முள்முடி சூட்டி பரிகாசம் செய்தல்
19 1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து, அவரை வாரினால் அடிக்கச் செய்தான். 2 போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். 3 அவர்கள் அவரிடத்தில் திரும்பத்திரும்ப வந்து, “யூதருடைய ராஜாவே, வாழ்க!” என்று சொல்லி, அவரைக் கையினால் அறைந்தார்கள்.
4 பிலாத்து மறுபடியும் வெளியே வந்து, அவர்களை நோக்கி, “இதோ, நான் இவனிடத்தில் யாதொரு குற்றமும் காணவில்லை என்பதை நீங்கள் அறியும்படி, இவனை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்” என்றான். 5 அப்பொழுது இயேசு, முள்முடியையும் சிவப்பான அங்கியையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களை நோக்கி, “இதோ, இந்த மனுஷன்!” என்றான்.
6 பிரதான ஆசாரியரும் காவலாளரும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். பிலாத்து அவர்களை நோக்கி, “நீங்களே இவனைப் பிடித்துச் சிலுவையில் அறையுங்கள்; நான் இவனிடத்தில் யாதொரு குற்றமும் காணவில்லை” என்றான்.
7 யூதர் அவனுக்கு மறுமொழியாக, “எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு; இவன் தன்னை எங்கள் பிதாவின் குமாரன் என்று சொல்லிக்கொண்டதினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படி இவன் சாகவேண்டும்” என்றார்கள்.
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபோது, அதிகமாய்ப் பயந்தான். 9 அவன் மறுபடியும் அரமனைக்குள் போய், இயேசுவை நோக்கி, “நீ எங்கேயிருந்து வந்தவன்?” என்றான். ஆனாலும் இயேசு அவனுக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. 10 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, “என்னோடே பேசமாட்டாயா? உன்னை விடுதலையாக்க எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும் நீ அறியாயா?” என்றான்.
11 இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பரத்திலிருந்து உனக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உனக்கு ஒரு அதிகாரமும் இராது. ஆகையால் என்னை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு” என்றார்.
12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலையாக்க வகைதேடினான்; ஆனாலும் யூதர், “இந்த மனுஷனை நீ விடுதலையாக்கினால் நீ இராயனுக்கு நண்பன் அல்ல; தன்னை ராஜா என்று சொல்லுகிற எவனும் இராயனுக்கு விரோதி” என்று சத்தமிட்டார்கள்.
13 பிலாத்து இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, இயேசுவை வெளியே கொண்டுவந்து, கற்தளம் என்னப்பட்ட இடத்தில் நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்; அது அரமிய மொழியிலே கபாதா என்னப்படும். 14 அது பஸ்காவுக்கு ஆயத்தநாளாயும், ஏறக்குறைய நண்பகல் வேளையாயும் இருந்தது. அப்பொழுது அவன் யூதரை நோக்கி, “இதோ, உங்கள் ராஜா!” என்றான்.
15 அவர்கள், “அகற்றும்! அகற்றும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். பிலாத்து அவர்களை நோக்கி, “உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையவா?” என்றான். அதற்குப் பிரதான ஆசாரியர், “இராயனைத் தவிர எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என்றார்கள்.
ஒப்புக்கொடுக்கப்படுதல்
16 அப்பொழுது அவன் அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். 17 அவர் தமது சிலுவையைச் சுமந்துகொண்டு, மண்டையோட்டின் இடம் என்னப்பட்ட இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்; அது அரமிய மொழியிலே கொல்கொதா என்னப்படும். 18 அங்கே அவர்கள் அவரையும், அவரோடேகூட வேறே இரண்டுபேரையும், ஒருபுறத்தில் ஒருவனும் மறுபுறத்தில் ஒருவனுமாக, நடுவில் இயேசுவையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 19 பிலாத்து ஒரு மேற்பொறிப்பையும் எழுதி, சிலுவையின்மேல் வைத்தான். அதில், “நசரேயனாகிய இயேசு, யூதருடைய ராஜா” என்று எழுதியிருந்தது. 20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியால், யூதரில் அநேகர் இந்த மேற்பொறிப்பை வாசித்தார்கள்; அது அரமிய, லத்தீன், கிரேக்கு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 21 அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி, “யூதருடைய ராஜா என்று எழுதவேண்டாம்; ‘நான் யூதருடைய ராஜா’ என்று இவன் சொன்னதாக எழுதும்” என்றார்கள்.
22 பிலாத்து மறுமொழியாக, “நான் எழுதினது எழுதினதே” என்றான்.
23 போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; உள்ளங்கியையும் எடுத்தார்கள். அந்த உள்ளங்கி தையல் இல்லாமல் மேலிருந்து கீழ்வரைக்கும் முழுவதும் நெய்யப்பட்டிருந்தது. 24 ஆகையால் அவர்கள் ஒருவரோடொருவர், “இதைக் கிழிக்காமல், இது யாருக்கு வருமென்று இதற்காகச் சீட்டுப்போடுவோம்” என்று சொல்லிக்கொண்டார்கள். “என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள்” என்று சொல்லுகிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. அந்தப்படியே போர்ச்சேவகர் செய்தார்கள்.
25 இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயாரும், அவருடைய தாயாரின் சகோதரியும், கிலெயோப்பாவின் மனைவியாகிய மரியாளும், மகதலேனாளாகிய மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 இயேசு தம்முடைய தாயாரும், தாம் நேசித்த சீஷனும் அருகே நிற்கிறதைக் கண்டு, தம்முடைய தாயாரை நோக்கி, “ஸ்திரீயே, இதோ, உன் மகன்” என்றார். 27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி, “இதோ, உன் தாயார்” என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன் சொந்த வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.
முடிந்தது
28 இதன்பின்பு, எல்லாம் இப்பொழுது முடிந்ததை இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறும்படி, “தாகமாயிருக்கிறேன்” என்றார். 29 காடி நிறைந்த ஒரு பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் ஒரு கடல்நுரையைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத் தண்டின்மேல் வைத்து, அவருடைய வாயினிடத்தில் நீட்டிப்பிடித்தார்கள். 30 இயேசு காடியை வாங்கினபின்பு, “முடிந்தது” என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
31 அது ஆயத்தநாளாயிருந்தபடியால், அந்த ஓய்வுநாளில் சரீரங்கள் சிலுவைகளில் இருக்கக்கூடாதென்று யூதர் விரும்பினார்கள் — ஏனெனில் அந்த ஓய்வுநாள் பெரிய நாளாயிருந்தது — ஆகையால் அவர்களுடைய கால்களை முறித்துச் சரீரங்களை எடுத்துப்போடும்படி பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள். 32 அப்படியே போர்ச்சேவகர் வந்து, முந்தினவனுடைய கால்களையும், அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்ட மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். 33 இயேசுவினிடத்தில் அவர்கள் வந்து, அவர் ஏற்கெனவே மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34 ஆனாலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினால் அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. 35 இதைக் கண்டவன் சாட்சிகொடுத்திருக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது; நீங்களும் விசுவாசிக்கும்படி, தான் சொல்வது சத்தியம் என்று அவன் அறிந்திருக்கிறான். 36 “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்னும் வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37 மேலும், “தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள்” என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
யோசேப்பும் நிக்கொதேமுவும்
38 இவைகளுக்குப்பின்பு, இயேசுவின் சீஷனாயிருந்தும் யூதருக்குப் பயந்ததினால் அதை மறைவாய் வைத்திருந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொள்ளும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான். பிலாத்து உத்தரவு கொடுத்தான்; ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். 39 முதலில் இராத்திரியிலே இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமும், ஏறக்குறைய எழுபத்தைந்து இராத்தல் நிறையுள்ள வெள்ளைப்போளமும் அகிலும் கலந்த கலவையைக் கொண்டுவந்தான். 40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர் அடக்கம்பண்ணும் முறைமையின்படி, அதை நறுமணப்பொருள்களோடே சீலைகளில் சுற்றினார்கள். 41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருவரும் ஒருபோதும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42 அது யூதருடைய ஆயத்தநாளாயிருந்தபடியாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியாலும், அவர்கள் இயேசுவை அங்கே வைத்தார்கள்.