ஆழத்தில் யோனா
2 1அப்பொழுது யோனா மீனின் வயிற்றுக்குள்ளிருந்து எங்கள் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணி: 2என் நெருக்கத்திலே நான் என் பிதாவை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதிலளித்தார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து நான் உதவிக்காக அபயமிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். 3நீர் என்னை ஆழத்திலே தள்ளிப்போட்டீர், சமுத்திரங்களின் மையத்திலே, வெள்ளங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; உம்முடைய அலைகளும் திரைகளும் யாவும் என்மேல் புரண்டோடின. 4அப்பொழுது நான்: உம்முடைய கண்களுக்கு முன்பாகவிருந்து நான் தள்ளப்பட்டேன்; ஆயினும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி மறுபடியும் பார்ப்பேன் என்றேன். 5தண்ணீர்கள் மரணமட்டும் என்னைச் சூழ்ந்துகொண்டன; ஆழம் என்னை வளைந்துகொண்டது; கடற்பாசி சுற்றிக்கட்டிக்கொண்டது என் தலையை. 6பர்வதங்களின் அடிவேர்கள்மட்டும் நான் இறங்கினேன்; பூமி தன் கதவுகளை என்பின்னே என்றென்றைக்கும் அடைத்துக்கொண்டது. ஆயினும் நீர் என் ஜீவனைக் குழியிலிருந்து ஏறப்பண்ணினீர், என் பிதாவே. 7என் ஜீவன் என்னைவிட்டு அற்றுப்போகையில், நான் என் பிதாவை நினைத்தேன்; என் ஜெபம் உம்மிடத்தில், உம்முடைய பரிசுத்த ஆலயத்திற்கு ஏறிவந்தது. 8வீணான விக்கிரகங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்குரிதாயிருக்கக்கூடிய அன்பைவிட்டு அகன்றுபோகிறார்கள். 9நானோ பலியிடுவேன், நன்றியுள்ள துதியோடே உமக்கே; நான் நேர்ந்துகொண்ட ஒவ்வொரு பொருத்தனையையும் செலுத்துவேன். இரட்சிப்பு எங்கள் பிதாவினுடையது!
10அப்பொழுது எங்கள் பிதா அந்த மீனுக்குக் கட்டளையிட்டார்; அது யோனாவை உலர்ந்த தரையில் கக்கிப்போட்டது.