பிதாவானவர் இஸ்ரவேலுக்கு அதன் சுதந்தரத்தைக் கொடுக்கிறார்
14 1ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிதாக்களுடைய தலைவர்களும் கானான் தேசத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே. 2மோசேயின் மூலமாய் எங்கள் பிதா கட்டளையிட்டபடியே, ஒன்பது கோத்திரங்களுக்கும் பாதிக் கோத்திரத்திற்கும் சீட்டுப்போட்டு அவர்கள் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். 3மோசே இரண்டு கோத்திரங்களுக்கும் பாதிக் கோத்திரத்திற்கும் யோர்தானுக்கு அப்புறத்தில் அவர்களுடைய சுதந்தரத்தைக் கொடுத்திருந்தான்; ஆனாலும் லேவியருக்கு அவர்களுக்குள்ளே ஒரு சுதந்தரத்தையும் கொடுக்கவில்லை. 4யோசேப்பின் குமாரர் மனாசே, எப்பிராயீம் என்னும் இரண்டு கோத்திரங்களாயிருந்தார்கள். லேவியருக்குத் தேசத்தில் ஒரு பங்கையும் கொடாமல், அவர்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகளுக்காகவும் ஆஸ்திக்காகவும் மேய்ச்சல் நிலங்களையும் மாத்திரம் கொடுத்தார்கள். 5எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
காலேப் பிதாவின் வாக்குத்தத்தத்தைப் பெறுகிறான்
6யூதா ஜனங்கள் கில்காலிலிருந்த யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; அப்பொழுது கேனாசியனாகிய எப்புன்னேயின் குமாரன் காலேப் அவனை நோக்கி: “எங்கள் பிதா காதேஸ்பர்னெயாவிலே என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் எங்கள் பிதாவின் மனுஷனாகிய மோசேயோடே சொன்னதை நீர் அறிவீர். 7எங்கள் பிதாவின் ஊழியக்காரனாகிய மோசே தேசத்தை வேவுபார்க்கிறதற்கு என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்பினபோது, நான் நாற்பது வயதாயிருந்தேன்; என் இருதயத்தில் இருந்தபடியே நான் அவனுக்கு மறுஉத்தரவு கொண்டுவந்தேன். 8ஆனாலும் என்னோடேகூட ஏறிப்போன என் உடன்வேவுகாரர் ஜனங்களின் இருதயத்தைப் பயத்தால் கரையப்பண்ணினார்கள்; நானோ என் பிதாவை முழுமையாய்ப் பின்பற்றினேன். 9அந்த நாளிலே மோசே எனக்கு: ‘நீ முழுமையாய் என் பிதாவைப் பின்பற்றினபடியால், நிச்சயமாய் உன் கால் மிதித்த தேசம் உனக்கும் என்றைக்கும் உன் பிள்ளைகளுக்கும் சுதந்தரமாயிருக்கும்’ என்று ஆணையிட்டான்.
10இப்பொழுது, இதோ, இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது எங்கள் பிதா இந்த வார்த்தையை மோசேயோடே சொன்ன காலமுதல், அவர் வாக்குத்தத்தம்பண்ணினபடியே, என்னை நாற்பத்தைந்து வருஷம் உயிரோடே காப்பாற்றினார்; இதோ, நான் இன்று எண்பத்தைந்து வயதுள்ளவனாயிருக்கிறேன். 11மோசே என்னை அனுப்பின நாளில் நான் எவ்வளவு பலமாயிருந்தேனோ, அவ்வளவு பலமாய் இன்றும் இருக்கிறேன்; யுத்தத்திற்கும், போக்குவரத்திற்கும் அப்பொழுது இருந்த என் பெலனே இப்பொழுதும் இருக்கிறது. 12ஆகையால் அந்த நாளிலே எங்கள் பிதா சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; ஏனாக்கீமர் அங்கே பெரிதும் அரணுமான பட்டணங்களோடே இருக்கிறார்கள் என்று அந்நாளிலே நீர் கேள்விப்பட்டீர்; ஒருவேளை எங்கள் பிதா என்னோடேகூட இருப்பார், அப்பொழுது அவர் சொன்னபடியே நான் அவர்களைத் துரத்திவிடுவேன்.”
13அப்பொழுது யோசுவா எப்புன்னேயின் குமாரன் காலேபை ஆசீர்வதித்து, எப்ரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். 14அவன் இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதாவை முழுமையாய்ப் பின்பற்றினபடியால், எப்ரோன் இந்நாள்வரைக்கும் கேனாசியனாகிய எப்புன்னேயின் குமாரன் காலேபுக்குச் சுதந்தரமாயிற்று. 15எப்ரோன் என்னும் ஊருக்கு முன்னே கீரியாத்அர்பா என்று பேராயிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கீமருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான். அதற்குப்பின் தேசம் யுத்தமில்லாமல் அமைதலாயிருந்தது.