மீதியான தேசத்தைப் பிதா பங்கிடுகிறார்
18 1பின்பு இஸ்ரவேல் சபையார் எல்லாரும் சீலோவிலே கூடிவந்து, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினார்கள்; தேசம் அவர்களுக்கு முன்பாக அடக்கப்பட்டிருந்தது. 2இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பெற்றுக்கொள்ளாத ஏழு கோத்திரத்தார் மீதியாயிருந்தார்கள். 3அப்பொழுது யோசுவா இஸ்ரவேலரை நோக்கி: “உங்கள் பிதாக்களின் தேவனாகிய எங்கள் பிதா உங்களுக்குக் கொடுத்திருக்கிற தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப் புகுவதற்கு எதுவரைக்கும் தாமதம் செய்வீர்கள்? 4ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மூன்று பேரை ஏற்படுத்துங்கள்; நான் அவர்களை அனுப்புவேன்; அவர்கள் புறப்பட்டுத் தேசத்தை உருவப்போய், தங்கள் சுதந்தரத்திற்கேற்ப அதை வரைந்தெழுதி, என்னிடத்திற்குத் திரும்பிவரக்கடவர்கள். 5அவர்கள் அதை ஏழு பங்குகளாகப் பங்கிடக்கடவர்கள்: யூதா தன்னுடைய எல்லைக்குள் தெற்கே இருக்கவும், யோசேப்பின் வம்சத்தார் தங்கள் எல்லைக்குள் வடக்கே இருக்கவும் கடவர்கள். 6நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாக வரைந்தெழுதி, என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் இங்கே எங்கள் பிதாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். 7லேவியருக்கோ உங்கள் நடுவே பங்கு இல்லை; எங்கள் பிதாவின் ஆசாரிய ஊழியமே அவர்களுடைய சுதந்தரம். காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் யோர்தானுக்குக் கிழக்கே தங்கள் சுதந்தரத்தை ஏற்கெனவே பெற்றுக்கொண்டார்கள்; அதை எங்கள் பிதாவின் ஊழியக்காரனாகிய மோசே அவர்களுக்குக் கொடுத்தான்.”
8அந்த மனுஷர் புறப்படுகையில், யோசுவா தேசத்தை வரைந்தெழுதப் போகிறவர்களுக்குக் கட்டளையிட்டு: “நீங்கள் போய், தேசத்தை உருவப்போய், அதை வரைந்தெழுதி, என்னிடத்திற்குத் திரும்பிவாருங்கள்; அப்பொழுது நான் இங்கே சீலோவிலே எங்கள் பிதாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்” என்றான்.
9அப்படியே அந்த மனுஷர் போய், தேசத்தையெல்லாம் உருவப்போய், அதைப் பட்டணவாரியாக ஏழு பங்குகளாக ஒரு புத்தகச்சுருளில் வரைந்தெழுதி, சீலோவிலுள்ள பாளயத்தில் யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். 10அப்பொழுது யோசுவா சீலோவிலே எங்கள் பிதாவுக்கு முன்பாக அவர்களுக்காகச் சீட்டுப்போட்டான்; அங்கே யோசுவா இஸ்ரவேல் புத்திரருக்கு அவரவர்களுடைய பங்குக்கேற்றபடி தேசத்தைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
பென்யமீனுக்குப் பிதா அளித்த சுதந்தரம்
11பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி சீட்டு விழுந்தது; அவர்களுடைய சீட்டின் எல்லை யூதா புத்திரருக்கும் யோசேப்பின் புத்திரருக்கும் நடுவாகச் சென்றது. 12அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தானிலே தொடங்கி, எரிகோவுக்கு வடக்கேயுள்ள மேட்டுநிலத்திற்கு ஏறிப்போய், மேற்கே மலைகள் வழியாய் ஏறி, பெத்தாவேனின் வனாந்தரத்திலே முடிந்தது. 13அங்கிருந்து அந்த எல்லை தெற்கே லூஸுக்குச் சென்று, பெத்தேலாகிய லூஸின் மருங்கிற்கு நேராகப் போய், அதற்குப் பின் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயுள்ள மலையின்மேலிருக்கிற அதரோத்தாராருக்கு இறங்கிற்று. 14பின்பு அந்த எல்லை வளைந்து, மேற்குப் புறத்திலே தெற்காகத் திரும்பி, பெத்தொரோனுக்கு எதிரேயுள்ள மலையிலிருந்து தெற்காகப் போய், யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் என்னும் கீரியாத்பாகாலிலே முடிந்தது; இது மேற்குப் புறமாம். 15தெற்குப் புறமோ, கீரியாத்யெயாரீமின் கடைசியிலே தொடங்கிற்று; அந்த எல்லை மேற்காக நெப்தோவாவின் நீரூற்றுவரைக்கும் சென்றது. 16பின்பு அந்த எல்லை பென்இன்னோம் பள்ளத்தாக்குக்கு எதிரேயும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடமுனையிலும் இருக்கிற மலையின் கடையிலே இறங்கி, அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கு வழியாய் எபூசியருக்குத் தெற்கேயுள்ள மருங்குக்கு இறங்கி, என்ரோகேல்வரைக்கும் சென்றது. 17பின்பு வடக்கே திரும்பி, என்சேமேசுக்குப் போய், அதுமீமின் மேடுக்கு எதிரேயுள்ள கெலிலோத்துக்குச் சென்று, ரூபனின் குமாரனாகிய போகனுடைய கல்லுக்கு இறங்கி, 18வடக்கே அராபாவுக்கு எதிரேயுள்ள மருங்குக்குக் கடந்துபோய், அராபாவுக்கு இறங்கிற்று. 19பின்பு அந்த எல்லை பெத்எக்லாவின் வடக்கு மருங்குக்குச் சென்று, யோர்தானின் தென்முனையில் இருக்கிற உப்புக்கடலின் வடகடலவாய்ப்பகுதியிலே முடிந்தது; இது தெற்கு எல்லையாம். 20கிழக்கே யோர்தான் அதற்கு எல்லையாயிருந்தது. இது பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி சுற்றிலுமுள்ள எல்லைகளோடே கிடைத்த சுதந்தரமாம். 21பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள் யாதெனில்: எரிகோ, பெத்எக்லா, ஏமேக்கேசிஸ், 22பெத்அராபா, செமராயீம், பெத்தேல், 23ஆவீம், பாரா, ஒப்ரா, 24கெப்பார்அம்மோனாய், ஒப்னீ, கேபா என்பவைகளே; இவைகள் தங்கள் கிராமங்களோடே பன்னிரண்டு பட்டணங்கள். 25கிபியோன், ராமா, பேரோத், 26மிஸ்பே, கெப்பீரா, மோத்சா, 27ரேக்கேம், இர்பியேல், தரலா, 28சேலா, எலேப், எருசலேமாகிய எபூசியரின் பட்டணம், கிபியா, கீரியாத் என்பவைகளே; இவைகள் தங்கள் கிராமங்களோடே பதினான்கு பட்டணங்கள். இது பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரமாம்.