எங்கள் பிதா முந்நூறு பேரைத் தெரிந்துகொள்ளுதல்
7 1எருபாகால் (கிதியோன்) என்பவனும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் அதிகாலையில் எழுந்து, ஆரோதின் ஊற்றண்டையிலே பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவர்களுக்கு வடக்கே, பள்ளத்தாக்கிலுள்ள மோரே மேட்டண்டையில் இருந்தது.
2எங்கள் பிதா கிதியோனை நோக்கி: “உன்னோடிருக்கிற ஜனங்கள் மிகவும் அதிகம்; நான் மீதியானியரை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், ‘என் கை என்னை இரட்சித்தது’ என்று இஸ்ரவேலர் எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுவார்கள். 3ஆகையால் நீ ஜனங்களின் காதுகள் கேட்க: ‘பயந்து நடுங்குகிறவன் எவனும் திரும்பி, கீலேயாத் மலையைவிட்டுப் போய்விடக்கடவன்’ என்று கூறு” என்றார். அப்பொழுது ஜனங்களில் இருபத்தீராயிரம்பேர் திரும்பிப்போனார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.
4எங்கள் பிதா கிதியோனை நோக்கி: “ஜனங்கள் இன்னும் அதிகம்; அவர்களைத் தண்ணீரண்டைக்குக் கூட்டிக்கொண்டுவா; அங்கே நான் உனக்காக அவர்களைப் பிரித்தெடுப்பேன்; ‘இவன் உன்னோடே போகட்டும்’ என்று நான் சொல்கிறவன் உன்னோடே போவான்; ‘இவன் உன்னோடே போகவேண்டாம்’ என்று நான் சொல்கிறவன் எவனும் போகமாட்டான்” என்றார். 5அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்குக் கூட்டிக்கொண்டுவந்தான்; அப்பொழுது எங்கள் பிதா கிதியோனை நோக்கி: “நாய் நக்குகிறதுபோல தன் நாவினால் தண்ணீரை நக்குகிறவன் எவனையும் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றுகிறவன் எவனையும் தனியேயும் நிறுத்து” என்றார்.
6தங்கள் கையால் தண்ணீரை வாய்க்கு எடுத்து நக்கினவர்கள் முந்நூறுபேர்; மற்ற ஜனங்கள் யாவரும் தண்ணீர் குடிக்க முழங்கால் ஊன்றினார்கள்.
7அப்பொழுது எங்கள் பிதா கிதியோனை நோக்கி: “நக்கின அந்த முந்நூறுபேரைக்கொண்டு நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; மற்ற ஜனங்கள் யாவரும் அவரவர் தம் இடத்திற்குப் போகக்கடவர்கள்” என்றார்.
8ஜனங்கள் வழிக்கு ஆகாரத்தையும் எக்காளங்களையும் கையில் எடுத்துக்கொண்டார்கள்; கிதியோன் இஸ்ரவேலரில் மற்ற எல்லாரையும் அவரவர் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரை மாத்திரம் வைத்துக்கொண்டான். மீதியானியரின் பாளயம் அவனுக்குக் கீழே பள்ளத்தாக்கிலே இருந்தது.
9அன்று இராத்திரியிலே எங்கள் பிதா அவனை நோக்கி: “எழுந்திரு, பாளயத்தண்டைக்கு இறங்கிப்போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். 10இறங்கிப்போகப் பயப்படுவாயானால், நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் பாளயத்தண்டைக்கு இறங்கிப்போய்,
11அவர்கள் பேசிக்கொள்வதைக் கேள்; பின்பு உன் கைகள் பலப்படும், நீ பாளயத்திற்குள் இறங்கிப்போவாய்” என்றார். அப்பொழுது அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் பாளயத்திலுள்ள ஆயுததாரிகள் நிற்கும் எல்லைவரைக்கும் இறங்கிப்போனார்கள்.
12மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திய ஜனங்கள் யாவரும் வெட்டுக்கிளிகளைப்போலப் பள்ளத்தாக்கிலே கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களோ கடற்கரை மணலைப்போல எண்ணிறந்ததாயிருந்தது. 13கிதியோன் அங்கே வந்தபோது, ஒருவன் தன் தோழனுக்கு ஒரு சொப்பனத்தை விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தான். அவன்: “இதோ, நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; வாற்கோதுமை அப்பமான ஒரு உருண்டை மீதியானியரின் பாளயத்திற்குள் புரண்டுவந்து, கூடாரத்தில் மோதி, அதை விழத்தள்ளி, தலைகீழாகக் கவிழ்த்துப்போட்டது; அப்படியே கூடாரம் விழுந்துகிடந்தது” என்றான்.
14அதற்கு அவன் தோழன்: “இது இஸ்ரவேலனாகிய யோவாசின் குமாரன் கிதியோனுடைய பட்டயமேயல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும் இந்தப் பாளயம் முழுவதையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்” என்று மறுமொழி சொன்னான்.
15கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் கேட்டபோது, தொழுதுகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: “எழுந்திருங்கள், எங்கள் பிதா மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்” என்றான். 16அவன் அந்த முந்நூறுபேரை மூன்று படைகளாகப் பிரித்து, ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் ஒரு தீவட்டியையும் கொடுத்து,
17அவர்களை நோக்கி: “என்னைப் பாருங்கள்; நான் செய்கிறபடியே செய்யுங்கள்; இதோ, நான் பாளயத்தின் எல்லையண்டைக்குப் போய், நான் செய்கிறபடியே செய்யுங்கள்.
18நானும் என்னோடிருக்கிற யாவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றிலும் எக்காளங்களை ஊதி, ‘எங்கள் பிதாவுக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூப்பிடுங்கள்” என்றான்.
19நடுஜாமம் தொடங்கின வேளையிலே, காவலாட்கள் மாற்றப்பட்ட உடனே, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் பாளயத்தின் எல்லையண்டைக்கு வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கைகளிலிருந்த பானைகளை உடைத்தார்கள். 20அப்படியே மூன்று படைகளும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, இடதுகைகளில் தீவட்டிகளையும், வலதுகைகளில் ஊதுகிறதற்கு எக்காளங்களையும் பிடித்து: “கர்த்தருக்கும், எங்கள் பிதாவுக்காகவும் கிதியோனுக்காகவும் ஒரு பட்டயம்!” என்று கூப்பிட்டார்கள். 21பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தம் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது சேனையனைத்தும் ஓடி, கூக்குரலிட்டுத் தப்பியோடிற்று. 22அந்த முந்நூறு எக்காளங்கள் ஊதப்பட்டபோது, எங்கள் பிதா பாளயம் முழுவதிலும் ஒவ்வொருவன் பட்டயத்தை அவனவன் தோழனுக்கு விரோதமாகத் திருப்பினார். சேனை பெத்சித்தாமட்டும், சேரோத்தை நோக்கியும், தபாத்தண்டையிலுள்ள ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று. 23அப்பொழுது நப்தலியிலும், ஆசேரிலும், மனாசே அனைத்திலுமிருந்த இஸ்ரவேலர் கூப்பிடப்பட்டு, மீதியானியரைப் பின்தொடர்ந்தார்கள். 24கிதியோன் எப்பிராயீமின் மலைநாடு எங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: “மீதியானியருக்கு விரோதமாய் இறங்கிவந்து, பெத்பாராமட்டும் யோர்தான்மட்டுமுள்ள தண்ணீர்த்துறைகளை அவர்களுக்கு முன்னதாகப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லச்செய்தான். அப்படியே எப்பிராயீமின் மனுஷர் யாவரும் கூடிவந்து, பெத்பாராமட்டும் யோர்தான்மட்டுமுள்ள தண்ணீர்த்துறைகளைப் பிடித்துக்கொண்டார்கள். 25அவர்கள் மீதியானியரின் இரண்டு பிரபுக்களாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னும் கன்மலையிலும், சேபை சேப் என்னும் ஆலையிலும் கொன்று, மீதியானியரைப் பின்தொடர்ந்து, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு அப்பாலிருந்த கிதியோனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.