காட்டுக்கழுதையை விடுதலையாக்கினவர் யார்?
39 1“மலையாடுகள் குட்டிபோடும் காலம் உனக்குத் தெரியுமா? பெண்மான்கள் ஈனும்போது நீ கவனித்திருக்கிறாயா? 2அவை சினையாயிருக்கும் மாதங்களை நீ எண்ணமுடியுமா? அவை ஈனும் காலத்தை நீ அறிவாயா? 3அவை முடங்கிக் குட்டிபோடுகின்றன; தங்கள் வேதனைகளைத் தீர்த்துக்கொள்கின்றன. 4அவற்றின் குட்டிகள் வெளியில் வளர்ந்து பலம்பெறுகின்றன; அவை போய்விட்டுத் திரும்பி வருவதில்லை.
5“காட்டுக்கழுதையை விடுதலையாக விட்டவர் யார்? விரைந்தோடும் கழுதையின் கயிறுகளை அவிழ்த்தவர் யார்? 6நான் வனாந்தரத்தை அதற்கு வீடாகவும், உவர்நிலத்தை அதற்கு உறைவிடமாகவும் கொடுத்தேனே. 7அது நகரத்தின் இரைச்சலை அலட்சியம் செய்கிறது, ஓட்டுகிறவனின் கூக்குரலை அது ஒருபோதும் கேட்பதில்லை. 8அது தன் மேய்ச்சலுக்காக மலைகளில் சுற்றித்திரிந்து, பசுமையான ஒவ்வொன்றையும் தேடுகிறது.
9“காட்டெருது உனக்குப் பணிசெய்ய மனமுள்ளதா? அது உன் தீவனத் தொட்டியண்டையில் இரவு தங்குமா? 10நீ காட்டெருதைக் கயிறுகளால் உழவுசாலில் கட்டமுடியுமா? அது உன் பின்னே பள்ளத்தாக்குகளை உழுமா? 11அதின் பலம் மிகுதியாயிருப்பதால் நீ அதை நம்புவாயா? உன் வேலையை அதனிடம் ஒப்படைப்பாயா? 12அது உன் தானியத்தைத் திரும்பக் கொண்டுவந்து, உன் களத்தில் சேர்க்கும் என்று நீ நம்பமுடியுமா?
13“தீக்கோழியின் இறக்கைகள் மகிழ்ச்சியுடன் அடித்துக்கொள்கின்றன, ஆனால் அவை நாரையின் இறகுகளும் சிறகுகளும் ஆகுமா? 14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டுவிட்டு, மண்ணிலே அவை அனலேறச் செய்து, 15கால் அவற்றை நசுக்கிவிடலாம் என்பதையும், காட்டுமிருகம் அவற்றை மிதித்துவிடலாம் என்பதையும் மறந்துவிடுகிறது. 16அது தன் குட்டிகள் தன்னுடையவை அல்லாததுபோல அவற்றைக் கடினமாய் நடத்துகிறது; தன் பிரயாசம் வீணாய்ப் போனாலும் அதற்குப் பயமில்லை, 17ஏனெனில் நான் அதை ஞானத்தை மறக்கச்செய்தேன், விவேகத்தில் அதற்குப் பங்கு கொடுக்கவில்லை. 18ஆயினும் அது எழும்பி ஓடும்போது, குதிரையையும் அதன்மேல் ஏறியிருக்கிறவனையும் பார்த்து நகைக்கிறது.
19“குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுத்தாயா? அதின் கழுத்தை அசைந்தாடும் பிடரிமயிரால் மூடினாயா? 20வெட்டுக்கிளியைப்போல அதைத் தாவச்செய்வாயா? அதின் கம்பீரமான மூச்சொலி பயங்கரத்தை உண்டாக்குகிறது. 21அது பள்ளத்தாக்கிலே காலால் பறித்து, தன் பலத்தில் களிகூர்ந்து; போருக்குள் பாய்ந்து செல்கிறது. 22அது பயத்தைப் பார்த்து நகைக்கிறது, திகிலடைவதில்லை; பட்டயத்துக்கு அது பின்வாங்குவதில்லை. 23அம்பறாத்தூணி அதின்மேல் கலகலக்கிறது, மின்னும் ஈட்டியும் வேலும் அப்படியே. 24கடுங்கோபமும் ஆவேசமுமாய் அது தரையை விழுங்குகிறது; எக்காளம் முழங்கும்போது அது அமைதியாய் நிற்பதில்லை. 25எக்காளம் தொனிக்கும்போது அது ‘ஆ!’ என்று சொல்லி, தூரத்திலிருந்தே யுத்தத்தை மோப்பம்பிடிக்கிறது, சேனாபதிகளின் முழக்கத்தையும் போர்க்கூக்குரலையும் அறிகிறது.
26“உன் விவேகத்தினாலேயா பருந்து பறந்து, தன் இறக்கைகளைத் தெற்கு நோக்கி விரிக்கிறது? 27உன் கட்டளையினாலேயா கழுகு உயரப் பறந்து, உன்னதத்தில் தன் கூட்டைக் கட்டுகிறது? 28அது கன்மலையில் வாசம்பண்ணி, அங்கே தங்கியிருக்கிறது, பாறையின் உச்சியில், தன் அரணிலே. 29அங்கிருந்து அது தன் இரையைத் தேடுகிறது; அதின் கண்கள் தூரத்திலிருந்தே அதைப் பார்க்கின்றன. 30அதின் குஞ்சுகள் இரத்தத்தைப் பருகுகின்றன, வெட்டுண்டவர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே அது இருக்கிறது.”