வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

லூக்கா 23

புத்தகம்

பிலாத்துவுக்கும் ஏரோதுவுக்கும் முன்பாக

அதிகாரம் 23.

பின்பு அந்தச் சபையார் எல்லாரும் எழுந்து, அவரைப் பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். அவர்கள் அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கி: “இந்த மனுஷன் நமது ஜாதியைக் கெடுத்து, இராயனுக்கு வரிகொடுக்க வேண்டாமென்றும், தன்னை ராஜாவாகிய கிறிஸ்து என்றும் சொல்லுகிறதை நாங்கள் கண்டோம்” என்றார்கள்.

பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக, “நீர் சொல்லுகிறபடிதான்” என்றார்.

அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி, “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணேன்” என்றான்.

அதற்கு அவர்கள் உறுதியாய்: “இவன் கலிலேயாதுவங்கி இவ்விடமளவும் யூதேயா தேசமெங்கும் போதகம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான்” என்றார்கள்.

பிலாத்து கலிலேயாவின் பேரைக் கேட்டபோது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்தான். அவன் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவனென்று அறிந்து, அந்நாட்களில் எருசலேமில் இருந்த ஏரோதினிடத்திற்கு அவரை அனுப்பினான்.

ஏரோது இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான்; ஏனெனில் அவரைக்குறித்துக் கேள்விப்பட்டிருந்ததினால், அவரைக் காணவேண்டுமென்று வெகுநாளாய் ஆசைப்பட்டிருந்தான்; அவர் ஒரு அற்புதத்தைச் செய்யக் காணலாமென்று நம்பியிருந்தான். அவன் அவரிடத்தில் அநேக காரியங்களைக் கேட்டான்; ஆனாலும் இயேசு அவனுக்கு மறுஉத்தரவு ஒன்றும் சொல்லவில்லை. பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் அருகே நின்று, அவர்மேல் உக்கிரமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஏரோதும் அவனுடைய போர்ச்சேவகரும் அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, திரும்ப அவரைப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினார்கள். அந்த நாளிலே பிலாத்துவும் ஏரோதும் ஒருவருக்கொருவர் சிநேகிதரானார்கள்; அதற்குமுன் அவர்கள் பகைவராயிருந்தார்கள்.

பின்பு பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: “ஜனங்களைக் கலகப்படுத்துகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; இதோ, நான் உங்களுக்கு முன்பாக இவனை விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணேன். ஏரோதும் காணவில்லை; அவனிடத்திற்கு உங்களை அனுப்பினேனே. இதோ, மரணத்துக்கேற்றதாக இவன் ஒன்றும் செய்யவில்லை. ஆகையால் நான் இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன்” என்றான். a a v16 மிகப் பழைய கையெழுத்துப் பிரதிகளில் இங்கே 17-ம் வசனம் இல்லை; பிற்காலப் பிரதிகள்: “பண்டிகைதோறும் ஒரு காவற்பட்டவனை அவர்களுக்கு விடுதலையாக்கவேண்டிய கடமை அவனுக்கு இருந்தது” என்று சேர்க்கின்றன. அப்பொழுது அவர்களெல்லாரும் ஏகமாய்: “இவனை அகற்றும்; பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். இந்த பரபாஸ் நகரத்தில் நடந்த ஒரு கலகத்திற்காகவும் கொலைபாதகத்திற்காகவும் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாயிருந்தபடியால், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். ஆனாலும் அவர்கள்: “சிலுவையில் அறையும், அவரைச் சிலுவையில் அறையும்” என்று சத்தமிட்டுக்கொண்டேயிருந்தார்கள்.

அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: “ஏன்? இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கேற்ற ஒரு காரணமும் நான் இவனிடத்தில் காணேன்; ஆகையால் நான் இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன்” என்றான். அப்பொழுதும் அவர்கள் உரத்த சத்தமிட்டு, அவரைச் சிலுவையில் அறையும்படி வற்புறுத்திக்கேட்டார்கள்; அவர்களுடைய சத்தமும் பிரதான ஆசாரியர்களுடைய சத்தமும் மேற்கொண்டன. ஆகையால் அவர்களுடைய கேள்வியின்படி ஆகவேண்டுமென்று பிலாத்து தீர்ப்புசெய்தான். கலகத்திற்காகவும் கொலைபாதகத்திற்காகவும் காவலில் வைக்கப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடி விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்களுடைய இஷ்டத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.

குமாரன் சிலுவையில் அறையப்படுகிறார்

அவர்கள் அவரைக் கொண்டுபோகையில், நாட்டுப்புறத்திலிருந்து வந்த சிரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவனைப் பிடித்து, சிலுவையை இயேசுவுக்குப் பின்னாக அவன் சுமந்துவரும்படி அவன்மேல் வைத்தார்கள். மிகுந்த ஜனக்கூட்டம் அவருக்குப் பின்னே சென்றது; அவருக்காக மாரடித்துப் புலம்பின ஸ்திரீகளும் அவர்களில் இருந்தார்கள்.

இயேசு அவர்கள் பக்கமாய்த் திரும்பி: “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாதேயுங்கள்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். ஏனெனில், இதோ, ‘மலடிகளும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும், பாலூட்டாத முலைகளும் பாக்கியமுள்ளவைகள்’ என்று சொல்லும் நாட்கள் வருகின்றன. அப்பொழுது அவர்கள் மலைகளை நோக்கி: ‘எங்கள்மேல் விழுங்கள்’ என்றும், குன்றுகளை நோக்கி: ‘எங்களை மூடுங்கள்’ என்றும் சொல்லத் தொடங்குவார்கள். பச்சைமரத்திற்கு இப்படிச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்?” என்றார். b b v31 ஒரு பழமொழி: குற்றமில்லாதவனுக்கு (பச்சைமரம்) ரோமர் இப்படிச் செய்தால், நியாயத்தீர்ப்பு வரும்போது குற்றவாளிக்கு (பட்டமரம்) எத்தனை கொடிதாய் இருக்கும்.

குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடேகூட மரணத்துக்கு உட்படுத்தப்படும்படி கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபோது, அங்கே அவரையும், அந்தக் குற்றவாளிகளில் ஒருவனை அவருடைய வலதுபுறத்திலும் மற்றொருவனை அவருடைய இடதுபுறத்திலும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

அப்பொழுது இயேசு: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். c c v34 இந்த வார்த்தைகள் சில பழைய கையெழுத்துப் பிரதிகளில் இல்லை. அநேக நவீன வேதாகமங்களில் உள்ளபடி, இங்கே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதிகாரிகளும் அவரைப் பரியாசம்பண்ணி: “இவன் மற்றவர்களை இரட்சித்தானே; இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.

போர்ச்சேவகரும் அவரிடத்தில் வந்து, காடியை அவருக்குக் கொடுத்து, “நீ யூதருடைய ராஜாவானால், உன்னை நீயே இரட்சித்துக்கொள்” என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

“இவன் யூதருடைய ராஜா” என்று அவருக்கு மேலாக ஒரு மேல்விலாசமும் எழுதப்பட்டிருந்தது.

சிலுவையில் தூக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: “நீ கிறிஸ்து அல்லவா? உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்” என்று அவரை தூஷித்தான்.

மற்றவனோ அவனை நோக்கி: “நீ இந்த ஆக்கினைக்குள்ளாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாம் நியாயப்படியே தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ ஒரு தப்பிதமும் செய்யவில்லை” என்று அவனைக் கடிந்துகொண்டான். பின்பு அவன் இயேசுவை நோக்கி: “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும்” என்றான்.

அதற்கு இயேசு: “இன்று நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

குமாரன் தமது ஜீவனை விடுகிறார்

அப்பொழுது ஏறக்குறைய நண்பகல் மத்தியானமாயிருந்தது; பிற்பகல் மூன்று மணிவரைக்கும் தேசமெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. சூரியனுடைய ஒளி மங்கிப்போயிற்று; தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.

இயேசு உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

நடந்ததை நூற்றுக்கு அதிபதி கண்டபோது: “மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்” என்று சொல்லி, எங்கள் பிதாவை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் நடந்தவைகளைக் கண்டபோது, மாரடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்கள் எல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும், தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

குமாரன் கல்லறையில் வைக்கப்படுகிறார்

இதோ, யோசேப்பு என்னும் பேருடைய ஒருவன் இருந்தான்; அவன் ஆலோசனைச் சங்கத்தாரில் ஒருவனும், நல்லவனும், நீதிமானுமாயிருந்தான். அவன் அவர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதிருந்தான். அவன் யூதருடைய பட்டணமாகிய அரிமத்தியா ஊரானாயிருந்து, எங்கள் பிதாவின் ராஜ்யத்திற்குக் காத்திருந்தான். இவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாத, கன்மலையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையிலே அவரை வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாகிறதாயிருந்தது. கலிலேயாவிலிருந்து அவரோடேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும், அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள். பின்பு அவர்கள் திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.