சிம்சோன் காசாவின் நகர வாசல்களைப் பெயர்த்துச் செல்கிறான்
16 1சிம்சோன் காசாவுக்குப் போனான்; அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளோடே சேர்ந்தான். 2“சிம்சோன் இங்கே வந்திருக்கிறான்” என்று காசா ஊர் மக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டு, இராமுழுவதும் நகர வாசலில் அவனுக்காகக் காத்திருந்தார்கள். “விடியற்காலத்தில் அவனைக் கொன்றுபோடுவோம்” என்று சொல்லி, இராமுழுவதும் அமைதியாய் இருந்தார்கள். 3சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்தான். நடுஇரவில் அவன் எழுந்து, நகர வாசலின் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்தெடுத்து, தன் தோள்களின்மேல் வைத்து, எப்ரோனுக்கு எதிரே இருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டு போனான்.
4இதற்குப்பின்பு, அவன் சோரேக் பள்ளத்தாக்கிலிருந்த தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு பெண்ணை நேசித்தான். 5பெலிஸ்தரின் அதிபதிகள் அவளிடத்தில் வந்து: “அவனை நயம்பேசி, அவனுடைய மிகுந்த பலம் எதில் இருக்கிறதென்றும், அவனை மேற்கொண்டு கட்டி அடக்குவது எப்படியென்றும் அறிந்துகொள்; நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு கொடுப்போம்” என்றார்கள்.
6அப்பொழுது தெலீலாள் சிம்சோனை நோக்கி: “உன்னுடைய மிகுந்த பலம் எதில் இருக்கிறது, உன்னை எதினால் கட்டி அடக்கலாம் என்று எனக்குச் சொல்” என்றாள்.
7அதற்குச் சிம்சோன்: “இன்னும் உலராத ஏழு பச்சை நாண்களால் என்னைக் கட்டினால், நான் பலவீனப்பட்டு மற்ற மனிதரைப் போலாவேன்” என்றான்.
8அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் இன்னும் உலராத ஏழு பச்சை நாண்களை அவளிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். 9உள் அறையிலே அவளுக்குப் பதிவிருந்து காத்திருந்த மனிதர் இருந்தார்கள். அவள் அவனை நோக்கி: “சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். ஆனால் சணல் நூல் நெருப்பைப் பட்டவுடன் அறுந்துபோகிறதுபோல, அவன் அந்த நாண்களை அறுத்துப்போட்டான். அப்படியே அவனுடைய பலத்தின் இரகசியம் வெளிப்படவில்லை.
10பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி: “நீ என்னைப் பரியாசம்பண்ணி, என்னிடத்தில் பொய் சொன்னாய்; இப்பொழுது உன்னை எதினால் கட்டலாம் என்று எனக்குச் சொல்” என்றாள்.
11அதற்கு அவன்: “இதுவரைக்கும் உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை இறுக்கமாய்க் கட்டினால், நான் பலவீனப்பட்டு மற்ற மனிதரைப் போலாவேன்” என்றான்.
12அப்பொழுது தெலீலாள் புதிய கயிறுகளை எடுத்து அவைகளால் அவனைக் கட்டி: “சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். உள் அறையிலே மனிதர் பதிவிருந்தார்கள். ஆனால் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை நூலைப்போல அறுத்துப்போட்டான்.
13பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி: “இதுவரைக்கும் நீ என்னைப் பரியாசம்பண்ணி, என்னிடத்தில் பொய் சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று எனக்குச் சொல்” என்றாள். அதற்கு அவன்: “என் தலையின் ஏழு ஜடைகளை நெசவுத் தறியின் பாவோடே பின்னி, அதை ஆணியால் இறுக்கினால், நான் மற்ற மனிதரைப்போல் பலவீனப்படுவேன்” என்றான்.
14அவள் அதை ஆணியால் இறுக்கிவைத்து: “சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். ஆனால் அவன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்து, ஆணியையும், தறியையும், பாவையும் பெயர்த்துப்போட்டான்.
15அப்பொழுது அவள்: “உன் இருதயம் என்னோடே இராதிருக்க, ‘உன்னை நேசிக்கிறேன்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? இந்த மூன்றுதரமும் நீ என்னைப் பரியாசம்பண்ணி, உன்னுடைய மிகுந்த பலம் எதில் இருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே” என்றாள்.
16இப்படி அவள் நாள்தோறும் தன் வார்த்தைகளால் அவனை நெருக்கி, அவனைத் தொந்தரவுசெய்துகொண்டே இருந்ததால், அவனுடைய ஆத்துமா சாவுக்கேதுவாய் வருந்தினது. 17ஆகையால் அவன் தன் இருதயத்தை முழுவதும் அவளுக்கு வெளிப்படுத்தி: “என் தலையின்மேல் சவரகன் கத்தி படவில்லை; ஏனெனில் நான் என் தாயின் கர்ப்பத்திலிருந்தே எங்கள் பிதாவின் நசரேயனாய் இருக்கிறேன்; நான் சவரம்பண்ணப்பட்டால், என் பலம் என்னைவிட்டு நீங்கிப்போகும்; நான் பலவீனப்பட்டு மற்ற மனிதரைப் போலாவேன்” என்றான்.
18அவன் தன் இருதயத்தை முழுவதும் தனக்கு வெளிப்படுத்தினான் என்று தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: “இந்த ஒருதரம் வாருங்கள்; அவன் தன் இருதயத்தை முழுவதும் எனக்கு வெளிப்படுத்தினான்” என்று சொல்லச்சொன்னாள். அப்படியே பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அவளிடத்தில் வந்தார்கள். 19அவள் அவனைத் தன் மடியிலே தூங்கவைத்து, ஒரு மனிதனை அழைத்து, அவன் தலையின் ஏழு ஜடைகளையும் சவரம்பண்ணுவித்தாள். அவள் அவனை அடக்கத்தொடங்கினாள்; அவனுடைய பலம் அவனைவிட்டு நீங்கிப்போயிற்று. 20அப்பொழுது அவள்: “சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். அவன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்து: “முன்போலப் போய், உதறிக்கொண்டு விடுதலையாவேன்” என்று நினைத்தான். ஆனால் எங்கள் பிதா தன்னைவிட்டு விலகியிருக்கிறார் என்று அவன் அறியாதிருந்தான்.
21பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், வெண்கல விலங்குகளால் அவனைக் கட்டினார்கள்; அவன் சிறைச்சாலையிலே தானியம் அரைத்துக்கொண்டிருந்தான். 22ஆனால் அவன் தலைமயிர் சவரம்பண்ணப்பட்டபின்பு மறுபடியும் வளரத்தொடங்கிற்று.
எங்கள் பிதா சிம்சோனை மறுபடியும் பலப்படுத்துகிறார்
23பெலிஸ்தரின் அதிபதிகள் தங்கள் தேவனாகிய தாகோனுக்குப் பெரிய பலி செலுத்தவும் களிகூரவும் கூடிவந்து: “நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம் கையில் ஒப்புக்கொடுத்தார்” என்றார்கள். 24மக்கள் அவனைக் கண்டபோது, தங்கள் தேவனைத் துதித்து: “நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நம் கையில் ஒப்புக்கொடுத்தார்” என்றார்கள்.
25அவர்கள் இருதயம் மகிழ்ச்சியாய் இருந்தபோது: “நமக்கு விளையாட்டுக் காட்டச் சிம்சோனை அழைத்துவாருங்கள்” என்றார்கள். அப்படியே சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக விளையாட்டுக் காட்டினான். அவர்கள் அவனைத் தூண்களின் நடுவே நிறுத்தினார்கள். 26அப்பொழுது சிம்சோன் தன் கையைப் பிடித்திருந்த சிறுவனை நோக்கி: “இந்த வீட்டைத் தாங்கிநிற்கும் தூண்களை நான் தடவிப்பார்க்கும்படி விடு; அவைகளின்மேல் நான் சாய்ந்துகொள்வேன்” என்றான். 27அந்த வீடு ஆண்களாலும் பெண்களாலும் நிறைந்திருந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் எல்லாரும் அங்கே இருந்தார்கள்; சிம்சோன் விளையாட்டுக் காட்டுகிறதை மேல்மாடியிலிருந்து ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 28அப்பொழுது சிம்சோன் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டு: “ஆண்டவராகிய பிதாவே, தயவுசெய்து என்னை நினைத்தருளும்; பரமபிதாவே, என் இரண்டு கண்களுக்காகவும் பெலிஸ்தரிடத்தில் ஒரே அடியாய் நான் நீதி சரிக்கட்டும்படி, இந்த ஒருதரம்மாத்திரம் என்னைப் பலப்படுத்தும்” என்றான். 29பின்பு சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கிநின்ற நடுத்தூண்கள் இரண்டையும் பிடித்து, தன் வலதுகையை ஒன்றின்மேலும், தன் இடதுகையை மற்றொன்றின்மேலும் ஊன்றி, அவைகளின்மேல் சாய்ந்துகொண்டான். 30“பெலிஸ்தரோடுகூட நான் சாகக்கடவேன்” என்று சிம்சோன் சொல்லி, தன் பலம் முழுவதும் கொண்டு தள்ளினான்; அப்பொழுது அந்த வீடு அதின் அதிபதிகளின்மேலும், அதிலிருந்த எல்லா மக்கள்மேலும் விழுந்தது. இப்படி அவன் தன் ஜீவகாலத்திலே கொன்றவர்களைப்பார்க்கிலும் தன் மரணத்திலே அதிகம்பேரைக் கொன்றான்.
31அப்பொழுது அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் இறங்கிவந்து, அவனை எடுத்து, கொண்டுபோய், சோரயேக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.