எலிகூ மறுபடியும் பேசுகிறான்
35 1பின்னும் எலிகூ தொடர்ந்து சொன்னதாவது: 2"இது நியாயமென்று நினைக்கிறாயா? ‘தேவனுடைய நீதியைப் பார்க்கிலும் என் நீதி மிகுதியானது’ என்று நீ சொல்லுகிறாய். 3‘அதினால் உனக்கு என்ன பயன்? நான் பாவம் செய்யாதிருந்தால் எனக்கு என்ன லாபம்?’ என்று நீ கேட்கிறாய். 4நான் உனக்கும், உன்னோடிருக்கிற உன் நண்பர்களுக்கும் மறுஉத்தரவு சொல்லுவேன். 5வானங்களை அண்ணாந்து பார்; உன்னிலும் உயரமான மேகங்களை நோக்கிப் பார். 6நீ பாவம் செய்தால், அவருக்கு விரோதமாய் என்ன சாதிக்கிறாய்? உன் மீறுதல்கள் மிகுதியாயிருந்தால், அவருக்கு நீ என்ன செய்கிறாய்? 7நீ நீதிமானாயிருந்தால், அவருக்கு என்ன கொடுக்கிறாய்? அல்லது உன் கையிலிருந்து அவர் என்ன பெற்றுக்கொள்ளுகிறார்? 8உன் அக்கிரமம் உன்னைப்போன்ற ஒரு மனிதனையே பாதிக்கிறது, உன் நீதியோ ஒரு உடன்மனிதனையே பாதிக்கிறது. 9அநேக ஒடுக்குதல்களின் பாரத்தினால் மனுஷர் கூக்குரலிடுகிறார்கள்; பலவான்களின் புயத்திற்கு விரோதமாய் உதவிக்காக அபயமிடுகிறார்கள். 10ஆனாலும், ‘இரவிலே கீதங்களைத் தந்து, என்னை உண்டாக்கின தேவன் எங்கே? 11பூமியின் மிருகங்களைப் பார்க்கிலும் அதிகமாய் நமக்குப் போதித்து, ஆகாயத்துப் பறவைகளைப் பார்க்கிலும் நம்மை ஞானிகளாக்குகிறவர் எங்கே?’ என்று ஒருவனும் சொல்லுகிறதில்லை. 12அங்கே அவர்கள் கூக்குரலிட்டும், அவர் மறுஉத்தரவு அருளுகிறதில்லை, தீயவர்களின் அகந்தையினிமித்தமே. 13வீணான கூக்குரலை நிச்சயமாய் தேவன் கேளார்; சர்வவல்லவர் அதைக் கவனியார். 14அப்படியிருக்க, நீ அவரைக் காணேன் என்று சொல்லும்போது அவர் எத்தனை அதிகமாய் மறுஉத்தரவு அருளாதிருப்பார்; ஆயினும் உன் வழக்கு அவருக்கு முன்பாக இருக்கிறது, நீ அவருக்குக் காத்திருக்கவேண்டும். 15இப்போதோ, அவருடைய கோபம் இன்னும் தண்டியாதபடியாலும், அவர் மதிகேட்டைச் சிறிதும் கவனியாதபடியாலும், 16யோபு வீணான பேச்சினால் தன் வாயைத் திறக்கிறான்; அறிவில்லாமல் வார்த்தைகளைப் பெருக்குகிறான்."