும்பியிருக்கிறார் என்றும், எங்கள் பிதா தம்முடைய ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொன்னார்கள். 17அவரைக்குறித்த இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும் சுற்றியிருந்த எல்லா நாடுகளிலும் பரவிற்று.
யோவான் கேட்கிறான்: வரவேண்டியவர் நீர்தானா?
18இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷர்களில் இரண்டுபேரை அழைத்து, 19வரவேண்டியவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று கேட்கும்படி அவர்களைக் கர்த்தரிடத்தில் அனுப்பினான். 20அந்த மனுஷர் அவரிடத்தில் வந்து: வரவேண்டியவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்தில் அனுப்பினான் என்றார்கள்.
21அந்த வேளையிலே அவர் வியாதிகள், வேதனைகள், பொல்லாத ஆவிகள் உள்ள அநேகரைச் சுகமாக்கி, அநேகங்குருடருக்குப் பார்வையளித்தார்.
22இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிர்த்தெழுகிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 23என்னிமித்தம் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24யோவானுடைய தூதர்கள் போனபின்பு, அவர் ஜனங்களை நோக்கி யோவானைக்குறித்துச் சொன்னது: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகிற நாணலையோ? 25இல்லாவிட்டால், எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் அணிந்த மனுஷனையோ? இதோ, விலையேறப்பெற்ற வஸ்திரம் அணிந்து, செல்வச் செழிப்பாய் வாழ்கிறவர்கள் ராஜாக்களின் அரமனைகளில் இருக்கிறார்கள். 26இல்லாவிட்டால், எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பாக உம்முடைய வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று வேதவாக்கியத்தில் யாரைக்குறித்து எழுதியிருக்கிறதோ அவன் இவன்தான்.
28ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆயினும் எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29(வரிதண்டுகிறவர்களுள்பட ஜனங்கள் எல்லாரும் இதைக் கேட்டபோது, யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தபடியால், எங்கள் பிதாவை நீதியுள்ளவர் என்று ஏற்றுக்கொண்டார்கள்; 30ஆனாலும் பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் அவனால் ஞானஸ்நானம் பெறாமல், தங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எங்கள் பிதாவின் ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.)
31இந்தத் தலைமுறை மனுஷரை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப்போலிருக்கிறார்கள்? 32சந்தைவெளிகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று கூப்பிட்டுச்சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 33ஏனெனில் யோவான்ஸ்நானன் அப்பம் புசியாமலும் திராட்சரசம் குடியாமலும் வந்தான்; அப்படிக்கு அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34மனுஷகுமாரன் புசித்தும் குடித்தும் வந்தார்; அப்படிக்கு இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், வரிதண்டுகிறவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். 35ஆயினும் ஞானமானது அதன் பிள்ளைகள் அனைவராலும் நீதியுள்ளதென்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றார். a a v35 ஞானமானது தான் உண்டாக்குகிறவைகளினால் தன்னை மெய்ப்பிக்கிறது — இயேசுவின் சுகமாக்குதல்களும் நற்செய்தியும் அவர் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்துகின்றன.
மிகுதியாய் மன்னிக்கப்பட்டவள், மிகுதியாய் அன்புகூர்ந்தாள்
36பரிசேயரில் ஒருவன் தன்னோடே போஜனம்பண்ணும்படி அவரை அழைத்தான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ, அவர் பரிசேயன் வீட்டில் பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, 38அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று, அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தைப் பூசினாள். 39அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது: இவர் தீர்க்கதரிசியாயிருந்தால், தம்மைத் தொடுகிற ஸ்திரீ யார் என்றும் இவள் எப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சிந்தித்தான்.
40இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41அப்பொழுது அவர்: ஒரு வட்டிக்குக் கொடுக்கிறவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு பணமும், மற்றவன் ஐம்பது பணமும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. 42செலுத்துகிறதற்கு அவர்களிடத்தில் ஒன்றும் இல்லாதபடியால், இருவருடைய கடன்களையும் அவன் மன்னித்துவிட்டான். இப்போது, அவர்களில் எவன் அவனை அதிகமாய் நேசிப்பான் என்று கேட்டார்.
43சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிக கடனை மன்னித்துவிட்டானோ, அவன் நேசிப்பான் என்று நினைக்கிறேன் என்றான். அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்றார்.
44பின்பு அந்த ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயா? நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் பாதங்களுக்குத் தண்ணீர் தரவில்லை; இவளோ தன் கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். 45நீ என்னை முத்தமிடவில்லை; இவளோ நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தமிடாமல் ஓயவில்லை. 46நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை; இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். 47ஆகையால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; ஏனெனில் இவள் மிகுதியாய் அன்புகூர்ந்தாள்; எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி, 48அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49அப்பொழுது அவரோடேகூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களையும் மன்னிக்கிற இவர் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளத்தொடங்கினார்கள்.
50அவர் அந்த ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ என்றார்.