பிதா எழுபத்திரண்டு பேரை அனுப்புகிறார்
10 1இதற்குப் பின்பு, கர்த்தர் வேறே எழுபத்திரண்டு பேரை நியமித்து, தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும் இடத்திற்கும், அவர்களை இரண்டிரண்டு பேராகத் தமக்கு முன்னே அனுப்பினார்.
2அவர் அவர்களை நோக்கி: “அறுவடை மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுவடையின் பிதா தமது அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3போங்கள்! இதோ, ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். 4பணப்பையையாவது சாமான் பையையாவது பாதரட்சைகளையாவது எடுத்துக்கொண்டு போகாதேயுங்கள்; வழியிலே ஒருவரையும் வாழ்த்தவும் வேண்டாம். 5நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும், முதலாவது: ‘இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று சொல்லுங்கள். 6சமாதானத்தின் மனிதர் அங்கே இருந்தால், உங்கள் சமாதானம் அவர்மேல் தங்கும்; இல்லாவிட்டால், அது உங்களிடமே திரும்பிவரும். 7அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் கொடுக்கிறதைப் புசித்துக் குடியுங்கள்; ஏனெனில் வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டைவிட்டு வீடு மாறாதிருங்கள். 8நீங்கள் எந்தப் பட்டணத்தில் பிரவேசிக்கையில், அங்குள்ளவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டால், உங்கள்முன் வைக்கப்படுகிறதைப் புசியுங்கள். 9அங்குள்ள வியாதிக்காரரைச் சொஸ்தமாக்கி, ‘எங்கள் பிதாவின் ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாயிற்று’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10ஆனால் நீங்கள் எந்தப் பட்டணத்தில் பிரவேசிக்கையில், அங்குள்ளவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதின் வீதிகளுக்குப் புறப்பட்டுப்போய்: 11‘உங்கள் பட்டணத்தின் தூசி எங்கள் கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறதையும் உங்களுக்கு விரோதமாய் உதறிப்போடுகிறோம்; ஆயினும் எங்கள் பிதாவின் ராஜ்யம் சமீபமாயிற்று என்பதை அறிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள். 12அந்த நாளிலே அந்தப் பட்டணத்திற்குக் கிடைக்கும் தண்டனையைவிட, சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனை இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13“ஐயோ, கோராசினே! ஐயோ, பெத்சாயிதாவே! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவைகள் இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து அநேக நாட்களுக்குமுன்பே மனந்திரும்பியிருக்கும். 14ஆயினும் நியாயத்தீர்ப்பில் உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட, தீருவுக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனை இலகுவாயிருக்கும். 15கப்பர்நகூமே, நீ வானபரியந்தம் உயர்த்தப்படுவாயோ? நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். 16உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைத் தள்ளுகிறவன் என்னைத் தள்ளுகிறான்; என்னைத் தள்ளுகிறவன் என்னை அனுப்பினவரைத் தள்ளுகிறான்” என்றார்.
17அந்த எழுபத்திரண்டு பேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: “ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.
18அவர் அவர்களை நோக்கி: “சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையின்மேலும் அதிகாரம் செலுத்தவும் நான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களுக்குச் சேதம் செய்யாது. 20ஆயினும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் வானத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்றார்.
21அந்நேரத்திலே இயேசு பரிசுத்த ஆவியில் களிகூர்ந்து: “பிதாவே, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மைத் துதிக்கிறேன். ஆம், பிதாவே, இப்படிச் செய்வது உமது சித்தமாயிருந்தது” என்றார்.
22“என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. குமாரன் இன்னாரென்று பிதாவேயன்றி வேறொருவரும் அறியார்; பிதா இன்னாரென்று குமாரனும், குமாரன் யாருக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுமேயன்றி வேறொருவரும் அறியார்” என்றார்.
23பின்பு அவர் சீஷர்களிடமாய்த் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: “நீங்கள் காண்கிறவைகளைக் காண்கிற கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
நல்ல சமாரியனைப் பற்றிய உவமை
25அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து, அவரைச் சோதிக்கும்படி: “போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
26அதற்கு அவர்: “நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ எப்படி வாசிக்கிறாய்?” என்றார்.
27அவன் பிரதியுத்தரமாக: “உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழு மனதோடும் உன் பிதாவை நேசிப்பாயாக; உன்னிடத்தில் நேசிக்கிறதுபோல உன் அயலகத்தானையும் நேசிப்பாயாக” என்றான்.
28அவர் அவனை நோக்கி: “சரியாய்ப் பிரதியுத்தரம் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்” என்றார்.
29அவனோ தன்னை நீதிமானாக்கிக்கொள்ள விரும்பி, இயேசுவை நோக்கி: “என் அயலகத்தான் யார்?” என்று கேட்டான்.
30இயேசு பிரதியுத்தரமாக: “ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்கு இறங்கிப்போகையில் கள்ளர் கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனை அடித்து, குற்றுயிராக விட்டுப்போனார்கள். 31அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே இறங்கிப்போனான்; அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போய்விட்டான். 32அப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போய்விட்டான். 33ஆனால் அந்த வழியே பிரயாணம் பண்ணின ஒரு சமாரியன் அவனைக் கண்டு, அவன்மேல் மனதுருகி இரக்கங்கொண்டான். 34அவனிடத்தில் வந்து, எண்ணெயையும் திராட்சரசத்தையும் வார்த்து, அவனுடைய காயங்களைக் கட்டி, தன் சொந்த மிருகத்தின்மேல் அவனை ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35மறுநாளில் அவன் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தலைவனிடத்தில் கொடுத்து: ‘இவனைப் பராமரி; இதற்கு அதிகமாய் நீ ஏதாகிலும் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குச் செலுத்துவேன்’ என்றான். 36கள்ளர் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூவரில் எவன் அயலகத்தானாய் இருந்தான் என்று நினைக்கிறாய்?” என்றார்.
37அதற்கு அவன்: “அவன்மேல் இரக்கஞ்செய்தவனே” என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.
மார்த்தாளும் மரியாளும்
38பின்பு அவர்கள் பிரயாணம் பண்ணுகையில், இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தார்; அங்கே மார்த்தாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். 39அவளுக்கு மரியாள் என்னும் ஒரு சகோதரி இருந்தாள்; அவள் கர்த்தருடைய பாதத்தண்டையிலே உட்கார்ந்து, அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40மார்த்தாளோ பற்பல பணிவிடைகளைக்குறித்து மிகவும் கவலைப்பட்டு, அவரிடத்தில் வந்து: “ஆண்டவரே, நான் தனியே பணிவிடை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவைத்தது உமக்குக் கவலையில்லையா? அவள் எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள்.
41கர்த்தர் அவளுக்குப் பிரதியுத்தரமாக: “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42ஆனால் தேவையானது ஒன்றே. மரியாள் அந்த நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்; அது அவளிடத்திலிருந்து எடுக்கப்படுவதில்லை” என்றார்.