ஆசாரியர்களும் வேதபாரகர்களும் அவரைக் கொலைசெய்யச் சதிசெய்தல்
22 1புளிப்பில்லாத அப்பப்பண்டிகை என்னும், பஸ்கா என்று அழைக்கப்படும் பண்டிகை சமீபமாயிருந்தது. 2பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் அவரைக் கொலைசெய்யும் வழியைத் தேடினார்கள்; ஏனெனில் அவர்கள் ஜனங்களுக்குப் பயந்தார்கள்.
3அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய, இஸ்காரியோத்து என்று அழைக்கப்பட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4அவன் போய், அவரை எப்படி அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கலாம் என்று பிரதான ஆசாரியர்களோடும் தேவாலயத்து அதிகாரிகளோடும் ஆலோசனை செய்தான். 5அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். 6அவனும் இசைந்து, ஜனக்கூட்டம் இல்லாதபோது அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
கடைசி பஸ்கா ஆயத்தம் செய்யப்படுதல்
7பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடவேண்டிய, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் நாள் வந்தது.
8இயேசு பேதுருவையும் யோவானையும் அனுப்பி, “நாம் புசிக்கும்படி பஸ்காவை நமக்கு ஆயத்தம்பண்ணப் போங்கள்” என்றார்.
9அவர்கள் அவரை நோக்கி, “நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ண விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
10அதற்கு அவர், “நீங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்கும்போது, ஒரு தண்ணீர்க்குடம் சுமந்துவரும் ஒரு மனிதன் உங்களைச் சந்திப்பான்; அவன் போகும் வீட்டிற்குள் அவனைப் பின்தொடர்ந்து போய்,
11வீட்டெஜமானை நோக்கி, ‘நான் என் சீஷர்களோடு பஸ்காவைப் புசிக்கத்தக்க விருந்தறை எங்கே என்று போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். 12அப்பொழுது அவன் மேல்வீட்டிலுள்ள, ஆயத்தமாக்கப்பட்ட ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே அதை ஆயத்தம்பண்ணுங்கள்” என்றார்.
13அவர்கள் போய், அவர் தங்களுக்குச் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
14வேளை வந்தபோது, அவர் பந்தியிருந்தார்; அப்போஸ்தலர்களும் அவரோடேகூட இருந்தார்கள்.
15அவர் அவர்களை நோக்கி, “நான் பாடுபடுவதற்கு முன்பாக இந்தப் பஸ்காவை உங்களோடேகூடப் புசிக்கும்படி மிகவும் ஆவலாயிருந்தேன். 16எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் இது நிறைவேறும்வரைக்கும் நான் இதைப் புசிப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 17பின்பு அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, “இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள். 18எங்கள் பிதாவின் ராஜ்யம் வரும்வரைக்கும் நான் இனித் திராட்சப்பழரசத்தைக் குடிப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
19பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். 20போஜனம்பண்ணின பின்பு அவர் அப்படியே பாத்திரத்தையும் எடுத்து, “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புது உடன்படிக்கையாயிருக்கிறது. 21ஆனாலும் இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னோடேகூடப் பந்தியில் இருக்கிறது. 22மனுஷகுமாரன் நியமிக்கப்பட்டபடியே போகிறார்; ஆனாலும் அவர் எவனால் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ!” என்றார்.
23அப்பொழுது இதைச் செய்யப்போகிறவன் தங்களில் யாரோ என்று அவர்கள் ஒருவரை ஒருவர் விசாரிக்கத் தொடங்கினார்கள்.
24அன்றியும் தங்களில் யார் பெரியவன் என்பதைக்குறித்து அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
25அவர் அவர்களை நோக்கி, “புறஜாதிகளின் ராஜாக்கள் அவர்களை ஆண்டுகொள்ளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள் உபகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். 26உங்களுக்குள்ளே அப்படியிருக்கவேண்டாம்; உங்களில் பெரியவன் இளையவனைப்போலவும், தலைவன் பணிவிடைசெய்கிறவனைப்போலவும் ஆகக்கடவன். 27பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, யார் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? ஆனாலும் நான் உங்கள் நடுவிலே பணிவிடைசெய்கிறவனைப்போல் இருக்கிறேன்.
28என் சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. 29என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துகிறேன்; 30அதினால் நீங்கள் என் ராஜ்யத்தில் என் பந்தியில் புசித்துக் குடிப்பதுமன்றி, சிங்காசனங்களில் உட்கார்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்” என்றார்.
31பின்னும் கர்த்தர், “சீமோனே, சீமோனே, இதோ, சாத்தான் உங்களைக் கோதுமையைப்போலப் புடைக்கும்படி உங்களைக் கேட்டுக்கொண்டான். 32ஆனாலும் உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு நான் உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ மனந்திரும்பினபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார்.
33அதற்கு அவன், “ஆண்டவரே, உம்மோடேகூடச் சிறைச்சாலைக்கும் மரணத்திற்கும் போகவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
34அதற்கு இயேசு, “பேதுருவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னை அறியேன் என்று மூன்றுதரம் மறுதலிக்கும்முன்பே இன்று சேவல் கூவாது” என்றார்.
35பின்பு அவர் அவர்களை நோக்கி, “நான் உங்களைப் பணப்பையும், பையும், பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, உங்களுக்கு ஏதாகிலும் குறைவாயிருந்ததா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவாயிருந்ததில்லை” என்றார்கள்.
36அவர் அவர்களை நோக்கி, “ஆனால் இப்பொழுது, பணப்பை உள்ளவன் அதை எடுத்துக்கொள்ளக்கடவன், பையையும் அப்படியே; பட்டயமில்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றை வாங்கக்கடவன். 37‘அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிற இந்த வேதவாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; என்னைக்குறித்து எழுதப்பட்டவைகள் நிறைவேறுகிறது” என்றார்.
38அதற்கு அவர்கள், “ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயங்கள் இருக்கிறது” என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, “போதும்” என்றார்.
குமாரன் பிதாவுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தல்
39பின்பு அவர் புறப்பட்டு, தம்முடைய வழக்கத்தின்படியே, ஒலிவமலைக்குப் போனார்; அவருடைய சீஷர்களும் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.
40அவ்விடத்தில் சேர்ந்தபோது, அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள்” என்றார்.
41பின்பு அவர் அவர்களை விட்டு ஒரு கல்லெறிதூரம் அப்பாற்போய், முழங்கால்படியிட்டு,
42“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து அகற்றும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினார்.
43அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் அவருக்குத் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். a a v43 43-44 வசனங்கள் சில பூர்வ பிரதிகளில் இல்லை. அநேக நவீன வேதாகமங்களில் உள்ளபடியே அவை இங்கே அச்சிடப்பட்டுள்ளன. 44அவர் மிகவும் வேதனையடைந்து, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்; அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளைப்போல் தரையிலே விழுந்தது.
45அவர் ஜெபம்பண்ணி முடித்து எழுந்திருந்து, சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினால் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு,
46அவர்களை நோக்கி, “நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” என்றார்.
முத்தத்தால் காட்டிக்கொடுக்கப்படுதல்
47அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு ஜனக்கூட்டம் வந்தது; பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவன் அவர்களுக்கு முன்னே நடந்துவந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரண்டையில் வந்தான்.
48இயேசு அவனை நோக்கி, “யூதாசே, முத்தத்தினாலா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய்?” என்றார்.
49நடக்கப்போகிறதை அவரோடிருந்தவர்கள் கண்டு, “ஆண்டவரே, பட்டயத்தினால் வெட்டலாமா?” என்றார்கள். 50அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வெட்டி, அவனுடைய வலது காதைத் துண்டித்துப்போட்டான்.
51அப்பொழுது இயேசு, “இதற்குமேல் வேண்டாம்” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைச் சொஸ்தமாக்கினார். 52பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும், தேவாலயத்து அதிகாரிகளையும், மூப்பர்களையும் நோக்கி, “ஒரு கள்ளனைப் பிடிக்க வருகிறதுபோல் பட்டயங்களோடும் தடிகளோடும் நீங்கள் வந்தீர்களா? 53நான் தினந்தோறும் உங்களோடேகூடத் தேவாலயத்தில் இருந்தபோது நீங்கள் என்மேல் கைபோடவில்லை; ஆனாலும் இது உங்களுடைய வேளையும், அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது” என்றார்.
பேதுரு இயேசுவை அறியேன் என்று மறுதலித்தல்
54அவர்கள் அவரைப் பிடித்து, அழைத்துக்கொண்டுபோய், பிரதான ஆசாரியனுடைய வீட்டிற்குள் கொண்டுவந்தார்கள்; பேதுரு தூரத்திலே பின்தொடர்ந்து போனான். 55அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பு மூட்டி, ஒன்றாய் உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். 56அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடேகூட இருந்தான்” என்றாள்.
57அதற்கு அவன், “ஸ்திரீயே, அவனை நான் அறியேன்” என்று மறுதலித்தான்.
58சற்றுநேரத்திற்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன்” என்றான். அதற்குப் பேதுரு, “மனுஷனே, நான் அல்ல” என்றான்.
59ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு வேறொருவன், “இவனும் அவனோடேகூட இருந்தது நிச்சயம், இவனும் கலிலேயன்தான்” என்று உறுதியாய்ச் சொன்னான்.
60அதற்குப் பேதுரு, “மனுஷனே, நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது” என்றான். அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே உடனே சேவல் கூவிற்று. 61அப்பொழுது கர்த்தர் திரும்பிப் பேதுருவை நோக்கிப்பார்த்தார். “இன்று சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று கர்த்தர் தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, 62வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
63இயேசுவைப் பிடித்துக்கொண்டிருந்த மனிதர்கள் அவரை அடித்து, அவரைப் பரியாசம்பண்ணினார்கள். 64அவர்கள் அவருடைய கண்களைக் கட்டி, அவரை அடித்து, “உன்னை அடித்தவன் யார்? தீர்க்கதரிசனம் சொல்” என்று அவரைக் கேட்டார்கள். 65வேறு அநேக காரியங்களையும் அவருக்கு விரோதமாய்ச் சொல்லி, அவரை நிந்தித்தார்கள்.
இயேசு ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிற்றல்
66பொழுதுவிடிந்தபோது, ஜனத்தின் மூப்பர்களும், பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் கூடிவந்து, அவரைத் தங்கள் ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்து,
67“நீ கிறிஸ்துவானால், அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். அதற்கு அவர், “நான் உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள்;
68நான் உங்களைக் கேட்டாலும் எனக்கு மறுஉத்தரவு சொல்லமாட்டீர்கள்.
69இப்போதுமுதல் மனுஷகுமாரன் எங்கள் பிதாவின் வல்லமையின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்” என்றார்.
70அப்பொழுது அவர்களெல்லாரும், “அப்படியானால் நீ தேவகுமாரனா?” என்றார்கள். அதற்கு அவர், “நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான்” என்றார்.
71அப்பொழுது அவர்கள், “இனி நமக்கு வேறே சாட்சி வேண்டியதென்ன? நாமே இவனுடைய வாயினாலே இதைக் கேட்டோமே” என்றார்கள்.