திபேரியா கடலருகே
21 1 இவைகளுக்குப் பின்பு இயேசு மறுபடியும் திபேரியா கடலருகே தம்முடைய சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; அவர் தம்மை வெளிப்படுத்தின விதம் இதுவே. 2 சீமோன் பேதுருவும், திதிமு எனப்படும் தோமாவும், கலிலேயாவிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறே இரண்டுபேரும் ஒன்றாய்க் கூடியிருந்தார்கள். 3 சீமோன் பேதுரு அவர்களை நோக்கி: “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றான். அதற்கு அவர்கள்: “நாங்களும் உன்னோடேகூட வருகிறோம்” என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் படவில் ஏறினார்கள்; ஆனாலும் அன்று இராமுழுவதும் ஒன்றையும் பிடிக்கவில்லை.
4 விடியற்காலமானபோது இயேசு கரையிலே நின்றார்; ஆயினும் அவர் இயேசு என்று சீஷர்கள் அறியவில்லை. 5 இயேசு அவர்களை நோக்கி: “பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாவது மீன் உங்களிடத்தில் உண்டா?” என்றார். அதற்கு அவர்கள்: “இல்லை” என்றார்கள்.
6 அப்பொழுது அவர்: “படவின் வலதுபக்கத்தில் வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கிடைக்கும்” என்றார். அவர்கள் வலையைப் போட்டார்கள்; மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதினால் அதை இழுத்தெடுக்க அவர்களால் முடியாதிருந்தது.
7 ஆகையால் இயேசு நேசித்த சீஷன் பேதுருவை நோக்கி: “அவர் கர்த்தர்தான்!” என்றான். சீமோன் பேதுரு அவர் கர்த்தர் என்று கேட்டவுடனே, தான் வேலைக்காக ஆடை களைந்திருந்தபடியால் தன் மேலங்கியை உடுத்திக்கொண்டு கடலில் குதித்தான். 8 மற்ற சீஷர்கள் தரையிலிருந்து சுமார் நூறு கெசம் தூரமே தவிர, அதிக தூரத்திலிருக்கவில்லையாதலால், மீன் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படவில் வந்தார்கள். 9 அவர்கள் கரையிலே இறங்கினபோது, கரிநெருப்பையும், அதின்மேல் வைக்கப்பட்டிருந்த மீனையும், அப்பத்தையும் கண்டார்கள். 10 இயேசு அவர்களை நோக்கி: “நீங்கள் இப்பொழுது பிடித்த மீனில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார். 11 சீமோன் பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்கள் நிறைந்திருந்த வலையைக் கரையிலே இழுத்தான். அவைகள் அவ்வளவு மிகுதியாயிருந்தும் வலை கிழியவில்லை.
12 இயேசு அவர்களை நோக்கி: “வந்து காலை உணவு புசியுங்கள்” என்றார். அவர் கர்த்தர் என்று அறிந்திருந்தபடியால், “நீர் யார்?” என்று சீஷர்களில் ஒருவனும் அவரிடத்தில் கேட்கத் துணியவில்லை. 13 இயேசு வந்து, அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார், மீனையும் அப்படியே கொடுத்தார். 14 இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு தம்முடைய சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினது இது மூன்றாம்முறை.
15 அவர்கள் காலை உணவை முடித்தபின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: “யோவானின் குமாரனாகிய சீமோனே, இவர்களைப் பார்க்கிலும் நீ என்னை உன் முழு இருதயத்தோடும் நேசிக்கிறாயா?” என்றார். அதற்கு அவன்: “ஆம் கர்த்தாவே, நான் உம்மை ஒரு சிநேகிதனாக நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றான். அவர் அவனை நோக்கி: “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார்.
16 இரண்டாம்முறை இயேசு அவனை நோக்கி: “யோவானின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை உன் முழு இருதயத்தோடும் நேசிக்கிறாயா?” என்றார். அதற்கு அவன்: “ஆம் கர்த்தாவே, நான் உம்மை ஒரு சிநேகிதனாக நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றான். அவர் அவனை நோக்கி: “என் ஆடுகளைக் காப்பாற்றுவாயாக” என்றார்.
17 மூன்றாம்முறை இயேசு அவனை நோக்கி: “யோவானின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை ஒரு சிநேகிதனாக நேசிக்கிறாயா?” என்றார். “நீ என்னை ஒரு சிநேகிதனாக நேசிக்கிறாயா?” என்று இயேசு மூன்றாம்முறை தன்னைக் கேட்டதினால் பேதுரு துக்கப்பட்டு, அவரை நோக்கி: “கர்த்தாவே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை ஒரு சிநேகிதனாக நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்” என்றான். இயேசு அவனை நோக்கி: “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார்.
18 “மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ இளவயதாயிருந்தபோது உன்னை நீயே உடுத்திக்கொண்டு, உனக்கு விருப்பமான இடத்திற்குப் போனாய்; ஆனாலும் நீ முதிர்ந்த வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உன்னை உடுத்தி, உனக்கு விருப்பமில்லாத இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவான்” என்றார். 19 (பேதுரு எப்படிப்பட்ட மரணத்தினாலே எங்கள் பிதாவை மகிமைப்படுத்துவான் என்பதைக் குறிக்கும்படி இயேசு இதைச் சொன்னார்.) இதைச் சொன்னபின்பு அவர் அவனை நோக்கி: “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
20 பேதுரு திரும்பிப் பார்த்து, இயேசு நேசித்த சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்; இவனே இராவணத்தில் இயேசுவின் மார்பிலே சாய்ந்து: “கர்த்தாவே, உம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் யார்?” என்று கேட்டவன். 21 பேதுரு இவனைக் கண்டு, இயேசுவை நோக்கி: “கர்த்தாவே, இவன் காரியம் என்ன?” என்றான்.
22 இயேசு அவனை நோக்கி: “நான் வருமட்டும் இவன் இருக்கவேண்டும் என்று நான் விரும்பினால், அதைப்பற்றி உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றி வா” என்றார். 23 ஆகையால் இந்தச் சீஷன் மரிக்கமாட்டான் என்கிற பேச்சு சகோதர சகோதரிகளுக்குள்ளே பரவிற்று. ஆயினும் அவன் மரிக்கமாட்டான் என்று இயேசு சொல்லவில்லை; “நான் வருமட்டும் இவன் இருக்கவேண்டும் என்று நான் விரும்பினால், அதைப்பற்றி உனக்கென்ன?” என்றே சொன்னார்.
24 இந்தக் காரியங்களைக்குறித்துச் சாட்சிகொடுத்து, இவைகளை எழுதியவன் இந்தச் சீஷனே; அவனுடைய சாட்சி உண்மையானது என்று அறிந்திருக்கிறோம். 25 இயேசு செய்த வேறே அநேக காரியங்களும் உண்டு; அவைகளில் ஒவ்வொன்றாய் எழுதப்படுமானால், எழுதப்படும் புத்தகங்களை உலகமும் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.