பிதாவானவர் தமது சத்தத்தை அனுப்புகிறார்
3 1திபேரியு காயிசர் அரசாண்ட பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியு பிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது கலிலேயாவுக்குக் காற்பங்கு அதிபதியாயும், அவனுடைய சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா திராகோனீத்து நாட்டுக்குக் காற்பங்கு அதிபதியாயும், லிசானியா அபிலேனேக்குக் காற்பங்கு அதிபதியாயும் இருந்தபோது, 2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாயிருந்த காலத்தில், வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு எங்கள் பிதாவின் வார்த்தை உண்டாயிற்று. 3அப்பொழுது அவன் யோர்தான் நதிக்கு அடுத்த நாடெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தான். 4தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் வசனங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே: “வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாவது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள். 5பள்ளத்தாக்குகளெல்லாம் நிரப்பப்படும், மலைகளும் குன்றுகளுமெல்லாம் தாழ்த்தப்படும். கோணலானவைகள் செவ்வையாகும், கரடுமுரடானவைகள் சமமான வழிகளாகும், 6மாம்சமான யாவரும் எங்கள் பிதாவின் இரட்சிப்பைக் காண்பார்கள்.”
7அப்பொழுது அவனிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வந்த திரளான ஜனங்களை நோக்கி அவன்: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகிற கோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு எச்சரிப்பு அளித்தவன் யார்? 8ஆகையால் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளத் தொடங்காதேயுங்கள். எங்கள் பிதா இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழும்பப்பண்ண வல்லவராயிருக்கிறாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேரிலே வைக்கப்பட்டிருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.”
10அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி, “அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
11அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரமுடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என்றான்.
12ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறுவதற்காக வந்து, அவனை நோக்கி, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
13அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைவிட அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள்” என்றான்.
14போர்ச்சேவகரும் அவனை நோக்கி, “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் பலவந்தமாயாவது பொய்யாய்க் குற்றஞ்சாட்டியாவது ஒருவரிடத்திலும் பறித்துக்கொள்ளாமல், உங்கள் சம்பளமே போதுமென்றிருங்கள்” என்றான்.
15ஜனங்கள் காத்திருந்து, யோவானே கிறிஸ்துவாயிருப்பானோ என்று எல்லாரும் தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 16யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். 17தூற்றுமுறம் அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
18வேறே அநேக புத்திமதிகளையும் சொல்லி, யோவான் ஜனங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். 19காற்பங்கு அதிபதியாகிய ஏரோதுவோ, தன் சகோதரனுடைய மனைவியாகிய ஏரோதியாள் நிமித்தமாகவும், தான் செய்த மற்றெல்லாத் தீமைகள் நிமித்தமாகவும், யோவானால் கடிந்துகொள்ளப்பட்டபோது, 20மற்றெல்லாவற்றோடும் இதையும் கூட்டி, யோவானைக் காவல்கூடத்தில் அடைத்துவைத்தான்.
பிதாவானவர் தமது குமாரனை நேசகுமாரன் என்று அழைக்கிறார்
21ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போலச் சரீரரூபமாய் அவர்மேல் இறங்கினார். அன்றியும், “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
23இயேசு தமது ஊழியத்தைத் தொடங்கினபோது ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராயிருந்தார்; அவர் ஜனங்களால் நினைக்கப்பட்டபடி யோசேப்பின் குமாரன்; யோசேப்பு ஏலியின் குமாரன், 24மாத்தாத்தின் குமாரன், லேவியின் குமாரன், மெல்கியின் குமாரன், யன்னாவின் குமாரன், யோசேப்பின் குமாரன், 25மத்தத்தியாவின் குமாரன், ஆமோசின் குமாரன், நாகூமின் குமாரன், எஸ்லியின் குமாரன், நங்காயின் குமாரன், 26மகாத்தின் குமாரன், மத்தத்தியாவின் குமாரன், சேமேயின் குமாரன், யோசேக்கின் குமாரன், யோதாவின் குமாரன், 27யோவனானின் குமாரன், ரேசாவின் குமாரன், செருபாபேலின் குமாரன், சலாத்தியேலின் குமாரன், நேரியின் குமாரன், 28மெல்கியின் குமாரன், அத்தியின் குமாரன், கோசாமின் குமாரன், எல்மோதாமின் குமாரன், ஏரின் குமாரன், 29யோசுவாவின் குமாரன், எலியேசரின் குமாரன், யோரீமின் குமாரன், மாத்தாத்தின் குமாரன், லேவியின் குமாரன், 30சிமியோனின் குமாரன், யூதாவின் குமாரன், யோசேப்பின் குமாரன், யோனானின் குமாரன், எலியாக்கீமின் குமாரன், 31மெலெயாவின் குமாரன், மென்னாவின் குமாரன், மத்தாத்தாவின் குமாரன், நாத்தானின் குமாரன், தாவீதின் குமாரன், 32ஈசாயின் குமாரன், ஓபேதின் குமாரன், போவாசின் குமாரன், சல்மோனின் குமாரன், நகசோனின் குமாரன், 33அம்மினதாபின் குமாரன், அத்மினின் குமாரன், அர்னியின் குமாரன், எஸ்ரோனின் குமாரன், பாரேசின் குமாரன், யூதாவின் குமாரன், 34யாக்கோபின் குமாரன், ஈசாக்கின் குமாரன், ஆபிரகாமின் குமாரன், தேராகின் குமாரன், நாகோரின் குமாரன், 35செரூக்கின் குமாரன், ரெகூவின் குமாரன், பேலேக்கின் குமாரன், ஏபேரின் குமாரன், சாலாவின் குமாரன், 36காயினானின் குமாரன், அர்பகசாத்தின் குமாரன், சேமின் குமாரன், நோவாவின் குமாரன், லாமேக்கின் குமாரன், 37மெத்தூசலாவின் குமாரன், ஏனோக்கின் குமாரன், யாரேதின் குமாரன், மகலலெயேலின் குமாரன், காயினானின் குமாரன், 38ஏனோசின் குமாரன், சேத்தின் குமாரன், ஆதாமின் குமாரன், எங்கள் பிதாவின் குமாரன்.