சூகியனாகிய பில்தாத் மறுமொழி கூறுகிறான்
8 1அப்பொழுது சூகியனாகிய பில்தாத் மறுமொழியாக: 2"இப்படிப்பட்டவைகளை நீ எதுவரைக்கும் பேசிக்கொண்டிருப்பாய்? உன் வாயின் வார்த்தைகள் அழற்றும் காற்றைத் தவிர வேறொன்றுமல்ல. 3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? 4உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தால், அவர்களுடைய மீறுதலின் விளைவுக்கு அவர்களை ஒப்புக்கொடுத்தார். 5ஆனாலும் நீ தேவனை ஊக்கமாய்த் தேடி, சர்வவல்லவரிடத்தில் இரக்கத்திற்காக மன்றாடினால், 6நீ சுத்தமும் செம்மையுமுள்ளவனாயிருந்தால், நிச்சயமாய் அவர் இப்பொழுது உனக்காக எழும்பி, உன் உரிமையான இடத்திற்கு உன்னைத் திரும்பச்சேர்ப்பார். 7உன் துவக்கம் சிறியதாயிருந்தாலும், உன் பிற்காலம் அளவில்லாமல் செழிக்கும். 8கடந்துபோன தலைமுறைகளிடத்தில் கேள்; அவர்களுடைய முன்னோர்கள் ஆராய்ந்து அறிந்ததைச் சிந்தித்துப்பார். 9ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியிலே நம்முடைய நாட்கள் ஒரு நிழலைப்போலவே இருக்கின்றன. 10அவர்கள் உனக்குப் போதித்து, உனக்குச் சொல்லி, தங்கள் உணர்விலிருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தமாட்டார்களோ? 11சேறில்லாத இடத்தில் நாணல் உயர்ந்து வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் செழிக்குமோ? 12அது இன்னும் பச்சையாய், அறுக்கப்படாதிருக்கும்போதே, எந்தப் புல்லைப்பார்க்கிலும் விரைவாய் வாடிப்போகும். 13தேவனை மறக்கிற யாவருடைய முடிவும் இப்படியே; தேவபக்தியில்லாதவனுடைய நம்பிக்கை இப்படியே அழிந்துபோகும். 14அவனுடைய நம்பிக்கை நொறுங்குகிறது; அவனுடைய ஆதரவு சிலந்தியின் வலைபோலிருக்கிறது. 15அவன் தன் வீட்டைச் சார்ந்துகொள்கிறான், ஆனாலும் அது நிற்காது; அதைப் பற்றிப்பிடிக்கிறான், ஆனாலும் அது நிலைக்காது. 16அவன் வெயிலிலே நன்றாய் நீர்பாய்ச்சப்பட்ட செடியைப்போலிருக்கிறான்; அதின் தளிர்கள் தோட்டமெங்கும் படருகின்றன. 17அதின் வேர்கள் கற்குவியலைச் சுற்றிப்பின்னி, பாறைகளுக்கிடையில் பிடிப்பதற்கு ஓரிடத்தைத் தேடுகின்றன. 18ஆனால் அவன் தன் இடத்திலிருந்து பிடுங்கப்படும்போது, அந்த இடம், ‘நான் உன்னை ஒருபோதும் கண்டதில்லை’ என்று சொல்லி அவனை மறுதலிக்கிறது. 19இதுவே அவனுடைய வழியின் மகிழ்ச்சி— அவன் இடத்திலே மண்ணிலிருந்து மற்றவர்கள் முளைத்தெழும்புகிறார்கள். 20தேவன் உத்தமனை புறக்கணிக்கமாட்டார்; தீமைசெய்கிறவர்களுக்குக் கைகொடுக்கவுமாட்டார். 21அவர் இன்னும் உன் வாயை நகைப்பினால் நிரப்புவார், உன் உதடுகளை ஆனந்த சத்தத்தினால் நிரப்புவார். 22உன்னைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் இனி இராது."